இந்திய கடலோரக் காவல்படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு
- இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய ஐ.ஜி.யாக ஆனந்த் பிரகாஷ் படோலா பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு ஐ.ஜி.யாக இருந்த எஸ்.பரமேஷ், இந்திய கடலோரக் காவல் படையின் மேற்கு பிராந்திய கமாண்டராக மாற்றப்பட்டார்.
- புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆனந்த் பிரகாஷ், இந்திய கடலோரக் காவல் படை பணியில் 1990-ம் ஆண்டு சேர்ந்தார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ், கடலோரக் காவல்படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவரின் தட்ரக்ஷக் விருதை கடந்த ஆண்டு பெற்றார்.
ஜி7 உச்சி மாநாடு தொடக்கம்
- அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொமனி, இத்தாலி மற்றும் ஜப்பான் இடம்பெற்றுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு பிரிட்டனில் உள்ள காா்ன்வால் நகரில் ஜூன் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- இந்த மாநாட்டை பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதால் இந்தக் கூட்டம் நடந்தாக வேண்டும் என்பது எனது எண்ணம்.
- தொற்று பரவ ஆரம்பித்த பின்னா் கடந்த 18 மாதங்களில் நாம் புரிந்த சில தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அத்துடன் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்றால் நோந்த பிரச்னைகள் என்ன, இந்தத் தொற்று நீடித்த தழும்பானால் ஏற்படும் அபாயங்கள் என்ன, தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக வேரூன்றியுள்ளதா என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
- தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து நாம் சிறந்த முறையில் மீண்டெழ வேண்டும். அதைச் செய்வதற்கான வாய்ப்பு நம்மிடம் உள்ளது. ஏனெனில் பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு தீா்வு, தூய்மையான பசுமையான உலகை நிா்மாணிப்பது உள்ளிட்டவற்றில் ஜி7 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
- கடந்த 2008-ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது ஜி7 நாடுகளில் சீராக நடைபெறவில்லை. அப்போது நாம் இழைத்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பது முக்கியம் என்று தெரிவித்தாா்.
- இந்த மாநாட்டில் ஐரோப்பிய யூனியனும் கலந்துகொள்கிறது. இதுதவிர இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகளுக்கு மாநாட்டில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்யும் இந்தியாவின் பரிந்துரைக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
'டிரைவிங் லைசென்ஸ்' விதி மத்திய அரசு அதிரடி மாற்றம்
- அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெறுவோர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களை இயக்காமல், 'லைசென்ஸ்' பெறுவதற்கான புதிய விதிகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
- அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே தற்போது லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த நடைமுறைகளில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது. புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது: இதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
- அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதி இருக்க வேண்டும். பயிற்சியளிப்பவர், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- போக்குவரத்து சின்னங்கள், போக்குவரத்து விதிகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும். வாகனம் ஓட்டுவதற்கு மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.
- இதுபோன்ற பயிற்சிக்கு பின், 'சென்சார்' ஓடுபாதையில் வாகனம் ஓட்டும் சோதனையில் வெற்றி பெறுவதுடன், அதனை, 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும்.
- இந்த சான்றுகளுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே அவர்கள் லைசென்ஸ் பெறலாம். இந்த புதிய நடைமுறை, அடுத்த மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வேலையாட்களுக்கு பாதுகாப்பு இந்தியா - குவைத் ஒப்பந்தம்
- மத்திய கிழக்கு நாடான குவைத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இங்கு வீட்டு தொழிலாளர்களாக பணியாற்றும் இந்தியர்களை ஒரு சட்ட கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- இதில் அந்நாட்டிற்கான இந்திய துாதர் சிபி ஜார்ஜ் மற்றும் குவைத் வெளியுறவு துறை துணை அமைச்சர் மஜ்தி அஹ்மத் அல் தபிரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- அப்போது நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அஹ்மத் நாசர் அல் முகமது அல்- சபா ஆகியோர் உடன் இருந்தனர்.
- குவைத் நாட்டினர் இந்தியர்களை வீட்டு வேலைகளில் சேர்ப்பதை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பணியில் சேர்வோருக்கு சட்ட பாதுகாப்பை வழங்க இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
- இதன் வாயிலாக வேலை வழங்குவோர் மற்றும் வீட்டு தொழிலாளிகளின் உரிமை மற்றும் கடமைகளை உறுதி செய்வதற்கான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் அறிமுகம் செய்யப்படும். இங்குள்ள தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவிக்கான அமைப்பு உருவாக்கப்படும்.