- மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி சென்னை ஆவடியில் உள்ள கன ஊர்தி தொழிற்சாலையில், ரூ.8,400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த தளவாடமானது 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய ராணுவத்துடன் டி.ஆர்.டி.ஓ இணைந்து அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன பீரங்கியைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- இந்திய ராணுவம் எல்லையில் ஏற்கெனவே 124 அர்ஜுன் பீரங்கிகளை பயன்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, கூடுதலாக இந்த 118 அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்களும் சேர்கின்றன.
- ஒவ்வொரு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனமும் 58.5 டன் எடை கொண்டது. 10.638 மீட்டர் நீளமும் 9.456 மீட்டர் உயரமும் கொண்டது. அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனம் 1,400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த பீரங்கி வாகனம் நவீன 120 மி.மீ துப்பாக்கியுடன் இயங்குவதோடு எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி இரவு நேரத்திலும் இலங்குகளை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்தும் வகையில், தெர்மல் இமேஜிங் என்கிற பிரத்யேக வசதிகொண்ட அதி நவீன கேமரா உள்ளது.
- அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்கள் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டவை.
- தரைவழி மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க இரண்டாம் நிலை ஆயுதங்களாக 7.6 மி.மீ மற்றும் 12.7 மி.மீ 2 உயர் ரக துப்பாகிகளும் இந்த அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
- ஒரு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனத்தை காமண்டர், பீரங்கியை சுடுபவர் உள்பட 4 பேர் இயக்கலாம். 1970களில் அர்ஜுன் ரக பீரங்கிகள் உருவாக்கப்பட்டபோது, டி.ஆர்.டி.ஓ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
- ஆனால், அது பல கட்ட ஆய்வுகளைக் கடந்து பல தரப்பினரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, தயாரிக்கப்பட்டுள்ள இந்த அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகள் தற்போது இருக்கும் பீரங்கிகளைவிட அதிக சக்தி வாய்ந்த அதி நவீன பீரங்கிகளாக உள்ளன.
- அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனங்களை இன்று சென்னையில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த பீரங்கிகள் இந்திய ராணுவத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்க உள்ளது.