ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்த வீடு: அமைச்சரவை ஒப்புதல்
- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 'நவரத்தினங்கள்' எனும் 9 முக்கிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார். அதில், ஏழைகளுக்கு வீடு, இலவசமருத்துவம், கல்வி, விவசாயக் கடன், வேலை வாய்ப்பு, பூரண மது விலக்கு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
- இதையடுத்து, தான் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதிகளில் உள்ள ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்தி வருகிறார்.
- இதில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார் களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்கள் பெயரிலேயே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது.
- விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் பட்டா வழங்குமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால், ஏழைகள் அனைவரும் இலவச பட்டாக்களை பெற்று வருகின்றனர்.
- இது தவிர, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம், தள்ளு வண்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் என அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
- அதில், நகர்புறத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலம் அரசு இலவச வீடுகளை கட்டித்தருவது என்றும், அதில் 300 சதுர அடிக்குள் இருக்கும் வீடுகளை ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடசென்னை மிக உய்ய அனல்மின் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
- திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறன்கொண்ட வடசென்னை மிக உய்யஅனல் மின் திட்டம் நிலை-3 அமைப்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
- மிக உய்ய அனல் மின்தொழில் நுட்பத்தில் 800 மெகாவாட் திறனுடைய அலகு தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- இத்தகைய சிறப்புமிக்க வடசென்னை மிக உய்ய அனல்மின் திட்டம் நிலை-3 செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் விதமாக தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக, கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
- தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் இயக்ககம் மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.2 ஆயிரத்து 181 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ.931 கோடி மதிப்பில் புதிய திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.
- அப்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு'களை முதல்வர் பழனிசாமி வெளியிட, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஐசிஐசிஐ வங்கி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
- இந்த `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு' அட்டையை மாநகராட்சியின் சேவைகள், வாகன நிறுத்தக் கட்டணம், நாடு முழுவதும் ரூபே அட்டை வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் உணவகங்கள், கடைகள், சில்லறை வணிகம் சார்ந்த இடங்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் பயன்படுத்தலாம்.
- அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 48 வார்டுகளில் தனியார் நிறுவனம் மூலம் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்தல், சேகரித்த கழிவுகளை அதற்குரிய பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
- இதற்காக தொடர்புடைய தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.152 கோடி வீதம், 8 ஆண்டுகளுக்கு ரூ.1,216 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு உணர்வு மையத்தையும் திறந்து வைத்தார். இவ்வாறு சென்னை மாநகராட்சியில் மட்டும் மொத்தம் ரூ.1,295 கோடியே 44 லட்சத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் அர்ப்பணித்தார்.
- சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் 60 கி.மீ தூரத்துக்கு (30 கிமீ ஆறின் இரு கரைகள்) ஆற்றின் கரையோரங்களை பலப்படுத்தி, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க ரூ.36 கோடியே 61 லட்சத்தில் 108 உள்ளூர் தாவர இனங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 53 ஆயிரம் தாவரங்களை நடவு செய்யும் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய செயல் இயக்குனர் நியமனம்
- மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செயல் இயக்குனராக மருத்துவர் மங்கு ஹனுமந்த ராவை மத்திய அரசு நியமித்துள்ளது.
- டெல்லியில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
- இதையடுத்து தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக் குழுவும் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
- இதையடுத்து, இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 201.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,000 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.
- இந்நிலையில், இந்த மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோசை நியமித்து கடந்தாண்டு அக்டோபர் 28ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
'அர்ஜுன்' ரக பீரங்கி அமைச்சகம் ஒப்புதல்
- அர்ஜுன் ரக பீரங்கிகளை வாங்குவதற்கான, மத்திய அரசின் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன்படி, இந்திய ராணுவத்துக்கு, 6,000 கோடி ரூபாயில், 118 'அர்ஜுன் மார்க் - 1ஏ' வகை போர் பீரங்கிகளை வாங்குவதற்கு, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
- இதுதவிர, 'நாக் டாங்க்' எதிர்ப்பு ஏவுகணை, அருத்ரா ரேடார் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கும், ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்களில் மதுரைக்கு 2வது இடம், முதல் இடத்தைப் பிடித்தது உதய்பூர்
- இந்திய விமானத்துறை ஆணையம் (Indian Airport Authority) ஆண்டிற்கு இரு முறை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் சேவை எப்படியிருக்கிறது என்பது பற்றி சர்வே எடுக்கிறது.
- அந்த அடிப்படையில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
- நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பட்டாலும் அதில் 50 விமான நிலையங்களில் மட்டுமே இந்த சர்வேயை இந்திய விமானத்துறை ஆணையம் மேற்கொண்டது.
- இதில், உதய்பூர் விமானநிலையம், 5-க்கு 4.85 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மதுரை விமான நிலையம் 4.80 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றது.
- மதுரையைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர் சேவையில், விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உதவுவது, டெர்மினலில் இருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்வது, பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் உடனுக்குடன் எந்ததெந்த நேரத்தில் புறப்படும் விமானங்கள், தரையிரங்கும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகளை செய்வது, கார் பார்க்கிங் போன்றவை அதிக புள்ளிகள் பெறுவதற்கு சாதகமாக இருந்தன.
இந்தியா - மொரீஷியஸ் தாராள வர்த்தக ஒப்பந்தம்
- வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், இந்தியா - மொரீஷியஸ் ஒருங்கிணைந்த பொருளா தார கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமானது.
- இந்தியா, ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஒரு நாட்டுடன் இதுபோன்ற தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறை. இதன் மூலம், இந்தியாவில் இருந்து மொரீஷியசுக்கு ஏற்றுமதியாகும், ஜவுளி, வேளாண் விளை பொருள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட, 300க்கும் அதிகமான பொருட்களுக்கு, சுங்க வரிச் சலுகை கிடைக்கும்.
- அதுபோல, மொரீஷியசில் இருந்து, இறக்குமதியாகும் உறைநிலை மீன், உயர்தர சர்க்கரை, பிஸ்கட், பழங்கள், சோப்பு, மது வகைகள், மருத்துவ சாதனங்கள் போன்ற, 615 பொருட்கள் சுங்க வரிச் சலுகை பெறும்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர்
- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சரவையின் ராஜினாமை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து பெரும்பான்மை இழந்த ஆளும் கட்சியாக நாராயணசாமி தலைமையிலான அரசு மாறியது.
- இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 22ம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளியேறினார்.
- இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
- நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ஆய்வு கூட்டத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
- அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், வ.உ.சிதம்பரம், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர்.