சமையல் எண்ணெய் திட்டத்துக்கு ரூ.11,040 கோடி நிதி
- நம் நாட்டில் ஆண்டுக்கு 2.4 கோடி டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
- கடந்த 2019ம் ஆண்டில் 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 கோடி டன் சமையல் எண்ணெய், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
- இந்தோனேஷியா, மலேஷியாவில் இருந்து பாமாயிலும், பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து சோயா எண்ணெயும், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த இறக்குமதியில் பாமாயிலின் அளவு 55 சதவீதமாக உள்ளது.
- இதையடுத்து உள்நாட்டிலேயே பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதையொட்டி சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
- இத்திட்டத்தின் கீழ், பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்து, பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டத்துக்கு, 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் பாமாயிலின் உள்நாட்டு உற்பத்தியை, 2025 - 26க்குள், 11 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை பெண்களும் எழுத அனுமதிக்கலாம் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
- தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது.
- இந்த தேர்வு ஆண்களுக்கு மட்டுமே என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதனால் என்டிஏ-வில் ஆண்கள் மட்டுமே சேர்ந்து படிக்க முடியும். இது பாது காப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு தெரிவித்திருந்து.
- இதனிடையே, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு எதிராக குஷ் கால்ரா என்பவர் பொது நல வழக்கை (பிஐஎல்) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார். என்டிஏ தேர்வில் பெண்களும் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
- இந்நிலையில் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
- தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வை பெண்களும் எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்திய ஹாக்கி அணிகளுக்கு அடுத்த 10 ஆண்டுக்கு ஒடிஷா அரசு ஸ்பான்சர்
- ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளுக்கு ஒடிஷா அரசு சார்பில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது. வீரர், வீராங்கனைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
- இரு அணிகளுக்கும் தலா ரூ.10 லட்சம், பயிற்சி அலுவலர்களுக்கு தலா ரூ.5 லட்சம், ஹாக்கி இந்தியா அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கினார்.
- இந்திய ஹாக்கி அணிகளின் முக்கிய ஸ்பான்சராக ஒடிஷா மாநில அரசு உள்ளது. ஏற்கனவே 2018 பிப்ரவரி முதல் ஹாக்கி இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
- அதன் மதிப்பு ரூ.140 கோடி. அந்த ஒப்பந்தம் 2023 ஜனவரியுடன் முடிகிறது. இந்நிலையில் அந்த ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகளுக்கு 2033ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு
- ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1962-ம் ஆண்டு, நாட்டின் குடியரசுத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோதுதான், முதல் முறையாக நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட ஆரம்பித்தது.
- ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளில், நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- அதன்படி, நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இருந்து திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து ஓர் ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.