மணிப்பூர் மாநில புதிய ஆளுநராக இல.கணேசன் நியமனம்
- மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார். தஞ்சையை சேர்ந்த இல.கணேசன் தமிழ்நாடு பாஜக தலைவராகவும் இருந்துள்ளார்.
- சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது புதிய ஆளுநராக இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
குவாட் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி
- இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து 'குவாட்' கூட்டணியை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. சீனாவின் ராணுவ ஆதிக்கத்துக்கு எதிராக இவை இணைந்துள்ளன.
- இந்த நான்கு நாடுகளும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தி வரும் கூட்டு கடற்படை பயிற்சியான, 'மலபார் பயிற்சி' வரும் 26ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- பிலிப்பைன்ஸ் கடலின் குவாம் கடற்கரை பகுதியில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, இந்திய கடற்படைக்கு சொந்தமான பீரங்கி தாங்கி போர்கப்பலான ஐஎன்எஸ் ஷிவாலிக், நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் காத்மாட் ஆகியவை குவாம் கடற்கரையை சென்றடைந்தன.
- மலபார் பயிற்சியின்போது, போர்க் கப்பல்களை தாக்கி அழித்தல், நீர்மூழ்கி கப்பல்கள், நீண்ட தூர கடல் ரோந்து விமானங்கள் உள்ளிட்டவை அதிவேக பயிற்சிகள் செய்து பார்க்கப்படும். குவாட் அமைப்பில் இணைந்துள்ள ஆஸ்திரேலியா கடந்த ஆண்டுதான் முதல் முறையாக மலபார் பயிற்சியில் இணைந்தது.
உலக யு20 தடகளம் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஷைலி சிங்
- கென்யா தலைநகர் நைரோபியில் நேற்று நடைபெற்ற பைனலில் அபாரமாக செயல்பட்ட ஷைலி (17 வயது) 6.59 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்தார்.
- ஸ்வீடனின் மஜா அஸ்காக் (6.60 மீ.) தங்கப் பதக்கமும், உக்ரைன் வீராங்கனை மரியா ஹோரிலோவா (6.50 மீ.) வெண்கலமும் வென்றனர். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கம் இது.
- உத்தரப்பிரதேசம் ஜான்சியை சேர்ந்த ஷைலி வெறும் 1 செ.மீட்டரில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.