தேசிய கல்விக் கொள்கை ஆராய ஏழு பேர் குழு
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சமீபத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. இதில், 'பள்ளி மாணவர்களுக்கு, தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன், மூன்றாவதாக ஏதேனும், ஒரு மொழியை கற்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதை, தமிழக அரசு ஏற்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையின், மற்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, குழு அமைக்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- குழு உறுப்பினர்களாக, சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் பிச்சுமணி; அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன்; மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன்; திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் தாமரைசெல்வி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- இக்குழு, தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும். இதேபோல், பள்ளி கல்வித் துறை சார்பில், தனி குழு அமைக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வங்க கடலில் இந்திய-ரஷ்ய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி
- வங்க கடலில் இந்திய ரஷ்ய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்தியாவும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. தொழில், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுகின்றன.
- கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும் இணைந்து ஆண்டு தோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு முன் கடைசியாக 2018-ம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சி நடத்தின.
- இந்திய-ரஷ்ய கடற்படைகளின் 11-வது கூட்டுப்பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு அழைப்பின் பேரில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில் இந்த பயிற்சி தொடங்கியது.
- 'இந்திரா நேவி-2020' என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில் ஏவுகணை அழிப்பு கப்பல் ரன்விஜய், சக்தி உள்ளிட்ட போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் கலந்துகொள்கின்றன.
- ரஷ்ய தரப்பில் அட்மிரல் வினோக்ராதோவ், அட்மிரல் டிரிபட்ஸ், போரிஸ் புடோமா போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன.கொரோனா பரவல் காரணமாக கடற்படை வீரர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் உரிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூட்டுப்பயிற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுவாமி விவேகானந்தர் அசாம் இளைஞர் அதிகாரமளித்தல் திட்டம்
- இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நோய் பாதிப்பால் புலம்பெயர்ந்தோர் உட்பட நாட்டில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.
- அவர்களுக்கு மீண்டும் வேலையை ஏற்படுத்தி கொடுக்க ஒவ்வொரு மாநில அரசும் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
- ரூ,1000 கோடி மதிப்புடன் சுய வேலைவாய்ப்பு திட்டத்தை மாநில அரசு துவங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தர் அசாம் இளைஞர் அதிகாரமளித்தல் (Swami Vivekananda Assam Youth Empowerment (SVAYEM)) என அழைக்கப்படும் இந்த திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வணிக முயற்சிகளைத் தொடங்க தலா ரூ.50,000 வரை பணமாக வழங்கும்.
- இது அடுத்த மூன்று மாதங்களில் எந்தவொரு வங்கி தொடர்பும் இல்லாமல் செலவிடப்படும். 2 லட்சம் பயனாளிகள் செப்.,1 க்கு முன் சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புக் குழுக்கள் போன்றவற்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்தின் நன்மைகளைப் பெற விரும்பும் குழுக்கள் செப்., 16 ஆம் தேதி தொடங்கப்படும் புதிய போர்ட்டலில் தங்களை பதிவு செய்ய முடியும்.
தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்
- நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- மாஸ்க் அணிவது, கைகளை சானிடைசர்கள், சோப்புகள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது போன்றவற்றை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில், பொது சுகாதார சட்டத்தில், தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
- அதன்படி மாஸ்க் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இருப்பதும் குற்றம்.கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது இச்சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் இச்சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். 'தமிழக அரசின் பொது சுகாதாரச் சட்டம் 1939'ல் தற்போது, 2வது முறையாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.