ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ரூ. 8 ஆயிரம் கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்
- நாடு முழுவதும் 23 கோடியே 63 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களில் 21 கோடியே 92 லட்சம் பேர், அதாவது, 92.8% பேர் தங்களது ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.
- 2020-2021 இடைப்பட்ட காலங்களில் மத்திய அரசின் "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி தமிழ்நாட்டிற்கு 8 ஆயிரத்து 843 கோடி ரூபாய் அளவுக்கு வெளிசந்தைகள் மூலம் கூடுதல் கடன் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- மொத்தமாக 17 மாநிலங்களுக்கு 37 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வெளிசந்தையில் இந்த திட்டத்துக்காக கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்
- நம் அண்டை நாடான சீனாவில் மின்காந்த சக்தியால் இயங்கும் 'மேக்லேவ்' என்ற அதிவேக ரயிலை, 'சி.ஆர்.ஆர்.சி., ஜூஜோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிடட்' என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஷாண்டோங் மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள குவிங்டாவ் நகரத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் என்ற பெருமையை இந்த மேக்லேவ் ரயில் பெற்றுள்ளது.
ரஷிய ஏவுகணை சோதனை வெற்றி
- தரையிலிருந்து நீண்ட தூர வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான அதிவேக எஸ் 500 வகை ஏவுகணை செவ்வாய்க்கிழமை சோதனை செய்யப்பட்டது. இதில் ஏவுகணை திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
- ப்ரோமிதியஸ் என்று அழைக்கப்படும் எஸ் -500 அமைப்பு, கப்பல் ஏவுகணைகளையும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் அழிக்கும் திறன் கொண்டது. மேலும் சுமார் 600 கிமீ (373 மைல்) இலக்கை இடைமறித்து தாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை
- இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான, ஐ.ஓ.சி., எனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், நாட்டின் முதல், 'பசுமை ஹைட்ரஜன்' ஆலையை, அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கிறது.
- புதை படிவ எரிபொருட்களுக்கு பதிலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள், 'பசுமை ஹைட்ரஜன்' என அழைக்கப்படுகிறது.
தொழிற்படிப்புகளில் உள்இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார் நீதிபதி முருகேசன்
- 2020-21ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
- அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
- இதுகுறித்துக் குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார்.
- இதனையடுத்து ஒரு மாத காலம் ஆய்வு மேற்கொண்ட நீதியரசர் முருகேசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைக் காக்க பிங்க் பாதுகாப்பு திட்டம் - கேரள அரசு தொடக்கம்
- கேரளாவில் கரோனா ஊரடங்கு காலம் தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
- இதனையடுத்து மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு, உரிமை, இணைய சுதந்திரம் ஆகியனவற்றை பாதுகாக்கும் வகையில் "Pink Protection" பிங்க் ப்ரொடக்சன் என்ற திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்துள்ளார்.
- இதற்காக 10 கார்கள், 40 இருச்சக்கர வாகனங்கள், மற்றும் 20 சைக்கிள்களை போலீஸாருக்கு முதல்வர் ஒதுக்கினார். இந்த சிறப்புப் படை இந்த வாகனங்களில் ரோந்து மேற்கொள்ளும்.
- பெண்கள் தைரியமாக, பிங்க் ப்ரொடக்சன் ரோந்து காவலர்களிடம் தங்களின் இன்னல்களைத் தெரிவிக்கலாம். வரதட்சனைப் புகார், இணையம் மூலமாக விரியும் ஆபத்து ஆகியனவற்றிலிருந்து இந்தக் குழு பெண்களைக் காக்கும்.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி இணையதளம் 2.0-ஐ துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (20.7.2021), தொழில்துறை சார்பில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" என்ற ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களாக, 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் போது, தமிழக முதல்வர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ துவக்கி வைத்தார்.
- தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் புரிதலுக்குத் தேவையான நூறு சேவைகள் இந்த இணையதளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
- இந்த டிஜிட்டல் ஆக்ஸலேட்டர் திட்டம் மூலம், தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகப் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாடு அரசு இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மானியத்திற்காக ஏறக்குறைய 75 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அனுமதி உத்தரவுகளை, முதல்வர் ஸ்டாலின், ஐந்து நிறுவனங்களுக்கு வழங்கினார்
- மேலும், உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான இயந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு திறன்மிகு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் டிட்கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
- 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
- இந்த முதலீடுகள், மின் ஆலைகள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.