ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு மோரீஷஸ் நாட்டுக்கு இந்தியா ரூ.724.34 கோடி கடனுதவி
- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மாலத்தீவு, மோரீஷஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்த இரு நாடுகளும் இந்தியாவின் அருகில் உள்ள முக்கிய நாடுகள் ஆகும்.
- மேலும் இந்திய பிரதமரின் 'சாகா்' (மண்டலத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி) திட்டத்தில் மாலத்தீவு, மோரீஷஸ் நாடுகள் சிறப்பிடம் வகிக்கின்றன. இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு மோரீஷஸ் சென்றாா்.
- அங்கு அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் ஜக்நாத்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் எம்.ஆலன் கனூவுடன் இருநாட்டு உறவுகள், கூட்டாண்மை வளா்ச்சி ஆகியவை குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.
- இருநாடுகளின் மேம்பட்ட உறவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மோரீஷஸ் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் மறுமலா்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தர இந்தியா தயாராக உள்ளது.
- உதவிக்கரம் நீட்டுவதில் இந்தியாவின் பங்கு எப்போதும் எல்லைகளைக் கடந்து நிற்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மோரீஷஸுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- சாகா் திட்டம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும், மோரீஷஸும் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தப்படி ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கு மோரீஷஸுக்கு ரூ.724.34 கோடி கடனுதவியை இந்தியா அளிக்கும்.
- மேலும், கடல்சாா் பாதுகாப்பில் மோரீஷஸின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் இந்தியா சாா்பில் டாா்னியா் விமானமும், துருவ் ஹெலிகாப்டரும் அந்நாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான கடிதமும் இருநாடுகள் சாா்பில் பரிமாற்றம் செய்துக் கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை 'ஐநாக்ஸ்' நிறுவனம்
- குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான திரவ வாயுக்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
- இந்நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ வடிவிலான ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கன் வாயுக்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
- அத்துடன், இத் தொழிற்சாலைகளில், வாயு பிரிப்பு பிரிவுகளையும் அமைக்க உள்ளது.இது குறித்து, ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர், சித்தார்த் ஜெயின் கூறியதாவது:நிறுவனம், தற்போது தினமும், 2,300 டன் திரவ வாயுக்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.
- இது, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அமையும் தொழிற்சாலைகள் மூலம், 4,800 டன்னாக அதிகரிக்கும். இதன் மூலம், இம்மாநிலங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுவர்.
- அடுத்த இரு ஆண்டுகளில் உற்பத்தி துவங்கி விடும். இதன் மூலம், மின்னணு, மருந்து, உருக்கு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான வாயுக்கள் தடையின்றி கிடைக்கும்.
தலைவாசலில் ரூ.1,022 கோடியில் சா்வதேச கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் திறப்பு
- சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,022 கோடியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.
- தமிழகத்தில் உள்ள கலப்பினப் பசுக்கள் 15 லிட்டா் பால் தருகின்றன. இரட்டிப்பு பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளொன்றுக்கு சுமாா் 40 லிட்டா் வரை பால் கறக்கும் கலப்பினப் பசுக்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- சேலம் மாவட்டம், கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பினப் பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.
- கால்நடை வளா்ப்புக்கு மறைந்த முதல்வா் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்தாா். கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி சுமாா் ரூ. 1,022 கோடி செலவில மிக பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிக பெரியதாக 1,102 ஏக்கா் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
- தலைவாசலில் ரூ.125 கோடியில் 58 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்; ரூ.181 கோடியில் 58 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
- காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க சத்தியமங்கலத்தில் ரூ. 2.50 கோடியிலும், சிவகங்கை, மதுரை, விருதுநகரில் உள்ள புலிகுளம் காளைகளை பாதுகாக்க ஆராய்ச்சி மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
- ஆலம்பாடி கால்நடைகளை பாதுகாக்க ரூ. 4 கோடியில் தருமபுரியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
- ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் பிரதமரின் விவசாயிகள் (பிஎம்-கிசான்)தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் மொத்தம் 5,76,972 பேர் பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் இணைந்துள்ளனர்.
- அவர்களில் 5% பேரின் தகுதி மற்றும் உண்மைத்தன்மையை அறிவதற்காக அவர்களின் விவரங்களை நேரில் சரிபார்க்கும் பணி கள் நடைபெற்றது.
- மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்தப் பணியில், மொத்தமுள்ள 63 வட்டங்களில் 28,269 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டது
- இந்தப் பணியை 99.6% நிறைவு செய்ததற்காக பிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தம் சந்துருடுவிடம் இந்த விருது வழங்கப்படவுள்ளது
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று இந்தியா சார்பில் ஒரு லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாலத்தீவுக்கு வழங்கினார்.
- இரண்டாம் நாளான இன்று மாலத்தீவு ராணுவ மந்திரி மரிய திதியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ கடன் வரம்பு ஒப்பந்தத்தில் (எல்ஓசி) இருவரும் கையெழுத்திட்டனர்.