சென்னையில் தென் மாநிலங்களுக்கான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் திறப்பு
- நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பதற்காக 'கம்பெனிகள் சட்டம் - 2013' பிரகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் (என்சிஎல்டி) நாடு முழுவதும் கடந்த 2016-ல் தொடங்கப்பட்டன.
- இதன் 16 அமர்வுகள் தற்போது நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
- இந்த தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.
- அதன்பலனாக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளை சென்னையில் கடந்தாண்டு மார்ச் 18 முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது.
- தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளையை கடந்த திங்களன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
- இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் செயல் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பன்ஷி லால் பட் மற்றும் சென்னை கிளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமெரிக்கா - ரஷ்யா இடையிலான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் ரஷ்யா ஒப்புதல்
- அமெரிக்கா - ரஷ்யா இடையிலான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம், அடுத்த மாதம் காலாவதியாகிறது. இதை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க, ரஷ்யா விருப்பம் தெரிவித்தது. ஆனால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இதற்கு தயக்கம் காட்டினார்.
- இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக, கடந்த, 20ல் பதவியேற்ற ஜோ பைடன், நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புடினை, டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தை மேலும், ஐந்து ஆண்டுக்கு நீட்டிப்பது பற்றி, புடின் பேசினார்.
- இதற்கு பைடன் சம்மதித்தார்.இதையடுத்து, அமெரிக்காவுடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தை, மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க, ரஷ்ய பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது.
ஐ.நா., அமைதி நிதியத்திற்கு இந்தியா ரூ.1.12 கோடி உதவி
- உள்நாட்டு போர் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வரும் நாடுகளில் மேற்கொள்ளும் அமைதி நடவடிக்கைகளுக்காக, 'அமைதி நிதியம்' என்ற அமைப்பை, ஐ.நா.,ஏற்படுத்தியுள்ளது.
- இந்நிதியத்திற்கு, இதுவரை, 60க்கும் மேற்பட்ட நாடுகள், 9,000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உள்ளன. இந்நிலையில், ஐ.நா., அமைதி நிதியத்தின் உயர்நிலை மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இந்தாண்டு, இந்நிதியத்திற்கு, இந்தியா, 1.12 கோடி ரூபாய் வழங்குகிறது.
- அமைதி நிதியம், 2020 - 24 வரை, ஒருங்கிணைந்த செயல் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்த உள்ளது வரவேற்கத்தக்கது. நாட்டு மக்கள் நன்மைக்காக, உள்நாட்டு போரை தடுத்து, அமைதியை ஏற்படுத்துவது முக்கியம்.
- இதற்கு உறுப்பு நாடுகள் ஆதரவளித்து, ஐ.நா.,வை பலப்படுத்துவது இன்றியமையாதது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த பின், சிறந்த நிர்வாகம், சமூக முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்க, அமைதி நிதியம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் நியமனம்
- அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் என்பவரை அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின் 46வது புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த 20ம் தேதி பதவியேற்றார்.
- அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதாகும் ஜேனட் எல்லன் என்பவரை நியமனம் செய்தார். இவரது நியமனத்திற்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல்பெற வேண்டும்.
- சென்ட் சபையில் தற்போது ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் சரிசமமான உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சபைியன் தலைவராக இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வாக்கு அளிப்பார் என்பதால் செனட்சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வரும் தீர்மான மசோதா என எதுவாயினும் எளிதாக நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.
- மேலும் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் என்பவரை நியமிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கியது.இதனையடுத்து அமெரிக்க வரலாற்றில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- 2021ம் ஆண்டில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, பிரதமர் தலைமையிலான, பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- சராசரி தரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9960ஆக இருந்தது. இது தற்போது ரூ.375ஆக அதிகரிக்கப்பட்டு, 2021ம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு ரூ.10,335ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- முழு கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு ரூ.10,300 ஆக இருந்தது. தற்போது, ரூ.300 அதிகரிக்கப்பட்டு 2021ம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு ரூ.10,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவைவிட, காய்ந்த கொப்பரைக்கு 51.87 சதவீத வருவாயையும், முழு கொப்பரைக்கான வருவாயை, 55.76 சதவீதமும் உறுதி செய்யும்.
- வேளாண் பொருட்களுக்கான செலவு மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய உற்பத்தி செலவை விட, குறைந்த பட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என கடந்த 2018-19ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- இது விவசாயிகளுக்கு 50 சதவீத லாபத்தை உறுதி செய்கிறது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் இது முக்கியமானது.
- தென்னை வளர்க்கப்படும் மாநிலங்களில், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதலை மேற்கொள்வதில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, ஆகியவை, மத்திய அரசின் முகமைகளாக தொடர்ந்து செயல்படும்.
- 2020ம் ஆண்டில், 4896 தென்னை விவசாயிகளிடமிருந்து, 5053.34 டன் முழு கொப்பரைத் தேங்காயையும், 35.58 டன், காய்ந்த கொப்பரை தேங்காயையும் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள்: தமிழகம் உட்பட 18 மாநிலங்களுக்கு ரூ.12,351 கோடி மானியத் தொகை
- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு ரூ. 12,351.5 கோடி மானியத்தை நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை விடுவித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட அடிப்படை மானியத்தின் இரண்டாவது தவணைத் தொகை இதுவாகும்.
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி முதல் தவணைக்கான பயன்பாட்டு சான்றிதழை வழங்கிய 18 மாநிலங்களுக்கு மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக அடிப்படை மானியத்தின் முதல் தவணையாகவும், 14-ஆவது நிதி ஆணையத்தின் நிலுவைத் தொகையாகவும் மொத்தம் ரூ.18,199 கோடி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது.
- அதேவேளையில் இணைப்பு மானியத்தின் முதல் தவணையாக ரூ. 15,187.50 கோடி மானியத் தொகை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது.
- இதன் மூலம் அடிப்படை மானியங்களாகவும், இணைப்பு மானியங்களாகவும் மொத்தம் ரூ. 45,738 கோடியை மத்திய செலவினத் துறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 1803.50 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.