கடல் சார் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு செயற்கைகோளை ஏவியது சீனா
- நம் அண்டை நாடான சீனா அருகில் உள்ள அனைத்து நாடுகளுடன் பகைமையை பாராட்டிவரும் நிலையில் தற்போது உலக நாடுகள் சீனாவுக்கு எதிரக ஓரணியில் திரள ஆரம்பித்துவிட்டனர்.
- இந்நிலையில் சீனா இந்த சம்பவத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
- 'ஹையாங் 2 சி' என்ற அந்த செயற்கைக்கோள் 'லாங் மார்ச் 4 பி' என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது சீனா விண்ணுக்கு அனுப்பிய 3-வது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த புதிய செயற்கைக் கோள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா தனது கப்பல் ஏவுதளத்திலிருந்து ஒரே ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படை போர்க் கப்பல்களில் முதல்முறையாக 2 பெண் அதிகாரிகள்
- இந்திய கடற்படை தனது பணியிடங்களில் பெண் அதிகாரிகள் பலரை நியமித்திருந்தாலும் போர்க் கப்பல்களில் இதுவரை பெண்களை நியமிக்கவில்லை. நீண்ட பணிநேரம், பணியாளர்கள் தங்கும் இடங்களில் 'பிரைவஸிக்கு' வாய்ப்பில்லாதது, தனி குளியல் அறை போன்ற வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போர்க் கப்பல்களில் பெண்கள் நியமிக்கப்படவில்லை.
- இந்நிலையில் கடற்படையில் பாலின சமத்துவத்தை கொண்டு வரும் மற்றொரு முயற்சியாக போர்க் கப்பல்களில் முதல் முறையாக 2 பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
- சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி, சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இருவரும் கப்பல் பணியாளர்களில் ஒரு பகுதியாக, கடற்படை போர்க் கப்பல்களில் பணியமர்த்தப்படும் முதல் பெண் அதிகாரிகள் என்ற சிறப்பை பெறவுள்ளனர்.
- இவர்கள் போர்க் கப்பல்களில் உள்ள பன்னோக்கு ஹெலிகாப்டர்களில் சென்சார் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சிக்கு பிறகு கடற்படையின் புதிய எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர்.
- உலகின் மிக நவீன பன்னோக்கு ஹெலிகாப்டர்களாக எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்கள் கருதப்படுகின்றன. இவை, சென்சார் கருவிகள் மூலம் எதிரிகளின் ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.
- இந்த ரகத்தை சேர்ந்த 24 ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு கொள்முதல் செய்ய கடந்த 2018-ல் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்தார்.
- இதையடுத்து அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2021 தொடக்கத்தில் இந்த ஹெலிகாப்டர்களுக்கான டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த முதல் 5 ரபேல் விமானங்கள் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டன. அம்பாலாவில் இருந்து செயல்படும் விமானப் படையின் 'தங்க அம்புகள்' படைப் பிரிவில் இவை சேர்க்கப்பட்டன.
- ரஃபேல் படைப் பிரிவில் தற்போது விமானிகள் அனைவரும் ஆண்களாக உள்ளனர். இந்நிலையில் விமானப் படையில் தற்போதுள்ள 10 பெண் விமானிகளில் ஒருவரை ரஃபேல் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்கு விமானப் படை மாற்றியுள்ளது. பயிற்சிக்கு பிறகு இவர் ரஃபேல் விமானிகளில் ஒருவராக பணியாற்றுவார் எனத் தெரிய வந்துள்ளது.
மெக்னீஸியம் பயன்படுத்தி எலும்பு முறிவுக்கு சிகிச்சை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு
- எலும்புகளில் பயன்படுத்துவதற்கு சிறந்த உலோக கலவையாக மெக்னீஸியம் இருந்தாலும், எலும்பு முறிவுகளை சரிசெய்வதில் மெக்னீஸியம் உலோகக் கலவைகளின் பயன்பாடு சில சிக்கல்களால் தடை செய்யப்பட்டுள்ளது.
- இந்நிலையில், சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் முகேஷ் டோபிள் தலைமையிலான குழுவினா், நானோ தொழில்நுட்பம் கொண்டு மெக்னீஸியம் பூசப்பட்ட உலோக கலவையைப் பயன்படுத்தி, எலும்பு முறிவு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனா்.
- அதனை முதலில் முயலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்து, பரிசோதனை செய்துள்ளனா். இந்த முறையில் சென்னை ஐஐடி வெற்றி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மருத்துவ முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற பெரிய விலங்குகளின் எலும்பு முறிவுகளைச் சரிசெய்வதில், புதிதாக உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்பத்திலான மெக்னீசியம் உலோக கலவையைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளனா்.
- இதைத் தொடா்ந்து, மனிதா்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனா். இந்த ஆராய்ச்சி முடிவுகள், சா்வதேச நானோ மருத்துவ ஆராய்ச்சி இதழில் பிரசுரிக்கப்பட்டதோடு, இந்த மருந்துகளுக்கான காப்புரிமையும் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் புதிய 'ஏபி போலீஸ் சேவா' செயலி: ஜெகன் மோகன் துவக்கி வைப்பு
- ஆந்திராவில் புதிய போலீஸ் சேவை செயலியை மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திங்களன்று (செப்.21) துவக்கி வைத்தார்.
- 'ஏபி போலீஸ் சேவா' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய இயலும் அதற்கான ரசீதினையும் பெற முடியும். இந்த செயலி மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் தலைமை நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
- பொதுமக்கள் 87 வகையான போலீஸ் சேவைகளை போலீஸ் நிலையத்திற்கு போகாமலேயே பெற முடியும். தேவைப்படும் பட்சத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் டுவிட்டர் மூலமாக வீடியோ கால்களையும் அவசர காலங்களில் பயன்படுத்த முடியும்.
- முதல் தகவல் அறிக்கை, இ-சலான், பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்றவற்றின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளவும் முடியும்.
- சாலை விபத்துகள் நடந்தால் அது குறித்து உடனுக்குடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அம்மா நகரும் ரேசன் கடைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகளின் சேவையினைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாவிலைக்கடைகளின் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சாங் -5 சந்திர ஆய்வை துவங்க சீனா திட்டம் புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் மாநாடு
- சீனாவின் புஜியான் மாகாணத்தில் தலைநகரான புஜோவில் 2020 ஆம் ஆண்டுக்கான சீன விண்வெளி மாநாடு நடைபெற்று உள்ளது. தற்போது சீனாவில் சாங் 5 ஆய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இதன்படி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை திட்டமிட்டு, விரைவில் சாங் 5 ஆய்வு நிலவில் மென்மையாக தரை இறங்கி அங்குள்ள மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் என மூத்த ஆராய்ச்சியாளர் யூ அவர்கள் தெரிவித்துள்ளார்.
- தற்போது சீனா 3 கட்டங்களாக சோதனைகளை நடத்தி வருகிறது. அதாவது சுற்றுப்பாதை, தரை இறக்கம் மற்றும் திரும்புதல் ஆகியவற்றை திட்டமிட்டுள்ளது.
மின்சாரம், சூரிய சக்தியில் இயங்கும் புதிய வாகனங்கள் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
- வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, சுமார் 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
- இப்பயணத்தின் போது, துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இதன் தொடர்ச்சியாக, தற்போது, எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம், 140 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய ஆட்டோக்களை தமிழக முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- இந்த ஆட்டோக்களில், சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான் (பேனிக் பட்டன்), டேப் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எம் எலக்ட்ரிக் ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.