ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ250 கோடி மானியம் விடுவிப்பு தமிழக அரசு உத்தரவு
- தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் ரேஷன் கடைகள், 270 எண்ணெய் விநியோக மையங்களை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. இதில், 27 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.
- இந்த நிலையில் தனியார் எஜென்சிகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு மண்ணெணெய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்த வகையில் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய கடந்த 2018 முதல் 2020 வரை மானியம் வழங்க வேண்டியுள்ளது.
- குறிப்பாக, பொது விநியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-19ல் ரூ398 கோடியும்,2019-20ல் ரூ200 கோடி என மொத்தம் ரூ598 கோடி வழங்க வேண்டியுள்ளது.
- இதனால், நியாயவிலை கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-19 ஆண்டுக்கான மானியம் ரூ250 கோடியை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
- அதில், கடந்த 2018-19 ஆண்டுக்கு ரூ398.02 கோடி மானியம் தர வேண்டியுள்ளது. இதில், தற்போது, ரூ250 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ148.02 கோடி 2021-2022ம் ஆண்டில் தர பரிசீலிக்கப்படும்.
கேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்: சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை
- சமூக வலைத்தளங்களில் பிறர் மனது புண்படும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 2000ல் தகவல் தொழில்நுட்ப சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதுபோல கேரளாவில் போலீஸ் சட்டம் 118 (டி)ம் இருந்து வந்தது.
- ஆனால் இவை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவை என கூறி, கடந்த 2011ல் உச்சநீதிமன்றம் அந்த சட்டங்களை ரத்து செய்தது. இந்த நிலையில் கேரளாவில் சமூக வலை தளங்களில் ஆபாச கருத்துக்களை தெரிவிப்பது, மிரட்டுவது உட்பட சைபர் குற்றங்கள் அதிகரித்தன. இதையடுத்து புதிய அவசர சட்டம் கொண்டுவர கேரள அரசு தீர்மானித்தது.
- இதன்படி தனிநபரை சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டுபவர்கள், அவமானப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, ₹10,000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
- இந்த அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
15வது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
- சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அகிஸ் தலைமையேற்று நடத்தும் 15-வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். 2 நாட்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
- தற்போது பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்த ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்,ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ உள்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா
- சென்னை கலைவாரணர் அரங்கில், பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- முதலமைச்சர் தலைமையில் நடந்த விழாவில், 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அர்ப்பணித்தார்.
- இதனைத் தொடர்ந்து, 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை, அவிநாசி சாலையில் அமைக்கப்படவுள்ள உயர்மட்ட சாலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
- கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
- தொடர்ந்து, சென்னை வர்த்தக மையத்தை 309 கோடி ரூபாயில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் 900 கோடி ரூபாயில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயலில் 1, 400 கோடி ரூபாயில் லூப் பிளாண்ட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இறங்குதளம் அமைக்கும் திட்டம் ஆகியவைக்கும் அடிக்கல் நாட்டினார்.
உணவுப் பதப்படுத்துதல் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் ரூ.320 கோடியில் புதிய திட்டங்கள்
- மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழான உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் (சி.இ.எஃப்.பி.பி.சி) என்னும் திட்டத்தின் கீழ் ரூ.107.42 கோடி மானியத்துடன், ரூ.320.33 கோடி செலவில் 28 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு.
- உணவு பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் திட்டம் மற்றும் பிரதமரின் கிரிஷி சிஞ்சயி யோஜனா ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
- இந்தத் திட்டங்களின் மூலம் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தராகண்ட், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 1237 மெட்ரிக் டன் அளவில் பதப்படுத்துதல் திறன்கள் உருவாக்கப்படும்