டிஆர்டிஓ நிறுவனத்திடம் இருந்து 1.5 லட்சம் ஆக்சிகேர் உபகரணம் கொள்முதலுக்கு அரசு ஒப்புதல்
- நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா 2-வது அலையில் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
- கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆக்சிஜன் அவசியமாக இருக்கிறது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.
- எனவே, நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு ரூ.322.5 கோடி செலவில் 1.5 லட்சம் ஆக்சி கேர் உபகரணங்களை டிஆர்டிஓ நிறுவனத்திடம் இருந்து கொள் முதல் செய்ய உள்ளது. 'பி.எம்.கேர்' நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் ஒப்பு தலை அடுத்து 1 லட்சம் மேனு வல் மற்றும் 50 ஆயிரம் ஆட்டோமேடிக் ஆக்சிகேர் உபகரணங்கள், சுவாச முகக் கவசங்களுடன் கொள்முதல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆக்சிகேர் எஸ்பிஓ2 அடிப்படையிலான ஆக்சிஜன் ரெகுலேட்டிங் உபகரணம் ஆகும். இது சென்சார் மூலம் நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை அறிந்து அதற்கேற்ப ஆக்சிஜனை சப்ளை செய்யும். இதன்மூலம் நோயாளிகள் ஹைபாக்சியா நிலைக்குச் செல்வதை தடுக்க முடியும்.
- இவை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் 500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒடிசாவில் 9 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க உள்ளது. இந்த நிலையங்களில் இருந்து நிமிடத்துக்கு 1,000 லிட்டர் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
வாகன பேட்டரிகள் தயாரிப்பு ரூ.18,100 கோடி ஒதுக்கீடு
- நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், காற்று மாசை குறைக்கவும், பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- இதன் ஒரு நடவடிக்கையாக பேட்டரிகளால் இயக்கப்படும், மின்சார வாகனங்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.
- இதில், வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- வாகன பேட்டரிகள், 50 ஜிகா வாட்ஸ் சக்தி அடங்கியதாக இருக்கும். இதனால், வாகன பேட்டரி தயாரிப்பில், சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை பெறும். இதனால், பேட்டரிகளை அதிகளவில் பயன்படுத்தும் மின்னணு பொருட்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்
- இங்கிலாந்தின் முக்கிய கால்பந்து போட்டியான இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் 20 அணிகள் களம் கண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 38 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் இப்போது 35, 36வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.
- இந்நிலையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடட்-லெஸ்டர் சிட்டி அணிகள் மோதின. அதில் யுனைடட் அதிரடி காட்டினாலும் லெஸ்டர் தான் 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தோல்வியின் மூலம் மான்செஸ்டர் யுனைடட் சாம்பியன் கனவு கலைந்தது. அந்த அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 70 புள்ளிகளை பெற்றுள்ளது.
- ஆனால் மான்செஸ்டர் யுனைடட் தோற்றதால், முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணி கோப்பையை தட்டி சென்றுள்ளது.