நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020 மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்களின் பட்டியல்
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020 மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் 10 லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- அதில் மக்கள் தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொண்ட நகரங்கள் பிரிவில் பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை புனே மற்றும் அஹமதாபாத் நகரங்கள் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை 4-வது இடத்தை பிடித்துள்ளது.
- வாழ தகுதியான நகரங்கள் பட்டியல், வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்
- அமெரிக்காவில் உள்ள உலக பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டின் சர்வதேச அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் 14 கல்வி நிறுவனங்கள் தகுதி பட்டியில் உள்ளன.
- இந்திய கல்வி நிறுவனங்களில், ஐஐடி சென்னை முதல் இடத்தையும் (சர்வதேச தரவரிசை 30), ஐஐடி பம்பாய் (41) இரண்டாவது இடத்தையும், ஐஐடி கோரக்பூர் (44) மூன்றாவது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் (50) நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. ஐஐடி டெல்லி 10வது இடத்தில் உள்ளது.
- ஐஐடி சென்னையை பொருத்தமட்டில் பெட்ரோலிய பொறியியல் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்த சர்வதேச பட்டியலில் தேர்வாகி உள்ளது.
சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023-ஐ அறிவித்தது ஐ.நா
- இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளித்த முன்மொழிவின் அடிப்படையில் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. பொதுச் சபை அறிவித்துள்ளது.
- சிறுதானியங்களால் உடல்நலனுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும், சிறுதானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிப்பதற்கு இந்தியா, ரஷியா, வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகள் ஐ.நா. பொதுச் சபையில் முன்மொழிவை அளித்தன.
- அந்த முன்மொழிவை 70-க்கும் மேற்பட்ட நாடுகள் வழிமொழிந்தன. இத்தகைய சூழலில், முன்மொழிவின் மீது ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிப்பதற்கு ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன. அதைத் தொடா்ந்து, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.