நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளாவில் துவக்கம்
- கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாநில அரசால், ஐ.ஐ.ஐ.டி.எம்.கே., எனப்படும், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் கேரள மேலாண்மை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
- இந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தி, 'கேரள டிஜிட்டல் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகமான இதை, கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தனர்.
2வது முறையாக ஒசாகா ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்
- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
- இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் (25 வயது, 24வது ரேங்க்) நேற்று மோதிய ஒசாகா (23 வயது, 3வது ரேங்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.
- இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே 2019ல் ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த ஒசாகா, தற்போது 2வது முறையாக இங்கு பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது அவரது 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். யுஎஸ் ஓபனில் 2018 மற்றும் 2020ல் ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ்
- செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய நாசா அனுப்பிய 'பெர்சவரன்ஸ்' ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
- சிறிது நேரத்தில் குறைந்த ரெசல்யூஷன் கொண்ட கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் படங்களை அது அனுப்பியது. இவற்றை நாசா நேற்று முன்தினம் டிவிட்டரில் வெளியிட்டிருந்தது.
- இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் மீண்டும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனம் IKEA உத்திரபிரதேசத்தில் ₹5500 கோடி முதலீடு
- உலகின் மிகப்பெரிய பர்னீச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனமான IKEA அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் ரூ .5500 கோடியை முதலீடு செய்கிறது.
- நாய்டாவில் தொடங்கி, புர்வான்சால் மற்றும் மத்திய உத்திரபிரதேசத்தில் குறைந்தது மூன்று பெரிய விற்பனை நிலையங்களை திறக்க IKEA திட்டமிட்டுள்ளது. நொய்டா மையம் திறக்கப்பட்ட பின், மற்ற விற்பனை நிலையங்களுக்கான திட்டங்கள் இறுதி செய்யப்படும்.
- உத்திரபிரதேசம் (Uttar Pradesh) நொய்டாவின் செக்டர் 51 இல் கிட்டத்தட்ட 50,000 சதுர மீட்டர் அளவிலான நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது இந்த திட்டம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும்.
ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மாநிலங்களுக்கு 17-வது தவணையாக ரூ.5,000 கோடி விடுவிப்பு
- ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இதில், ரூ. 4,730.41 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ. 269.59 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி , ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.
- மீதமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதிப்பிடப்பட்ட மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் 91 சதவீதம், மாநிலங்களுக்கும் , சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- இதில் ரூ. 91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ. 8,539.66 கோடி சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- இந்த வாரத்திற்கான நிதி 5.5924 சதவீதம் என்னும் வட்டி விகிதத்தில் கடனாக வாங்கப்பட்டுள்ளது. இது வரை, ரூ. 1,00,000 கோடி, 4.8307 சதவீதம் என்னும் சராசரி வட்டி விகிதத்தில் மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு தெரிவித்த விருப்பத் திட்டங்களில் முதலாம் விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் விரும்பின. இதைத் தொடர்ந்து, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு ரூ. 1,06,830 கோடியைக் கூடுதல் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும், தமிழகம், மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீத அளவுக்கு ரூ.9627 கோடியும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.6002.53 கோடியும், புதுச்சேரி சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.713.61 கோடியும் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதல் மஞ்சள் நிற பென்குயின்
- உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிகாவின் தெற்கு ஜார்ஜியா தீவு பகுதியில்மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
- வெள்ளை கருப்பு மற்றும் கழுத்துகளில் லேசான மஞ்சள் கலந்த நிறத்துடன் பென்குயின்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டும் முழுவதுமாக இருக்கக்கூடிய பென்குயின் புகைப்படம் தற்பொழுது பலரையும் கண் கவர செய்துள்ளது.