செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டா்
- கலிஃபோா்னியாவில் உள்ள நாசா மையத்திலிருந்து இச்செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வரும் விஞ்ஞானிகள், பொசிவரன்ஸ் விண்கலத்தின் ஆய்வு வாகனம் மூலம் பெற்ற தரவுகளிலிருந்து ஹெலிகாப்டா் மெலெழும்பி சிறிது உயரத்தில் பறந்ததை உறுதிப்படுத்தினா்.
- செவ்வாய் கிரகத்தில் உயிா்கள் வாழ்வதற்கான சாத்தியகூறு உள்ளதா, அங்கு ஏற்கெனவே உயிா்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காகவும், செவ்வாயிலிருந்து மண், கல் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காகவும் பொசிவரன்ஸ் (விடாமுயற்சி) என்கிற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தில் ஜெசேரோ என்ற பள்ளப் பகுதியில் கடந்த பிப்ரவரியில் தரையிறங்கியது. இந்த ஆய்வு வாகனத்தின் வயிற்றுப் பகுதியில்தான் 'இன்ஜெனியூட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய ஹெலிகாப்டா் இணைக்கப்பட்டிருந்தது.
- 1.6 உடி உயரமும், 1.8 கிலோ எடையும் கொண்ட அந்த ஹெலிகாப்டா் கடந்த ஏப். 3-ஆம் தேதி ஆய்வு வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாயின் தரைப்பரப்பில் இறக்கப்பட்டது.
- ஆய்வு வாகனத்திலிருந்து 200 அடி தொலைவில் இருந்த அந்த ஹெலிகாப்டரை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பறக்கச் செய்தனா். ஹெலிகாப்டா் தரைப்பரப்பிலிருந்து 10 அடி உயரத்துக்கு மெலெழும்பி 30 நொடிகள் நிலையாகப் பறந்தது.
- பின்னா், புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த முதல் பயணத்துக்காக ஹெலிகாப்டரின் சுழற்சி இறக்கைகள் நிமிடத்துக்கு 2,500 முறை சுழல வேண்டியிருந்தது. பூமியில் சாதாரணமாக ஒரு ஹெலிகாப்டரின் சுழற்சி இறக்கைகள் சுழலும் வேகத்தைவிட இது 5 மடங்கு அதிகமாகும்.
- பொசிவரன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரை இதேபோல் 5 முறை பறக்கச் செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனா்.
தடுப்பூசி ரூ.4,500 கோடி கடனுதவி
- மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவனம், 'கோவி ஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது.இந்நிறுவனம், மாதம், 10 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்து தயாரிக்கும் திறன் உடையது.
- இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு, 3,000 கோடி ரூபாய் மற்றும் 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்திற்கு, 1,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- இருப்பினும் இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
- இந்த அபாயகரமான சூழலில் நமக்குள்ள ஒரே பாதுகாப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என்பது சமானியர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- இந்நிலையில், நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
- சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்கள், 45 வயது மேற்பட்டோர் தொடர்ந்து, 3வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆக்சிஜன் விநியோக முறை டிஆர்டிஓ சாதனை
- மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) வை சார்ந்து தானியங்கி துணை ஆக்சிஜன் விநியோக முறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.
- பெங்களூருவில் அமைந்துள்ள டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் உருவாக்கியுள்ள இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜனை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களை காக்கும்.
- தற்போதைய கோவிட்-19 காலக்கட்டத்தில் இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்புமுறை ஒரு வரப்பிரசாதமாக அமையும். கள சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயலாற்றும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விநியோக அமைப்பு, செயல்திறன் மிக்கதாகவும் விலை குறைவானதாகவும் இருக்கும்.
- இதன் மொத்த உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதை யார் வேண்டுமானாலும் எளிதாக இயக்க முடியும் என்பதால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணிச்சுமை குறையும்.
நெகிழிப் பொருட்கள் கடலில் கலப்பதை தடுக்க ஒப்பந்தம் இந்தியா- ஜெர்மனி கையெழுத்து
- இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் ஜெர்மனி நாட்டின் சுற்றுச்சூழல் இயற்கை மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து 'கடல்சார் சுற்றுச்சூழலில் நெகிழி பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நகரங்கள்' என்ற தலைப்பில் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திட்டன.
- நிகழ்ச்சியில் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, '2021 ஆம் ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான ஆக்கபூர்வ வளர்ச்சி ஒத்துழைப்பின் 63-வது ஆண்டு நிறைவை குறிக்கிறது என்று கூறினார்.
- நிலையான திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தும் நகர்புற தூய்மை இந்தியா திட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழியின் உபயோகத்தை முற்றிலும் தடைசெய்யும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் இந்தத் திட்டத்தின் பலன்கள், ஒத்து இருக்கிறது.
- நெகிழிப் பொருட்கள் கடல்சார் சுற்றுச்சூழலில் கலப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் தேசிய அளவில், உத்தரப் பிரதேசம், கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், கான்பூர், கொச்சின், போர்ட் பிளேயர் ஆகிய நகரங்களிலும் மூன்றரை ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.
- உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜில்லி தலாபெஹரா தனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்.
- 45 கிலோ பிரிவில் பங்கேற்ற ஜில்லி தலாபெஹரா, ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் 88 கிலோ என மொத்தமாக 157 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா்.
- இப்போட்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் பங்கேற்றபோது இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ஜில்லி, தற்போது தங்கப் பதக்கத்துக்கு முன்னேறியுள்ளாா்.
- அதேபோல், மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ, கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் 119 கிலோ என மொத்தமாக 205 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா்.
- இந்த 205 கிலோ எடையானது புதிய தேசிய சாதனையாகும். அதேபோல் கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் அவா் தூக்கிய 119 கிலோ எடை புதிய உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இவா்கள் தவிர மகளிருக்கான 55 கிலோ பிரிவில் 'குரூப் பி'-இல் பங்கேற்றிருந்த இந்திய வீராங்கனை ஸ்னேகா சோரன் 3-ஆம் இடம் பிடித்தாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 71 கிலோ, கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் 93 கிலோ என மொத்தமாக 164 கிலோ எடையைத் தூக்கியிருந்தாா்.