- 1888 சென்னை மாநகர காவல் சட்டம், அதனுடன் இணைந்த 1987, 1997 தமிழ்நாடு சட்டம் மூலம் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும், 1930 தமிழ்நாடு சூதாட்ட சட்டம் மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஆட்டச் சீட்டுகள், பகடைக் காய்கள் மூலம் பணயம் வைத்தல், பந்தயம் கட்டுதல் முறையிலான சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
- கணினி அல்லது கைபேசிகளை பயன்படுத்தி பணம் அல்லது பிற பணயப் பொருட்களுக்காக, அடிமையாகும் தன்மை கொண்ட ரம்மி, போக்கர் போன்றவற்றில் சூதாட்டம் ஆடுவது சமீபகாலமாக பன்மடங்கு பெருகியுள்ளது.
- இதனால் அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். தற்கொலை சம்பவங்களும் பதிவாகின்றன. தற்கொலைகளை தடுக்கவும், இணையவழி சூதாட்டத்தின் தீமைகளில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்கவும், தொடர்புடைய சட்டங்களில் தக்க திருத்தங்கள் செய்து, இணைய வழியில் பந்தயம் கட்டுதல் அல்லது பணயம் வைத்தலை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
- இதற்காக 1930 தமிழ்நாடு சூதாட்ட சட்டம், 1888 சென்னை மாநகர காவல் சட்டம், 1859 தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டு, 2020 தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் அவசர சட்டம் கடந்த 2020 நவம்பர் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்டு, நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.
- இந்த அவசர சட்டத்தை சில மாற்றங்களுடன் சட்டமாக்க இந்த மசோதா வழிவகைசெய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதசிறைத் தண்டனை, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை என்று அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.