இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூகுள் ரூ.113 கோடி நிதியுதவி
- இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது மிகத்தீவிரமாக இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு பிரிவு இந்தியாவுக்கு உதவி அளிக்க முன்வந்துள்ளது.
- அதாவது, இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ.113 கோடி மதிப்பிலான உதவிகளை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
- இந்தத் தொகை மூலம் இந்தியாவில் 80 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும், கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளா்களின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 'கிவ் இந்தியா' அமைப்புக்கு ரூ.90 கோடியும், 'பாத்' அமைப்புக்கு ரூ.18.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேலும், அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தின் மூலம் 20,000 கிராமப்புற சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனம் ரூ.3.6 கோடி ஒதுக்கியுள்ளது.
- 15 மாநிலங்களில் உள்ள 1,80,000 சுகாதாரம் சாா்ந்த சேவைகளை மேற்கொள்ளும் தன்னாா்வல்கள், 40,000 செவிலியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
உலகிலேயே 3-வது மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுப்பு
- போஸ்வானா பகுதியில் உள்ள சுரங்கத்திலிருந்து தற்போது ஆயிரத்து 98 காரட் எடை கொண்ட வைரக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மூன்றாவது பெரிய வைரக்கல் ஆகும்.
- இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டில் ஆயிரத்து 111 காரட் எடை கொண்ட வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இதே போஸ்வானாவில் (BOTSWANA) 1905 ஆம்ஆண்டு, 3ஆயிரத்து 106 காரட் எடை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுக்கப்பட்டது.
இலங்கைக்கு ரூ.740 கோடி கடனுதவி: சூரிய எரிசக்தி திட்டத்துக்காக வழங்கியது இந்தியா
- 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
- அந்த இலக்கை அடையும் நோக்கில், சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி, இலங்கை அரசுக்கு சுமாா் ரூ.740 கடனுதவி வழங்கியுள்ளது. இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சா்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை இந்தியா முன்னின்று கடந்த 2018ஆம் ஆண்டு உருவாக்கியது. அதில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளது. மற்ற நாடுகளில் சூரிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று இந்தியா சாா்பில் அறிவிக்கப்பட்டது.
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பி சீனா சாதனை
- விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான்காங் ஆய்வு நிலையத்தின் பிரதானப் பகுதியான தியான்ஹே, கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
- அதனைத் தொடா்ந்து, நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வீரா்கள் அதில் தங்கியிருப்பதற்குத் தேவையான பொருள்கள், உபகரணங்கள் அடங்கிய சரக்குக் கலமான தியான்ஷோ, கடந்த மாதம் செலுத்தப்பட்டு தியான்ஹே கலத்துடன் இணைக்கப்பட்டது.
- இந்த நிலையில், அந்த ஆய்வு நிலையத்தை நோக்கி 3 வீரா்களுடன் ஷென்ஷோ விண்வெளி ஓடம் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை காலை 9.22 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 6.52 மணி) விண்ணில் செலுத்தப்பட்டது.
- அந்த விண்வெளி ஓடத்தில் நை ஹாய்ஷெங் (56), லியூ போமிங் (54), தாங் ஹாங்போ (45) ஆகியோா் இருந்தனா். சுமாா் 6.5 மணி நேரத்துக்குப் பிறகு ஷென்ஷோ விண்கலம் தியாான்ஹே கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. சீன நேரப்படி மதியம் 3.45 மணிக்கு விண்வெளி நிலையத்துடன் 3 வீரா்கள் சென்ற விண்வெளி ஓடம் இணைக்கப்பட்டது.
- அங்கு 3 மாதங்கள் தங்கவிருக்கும் 3 வீரா்களும், தியான்காங் விண்வளி நிலையத்தைக் கட்டமைக்கும் கடினமான பணியில் ஈடுபடவுள்ளனா்.
- அண்மைக் காலமாக விண்வெளி ஆய்வில் சீனா அதிக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிகம் அறியப்படாத நிலவின் தொலைதூரப் பக்கத்தில் தனது சாங்கே-4 ஆய்வுக் கலத்தை சீனா முதல்முறையாக தரையிறக்கியது.
- மேலும், சீனாவின் சாங்கே-5 ஆய்வுக் கலம், நிலவிலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்தது. அத்துடன், அந்த நாட்டின் வாகன ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் தலைவராகசத்யா நாதெள்ளா நியமனம்
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவராக சத்யா நாதெள்ளாவை நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒருமனதாகத் தோந்தெடுத்துள்ளது. மேலும், தலைமை இயக்குநராக ஜான் டபிள்யூ தாம்ஸனை இயக்குநா் குழு நியமித்துள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நலனுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- டெல்டா மாவட்ட விவசாயிகள், குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள், 1,90,000 ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும்.
- இதற்காக, அரசு ரூ.50 கோடி நிதியினையும், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவும், நீரை திறம்பட சேமித்து பயிர்சாகுபடிக்கு பயன்படுத்தும் வகையில், பண்ணைக்குட்டைகள் அமைக்கவும், ரூ.11.09 கோடி நிதியினையும் வழங்கி, ஆக மொத்தம் ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து ஆணையிட்டுள்ளார்.
- இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவார்கள். எனவே, நடப்பாண்டில் சூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், ரூ.61.09 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்புத்திட்டத்தின் காரணமாகவும், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடம் - 484 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்து
- தமிழகத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி தொழிலியல் வழித்தட சாலை இணைப்பைத் தரம் உயர்த்தவும் ஆசிய வளர்ச்சி வங்கி, 484 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்திய அரசின் சார்பாக பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக அதன் இந்திய இயக்குநர் டேகியோ கொனிஷியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் உற்பத்தியோடு இந்தியாவை இந்தியாவை இணைக்கும், கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக மேற்குவங்கம் முதல் தமிழகம் வரையும், தமிழகத்தில் சென்னை கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடத்தை மேம்படுத்தவும் மற்றும் கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் பணிகளில் இந்திய அரசின் முன்னணி நட்புநவாக ஆசிய வளர்ச்சி வங்கி, செயல்பட்டு வருகிறது.
- இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி இடையே உள்ள 23 மாவட்டங்களில் சுமார் 590 கிலோமீட்டர் வரையிலான மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தவும். இதன் மூலம் தொழில் முனையங்களை கடலோர நிலப்பகுதி மற்றும் துறைமுகங்களுடன் இணைக்கவும் வழி செய்யப்படுகிறது.