- 2020-21 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
- மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி வி சுப்பிரமணியன் தலைமையிலான குழு தயாரித்துள்ள இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பாண்டு பொருளாதாரம் குறித்து விரிவாக அலசப்பட்டதோடு, வருகின்ற 2021-22 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளுக்கும் இந்த ஆய்வறிக்கையில் பல்வேறு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் 335 பக்கங்களைக் கொண்ட இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் சுமாா் 30 பக்கங்கள் கரோனா காலக்கட்டம் குறித்த ஆய்வு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- கரோனா காலக்கட்டத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. ஆனால் சுமாா் 37 லட்சம் போ கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்தும் 1 லட்சம் போ இந்த நோயின் உயிரிழப்பிலிருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனா்.
- பொது முடக்கத்தால் முதல் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி (-)23.9 சதவீதமாக குறைந்தது என்றாலும் அது இரண்டாவது காலாண்டில் மீண்டு எழுந்து (-) 7.7 சதவீதமாகியுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வளா்ச்சி ஏற்பட உள்ளது.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருகின்ற 2021-22 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் இரட்டை இலக்கான 11 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக நிகழ இருக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
- சமீபத்தில் சா்வதேச செலாவணி நிதியமும் இந்தியா 11.5 சதவித வளா்ச்சியை எட்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளா்ச்சிக்கு எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதையும்ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
- அரசு, தேசிய உள்கட்டமைப்பை மையமாகக் கொண்ட பொது முதலீட்டை அதிகரிக்கவேண்டும். பொருளாதார மந்தம் ஏற்படும் காலங்களில் தனியாா்கள் மூதலீட்டை அதிகரிப்பாா்கள் என எதிா்பாா்த்து ஒரு அரசு இருக்கமுடியாது.
- பொது முதலீட்டாலும், அதிகரிக்கும் கடன்களால் நிதி பற்றாக்குறை ஏற்படுவதைப்பற்றி அரசு கவலை கொள்ளாமல் கட்டுமானப்பணிகளுக்கும், சுகாதாரம், கல்வி போன்ற சமூக வளா்ச்சி பணிகளுக்கும் அரசு தாராளமாக பணத்தை ஒதுக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா காலக்கட்டத்தில் சா்வதேச நாடுகளில் (ஜிடிபி யில்) 10 முதல் 20 சதவீதம் வரை பொது முதலீட்டை அதிகரித்தது. அதே சமயம் இந்தியாவில் (ஜிடிபி) இரண்டு சதவீதத்திற்கு குறைவாகவே பொது முதலீட்டிற்கு செலவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆய்வறிக்கையில், பொருள் செயல் வகை அதிகாரத்திலிருந்து (753) திருக்குறள் ஒன்று இடம்பெற்றுள்ளது.
- பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
- எண்ணிய தேயத்துச் சென்று.
- பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடியும் என்பதே இக்குறளுக்கான விளக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
- குறளுக்கேற்றாற் போல நாட்டில் நிலவும் பொருளாதார சரிவு, தலைதூக்கியிருக்கும் வேலையின்மை, மருத்துவப் பேரிடர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் இருக்குமா என்பதே அனைவரின் கேள்வி.