ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ரஷ்யாவின் சிர்கான் ஏவுகணை சோதனை வெற்றி
- நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்யா அரசு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் ஹைபர்சோனிக் ஏவுகணைகளே நாட்டின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருக்கக் கூடும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் முன்னர் தெரிவித்திருந்தார். அதன்படி, சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிய ரஷ்யா, அதனை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை அழிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த அதிநவீன ஏவுகணையை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
- ஆர்க்டிக்கில் உள்ள வெண்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து சிர்கான் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளது.
- 350 கிலோ மீட்டர் வரை சென்ற ஏவுகணை, அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் சென்று இலக்கை தாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
33 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொழிற்துறை என்பது முக்கிய பங்காற்றுகிறது. தொழில்துறை வளர்ச்சி அடைந்ததால் அம்மாநிலம் சிறப்பாக இயங்கக்கூடும்.
- அதாவது தொழில்துறை வளர்ச்சி என்பது அதிகப்படியான தொழிற்சாலைகள் மாநிலத்தில் உருவாகும் போது மக்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
- அப்படி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் போது பொருளாதார நிலையில் அந்த மாநிலம் உயரத்தை அடையும். இந்நிலையில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
- ரூ.17,297 கோடி முதலீட்டில் 54,041 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சென்னை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜ்ய சபை துணை தலைவராக நியமனம்
- கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. இதில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் மத்திலா குரு மூர்த்தி, பாஜக எம்.பி. மங்கள் சுரேஷ் அங்காடி, ஐ.யூ.எம்.எல் எம்.பி. அப்துஸ்சமத் சமதன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
- இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் மற்றும் பாஜக எம்.பி.யான முக்தர் அப்பாஸ் நக்வி ராஜ்ய சபை துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
2,500 ஆண்டு பழமையான 4 பானைகள் கண்டுபிடிப்பு
- தமிழகத்தில் மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லுார், கொடுமணல், மணலுார் என, 10 இடங்களில் தற்போது அகழாய்வு பணிகள் நடக்கின்றன.
- கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல், தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
- புதிய கற்காலம்மலையின் கீழ், 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. 1980 மற்றும் 2003ல் நடந்த ஆய்வுகளில், அவை புதிய கற்காலத்தை சேர்ந்தவை என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- கடந்த மூன்று மாத ஆய்வில், ஏற்கனவே பெருங்கற்காலத்தை சேர்ந்த 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், தற்போது அதே பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் விலை - ஒரே ஆண்டில் கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடி
- பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .19.98 லிருந்து ரூ .32.90 ஆக உயர்த்தப்பட்டது. அதேசமயம் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.15.83 லிருந்து ரூ .11.8 ஆக உயர்த்தப்பட்டது.
- எண்ணெய் மீதான விலை அதிகரிப்பு காரணமாக, 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக இருந்தது என்று மத்திய அமைச்சர் கூறினார். இது 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு வசூல் ஆகும்.
- 2019-20ல் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைத்த கலால் வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது.