பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்
- டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார்.
- இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இதுவே முதல் பதக்கம் ஆகும்
இந்திய கடலோரக் காவல் படை ரோந்து கப்பல் 'விக்ரஹா' நாட்டுக்கு அர்ப்பணிப்பு
- கடலோரக் காவல் படைக்காக `எல் அண்ட் டி' நிறுவனத்திடம் இருந்து 7 ரோந்துக் கப்பல்கள் வாங்க கடந்த 2015-ல் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஏற்கெனவே 6 கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- இந்நிலையில், 7-வது ரோந்துக் கப்பலான 'ஐசிஜி விக்ரஹா' கடலோரக் காவல் படையிடம் வழங்கப்பட்டுள்ளது. இதை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. கடலோரக் காவல் படை இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் `விக்ரஹா' கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- விக்ரஹா ரோந்துக் கப்பல் 98 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் உடையது. எடை 2,200 டன். மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் செல்லும் திறன் உடையது.
- இதில், ஒரு 40/60 போஃபர்ஸ் துப்பாக்கி, 12.7 மி.மீ. ரக துப்பாக்கிகள் மற்றும் இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி, 4 அதிவிரைவுப் படகுகளை சுமந்து செல்லும் வசதி உள்ளது.
- இதுதவிர, நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், வழிகாட்டும் கருவிகள், எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் மாசுக்களை தடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கமாண்டன்ட் அனூப் தலைமையில் இயங்கும் இந்த ரோந்துக் கப்பலில், 11 அதிகாரிகளும், 110 சிப்பந்திகளும் பணிபுரிவர்.
ஒரே நாடு, ஒரே நம்பர் பிளேட் புதிய பாரத் சீரிஸ் வாகன பதிவு முறை அறிமுகம்
- பணியிட மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் தனி நபர்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடிபெயரும் போது, அவர்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை குடிபெயரும் மாநிலத்தில் 12 மாதத்திற்குள் மறுபதிவு செய்ய வேண்டும்.
- இனிமேல், இப்படிப்பட்ட அலைச்சலோ, அவஸ்தையோ இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், இதுபோன்ற சிக்கல்களை தடுப்பதற்காக, 'பாரத் சீரிஸ்' (BH) எனும் புதிய பதிவு நடைமுறையை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
- இனிமேல், புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே இந்த புதிய பதிவு நடைமுறை பொருந்தும். அதுவும், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 4 பிரிவு சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். சாதாரண மக்களுக்கு பொருந்தாது.
- இந்த புதிவு நடைமுறையை பயன்படுத்தும் தகுதி பெற்றவர்கள் ராணுவ வீரர்கள், ஒன்றிய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் 4-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் கிளைகள் கொண்ட தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள்.
கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு
- கீழடியில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கீறல்களை கொண்ட பானை ஓடுகள் கீழடியில் மட்டும் இதுவரை 1,300க்கும் மேற்பட்டவைகள் ஏழு கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
- தற்போது ஏழாம் கட்ட அகழாய்வில் அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் அதிகபட்ச எழுத்துகளை கொண்ட பானை ஓடு இதுதான் என கூறப்படுகிறது.
நாட்டின் முதல் ஆயுஷ் பல்கலை.க்கு ஜனாதிபதி அடிக்கல்
- உத்தர பிரேதச மாநிலம் கோரக்பூரில் துவங்கப்பட இருக்கும் நாட்டின் முதல் ஆயுஷ் பல்கலைக் கழகமான மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் விஷ்வ வித்யாலயாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.
காசநோய் தடுப்பு கூட்டுக்குழு தலைவராக மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்பு
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காசநோய் தடுப்பு கூட்டுக் குழுவின் (“Stop TB Partnership Board”) தலைவராக ஆகஸ்ட் 26-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். 2024ஆம் ஆண்டு வரை அவர் இந்தப் பொறுப்பை வகிப்பார்.
- 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்தம் - ரூ.170 கோடி முதலீடு செய்கிறது உத்தரப் பிரதேச அரசு
- இந்தியாவில் மல்யுத்த விளையாட்டை மேலும் மேம்படுத்தும் வகையில் 2032-ஆம் ஆண்டு வரை ரூ.170 கோடியை உத்தர பிரதேச மாநில அரசு முதலீடு செய்ய உள்ளது என "இந்திய மல்யுத்த சங்கத் தலைவர்” பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார்.