பத்ம விருதுகளுக்கு மக்களே பரிந்துரைக்கலாம் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு
- நாட்டின் உயரிய விருதுகளான, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஶ்ரீ ஆகிய பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு,,மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், சிறப்பாக செயலாற்றியவர்கள், மகத்தான சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு அவர்களது தொண்டைப் பாராட்டி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- இனம், தொழில், பதவி, பாலினம் ஆகிய வேறுபாடின்றி அனைவரும் இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருதுகளைப் பெற தகுதி இல்லை என்ற நிலை இருந்தது.
- ஆனால் பத்ம விருதுகளை '' மக்கள் பத்ம'' விருதுகளாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், இந்த விருதுகளுக்காக சுய நியமனம் உள்பட நியமனங்கள்/ பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரயில் பயணத்தில் இயற்கையை ரசிக்க உதவும் விஸ்டாடோம் பெட்டிகள்
- சுற்றுலாப் பயணிகளைக் கவா்வதற்காக இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மலை ரயில்களை இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல், மலைப் பிரதேசங்களில் ரயில் பயணிக்கும்போது பயணிகள் இயற்கையை ரசிக்கும் நோக்கில் ரயிலை மெதுவாக இயக்குவது உள்ளிட்டவற்றை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
- சுற்றுலாவுக்காக சிறப்பு வழித்தடங்களையும் அறிவித்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் நோக்கில் விஸ்டாடோம் பெட்டிகளை தென்மேற்கு ரயில்வே வடிவமைத்துள்ளது.
- இந்தப் பெட்டிகளின் பக்கவாட்டிலும் கூரைப் பகுதிகளிலும் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலமாக, பயணிகள் இயற்கையை வெகுவாக ரசிக்க முடியும்.
- பயணிகளின் வசதிக்கேற்ப இருக்கைகள் 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் உணவருந்துவதற்கு வசதியாக மடக்கி வைக்கும் வகையிலான சிறிய எஃகு மேஜைகள் இருக்கைகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.
- இந்த விஸ்டாடோம் பெட்டிகள் பெங்களூரு-மங்களூரு இடையே பகல் நேரத்தில் பயணிக்கும் விரைவு ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன.
யூரோ கோப்பையை வென்றது இத்தாலி
- 52 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று 2-வது முறையாக கோப்பையை ஏந்தி முத்தமிட்டது இத்தாலி அணி.
- கடந்த 1968ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்றபின் இத்தாலி அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்த நிைலயில் 52 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வென்றுள்ளது.
- லண்டன் வெம்ப்ளி அரங்கில் நேற்று நடந்த யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பெனால்டி சூட்அவுட்டில் 2-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சாம்பியனானது இத்தாலி.
- இத்தாலி வீரர் லியானார்டோ போனுஸி ஆட்டநேரத்தில் ஒரு கோலையும், பெனால்டி சூட்டில் ஒரு கோல் என இரு கோல்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்
- 2021 ஆண்டிற்கானவிம்பிள்டன் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும், 7ஆவது இடத்தில் உள்ள இத்தாலி வீரர் மட்டியோ பெர்ரெட்டினியும் மோதினர்.
- முதல் செட்டை பெர்ரெட்டினி 7-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். ஆனால் அடுத்த மூன்று செட்களில் ஆதிக்கம் செலுத்தியது ஜோகோவிச் தான். 6-7,6-4,6-4,6-3 என்ற செட்களில் தோற்கடித்தார்.
- இந்த வெற்றியின் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.
- இது ஜோகோவிச் கைப்பற்றும் 6ஆவது விம்பிள்டன் பட்டம். அடுத்து நடைபெறும் யுஎஸ் ஓபன் தொடரிலும் வென்று அசத்தினால் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் சாதனைகளை முறியடித்து தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைப்பார்.
ட்விட்டர் இந்திய குறைதீர்ப்பு அதிகாரி நியமனம்
- மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளின்படி ட்விட்டர் நிறுவனம் இந்தியப் பிரிவு குறை தீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமித்துள்ளது. இதுபோல முதல் குறைதீர்ப்பு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
- முதல்வர் ரங்கசாமி - ரகசியகாப்பு மற்றும் கேபினட், கார்ப்பரேஷன்கள், வருவாய், கலால், பொது நிர்வாகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம், உள்ளாட்சி, துறைமுகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், நகரம் மற்றும் கிராமம் அமைப்பு துறை, செய்தி விளம்பரத்துறை மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
- அமைச்சர் நமச்சிவாயம் - உள்துறை, மின்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை, கல்வித்துறை (கல்லூரி கல்வி உள்பட), விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், முப்படை நலத்துறை.
- அமைச்சர் லட்சுமி நாராயணன் - பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள் அச்சுத்துறை.
- அமைச்சர் தேனீ ஜெயக்குமார் - வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை, வனத்துறை, சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை.
- அமைச்சர் சந்திர பிரியங்கா - ஆதிதிராவிடர் நலம், போக்குவரத்து, வீட்டுவசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை.
- அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் - குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ), சமூக மேம்பாடு, நகர அடிப்படை சேவைகள், தீயணைப்பு, சிறுபான்மையினர் நலத்துறை.
தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட 4 பெண்கள் சாம்பியன்களாக தேர்வு
- தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட 4 பெண்கள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.
- இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தவிர்த்து ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையின் கீழ் தேசிய நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த திட்டத்தின் கீழ், நீர் வளங்களை பாதுகாத்தல் மற்றும் நீர் வளங்களை பெருக்குதலில் பொதுமக்களின் பங்கு, அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வளங்களை அதிகரித்தல், ஊரக பகுதிகளில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகிறது.
- இதன்படி, கிராமப்புறங்களில் தங்களின் சமூகத்தில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட பெண்களை தேர்வு செய்து நீர் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட 40 பெண்கள் நீர் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதன்படி, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த செல்வி, நீலகிரி மாவட்டம் ஆணைக்கட்டியை சேர்ந்த லலிதா, ஈரோடு மாவட்டம் தடசலட்டியை சேர்ந்த வள்ளி, நீலகிரி மாவட்ட சாகுர் கிராமத்தை சேர்ந்த வசந்தா ஆகிய 4 பேர் நீர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
மாநில உயர்கல்வி மன்றம் திருத்தியமைப்பு
- தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர் கல்வித்துறை அமைச்சர் இருப்பார்.
- துணைத் தலைவராக பேராசிரியர் அ.ராமசாமி செயல்படுவார். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர். அறிஞர் அண்ணா விருது, ராஜா சர்.அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
- மாநில அளவிலான உயர்கல்வித் திட்டங்களின் மேம்பாட்டுக்கும், மாநிலத் திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்க. மாநில உயர்கல்வி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.
யூரோ 2020 தங்கக் காலணி வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
- யூரோ 2020 கால்பந்து தொடரின் கோல்டன் பூட் என்ற தங்கக் காலணி விருதை போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார்.
- ரொனால்டோ மொத்தம் 5 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தார். யூரோ சாம்பியன்ஷிப்பில் முதன் முதலாக ரொனால்டோ கோல்டன் பூட் விருது பெறுகிறார்.
கோபா அமெரிக்கா மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது
- கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்த ஆட்டதில் மெஸ்ஸி எந்த கோலும் போடவில்லை. இருப்பினும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி அடித்த கோல்களின் மொத்த எண்ணிக்கை 4. இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.