- பிஸ்னஸ் ரிஸ்க் வெரிஸ்க் மேப்லெக்ராஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச அளவில் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை கொண்ட டாப் 20 நகரங்களில் 13 இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ள நிலையில்,
- டெல்லி 2ஆம் இடத்திலும் சென்னை 3ஆம் இடத்திலும் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் தற்போது சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை தான் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
- இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
- சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்து, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதே இப்போது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக எழுந்துள்ளது.
- இந்நிலையில், சர்வதேச அளவில் முக்கிய நகரங்களில் சுற்றுச்சூழல் மாசு எந்தளவு உள்ளது என்பது குறித்து தரவுகளை பிஸ்னஸ் ரிஸ்க் வெரிஸ்க் மேப்லெக்ராஃப்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- உலகில் மிகப் பெரிய 400 நகரங்களில் வசிக்கும் 150 கோடி மக்கள் அதிக அல்லது தீவிர ஆபத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்து வரும் நீர் விநியோகம், அனல் காற்று, இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், ஆயுட்காலம் குறைவது ஆகியவற்றால் இங்குள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 576 நகரங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில் டாப் 100 நகரங்களில் 99 நகரங்கள் ஆசியாவைச் சேர்ந்தவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக சுமார் 80 நகரங்கள் வரை இந்தியா அல்லது சீனாவைச் சேர்ந்ததாக உள்ளன.
- சுற்றுச்சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பட்டியலில் முதல் இடத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா உள்ளது. ஜகார்த்தா மாசு, வெள்ளம். அனல் காற்று ஆகியவற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவை எடுத்துக் கொண்டால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் கொண்ட 20 நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளன. அதில் தேசிய தலைநகர் டெல்லி மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- டெல்லியில் காற்று மாசு, நீர் மாசு மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லியில் வசிக்கும் மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அவர்களின் சாரசரி வாழ்நாளும் இதனால் குறைவதாகத் தெரிவிக்கப்பட்டது.
- டெல்லியை தொடர்ந்து தமிழக தலைநகர் சென்னை சர்வதேச அளவில் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் கொண்ட நகரமாக உள்ளது.
- உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா 6ஆம் இடத்திலும், கான்பூர் 10ஆம் இடத்திலும், லக்னோ 24ஆம் இடத்திலும் உள்ளன. சுமார் 1.25 கோடி மக்கள்தொகையைக் கொண்ட மகாராஷ்டிர தலைநகர் மும்பை இந்தப் பட்டியலில் 27ஆம் இடத்தில் உள்ளது.
- காற்று மாசை மட்டும் எடுத்துக் கொண்டால் உலகிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட நகராக டெல்லி உள்ளது. சர்வதேச அளவில் மிக மோசமான காற்று மாசை கொண்ட டாப் 20 நகரங்களும் இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளன.
- நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடே மாற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.