- அவரை அவர்கள் மோட்டாபென் (பெரிய அக்கா) என்று அன்புடன் அழைப்பார்கள். தன் வாழ்நாள் முழுக்க அதற்கேற்ப அவர் வாழ்ந்து காட்டினார். இந்தியாவின் தொழிலாளர் நல இயக்கத்தில் முன்னோடியாக இருந்த பெண்மணி அனுசுயா சாராபாய்.
- குஜராத்தில் அகமதாபாத்தில் 1885 ஆம் ஆண்டு வசதியான சாராபாய் குடும்பத்தில் பிறந்தவர் அனுசுயா. சிறுவயதாக இருந்தபோதே பெற்றோரை இழந்துவிட்டதால் மாமாவால் வளர்க்கப்பட்டார்.
- அந்தக் காலத்து வழக்கப்படி 13 வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்தத் திருமணம் நீடிக்கவில்லை. குறுகிய காலத்தில் அவர் தன் பிறந்த வீட்டுக் குடும்பத்துக்குத் திரும்பினார். அதன்பிறகு, அவரை கல்வியில் கவனம் செலுத்தும்படி அவரது சகோதரர் அம்பா லால் ஊக்குவித்தார். அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.
- தன் சகோதரருடன் அனுசுயா நெருக்கமாக இருந்தார். எதிர்காலத்தில் அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்படும் என்று அவர் நினைத்துப் பார்த்தது இல்லை. லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
- சோசியலிசம் குறித்த பேபியன் அமைப்பின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட அவர், இங்கிலாந்தில் பெண்களின் உரிமை இயக்கத்தில் பங்கேற்றார். ஆரம்ப காலத்தில் இவற்றில் பங்கேற்ற அனுபவங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பவையாக இருந்தன.
- அனுசுயாவின் ஒன்றுவிட்ட சகோதரியான கீதா சாராபாய், அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் பதிவு செய்து வைத்துள்ளார். துணை ஏதும் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் அளவுக்கு அனுசுயாவை எப்படி இங்கிலாந்து உருவாக்கியது என்பது பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
- பெர்னாட்ஷா, சிட்னி மற்றும் பீயட்ரிஸ் வெப் போன்ற சமூக சிந்தனையாளர்களின் உரைகளைக் கேட்டிருக்கிறார். மரியாதைக்குரிய சந்திப்பு நிகழ்வுகளில் பிறருடன் பங்கேற்கும் நடனத்தை கற்றிருக்கிறார்,
- அதிகம் புகைபிடிக்கும் பழக்கமும் சேர்ந்து கொண்டது. இதுமாதிரி இருந்த அனுசுயா பிற்காலத்தில் மாறுபட்ட வாழ்க்கை முறையைத் தேர்வு செய்தார். மகாத்மா காந்தியின் போதனைகளை தீவிரமாகப் பின்பற்றக் கூடியவராக அவர் மாறினார்.
- குடும்பப் பிரச்சனைகள் காரணமாக அனுசுயா சாராபாய் திடீரென இந்தியா திரும்ப வேண்டியதாயிற்று. பிறகு, பல்வேறு நலத் திட்டங்களில் அவர் பணியாற்றத் தொடங்கினார்.
- கேலிக்கோ மில் வளாகத்தில் பெண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான திட்டங்களாக அவை இருந்தன. அந்த மில் அவருடைய குடும்பத்திற்குச் சொந்தமானது தான். பெண்களும் அவர்களுடைய அரசியல் உரிமைகளும் என்று அவர் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார்.
- ஒரு சம்பவம் அவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அவரே அதை விவரித்துள்ளார். ``ஒரு நாள் காலையில் 15 தொழிலாளர்கள் மிகவும் களைப்புடன் செல்வதைப் பார்த்தேன். என்னவாயிற்று என்று நான் கேட்டேன். இடைவெளி இல்லாமல் 36 மணி நேரம் பணி முடித்துவிட்டுச் செல்கிறோம். 2 பகல் ஓர் இரவு முழுக்க வேலை பார்த்தோம் என்று அவர்கள் கூறினர்'' என்று அனுசுயா கூறியுள்ளார்.
- அவர்களுடைய நிலைமையை அறிந்து அதிர்ச்சி அடைந்த அனுசுயா, ஜவுளி ஆலைத் தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடுவது என முடிவு செய்தார். பணிச் சூழல், மனிதாபிமானமற்ற பணி நேரங்கள், வறுமை மற்றும் அடக்குமுறை பற்றி அதிகம் அறியும்போது, அவர்களுக்காக போராடுவது என்ற உறுதி அவரிடம் அதிகமானது.
- இதுவரையில் தனக்கு மிகவும் ஆதரவாக இருந்த தன் சகோதரருக்கு எதிராக, தன் குடும்பத்துக்கு எதிரானதாக இருந்தாலும் போராட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார்.
- பணிச் சூழலை நல்ல வகையில் மாற்ற வேண்டும் என்றும், குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1914ல் தொழிலார்களைத் திரட்டி அவர் 21 நாள் வேலைநிறுத்தம் நிகழ்த்தினார்.
- ஆனால் 1918 போராட்டம் தான் மிக முக்கியமானது. அப்போது சாராபாய் குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருந்த மகாத்மா காந்தி, அனுசுயாவிற்கு முன்னோடியாக அமைந்தார்.
- 1917 ஜூலையில் அகமதாபாத் நகரில் பிளேக் தொற்று நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் நகரைவிட்டு வெளியேறினர். தொழிலாளர்கள் வெளியேறுவதைத் தடுக்க முயன்ற ஜவுளி ஆலை முதலாளிகள், பிளேக் போனஸ் என சம்பளத்தில் கூடுதலாக 50 சதவீதம் போனஸ் தர முன்வந்தார்கள்.
- நோய்த் தொற்று தீவிரமாக இருந்த காலத்திலும் மில் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். நிலைமை சீரானதும், போனஸ் தருவதை மில் உரிமையாளர்கள் நிறுத்திவிட்டனர். பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
- அதனால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு, ஊதிய வெட்டு பிரச்சனை மேலும் சிரமங்களைத் தந்தது. இந்தப் பிரச்சனையை முன்னெடுத்துச் சென்று, தங்களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று அனுசுயாவிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
- ஆனால் அவ்வாறு தருவதற்கு மில் முதலாளிகள் தயாராக இல்லை. மாறாக ஆலைகளை மூடுவதற்குத் தயாராக இருந்தனர். மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர்.
- நிலைமையை சமாளிக்க மில் முதலாளிகள் ஒரு சங்கம் அமைத்துக் கொண்டனர். அனுசுயா சாராபாயின் சகோதரர் அம்பாலால் சாராபாய் அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
- முதலாளிகளின் நலன்களுக்காக சகோதரர் குரல் கொடுக்க, தொழிலாளர் நலனுக்காக சகோதரி குரல் கொடுக்க பாலிவுட் திரைப்படத்தைப் போன்ற சூழ்நிலையாக அது இருந்தது.
- ஏறத்தாழ 16,000 தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்களை அனுசுயா திரட்டினார். மகாத்மா காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த சகன்லால் மற்றும் அனுசுயா ஆகியோர் தினமும் காலையிலும், மாலையிலும் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினர்.
- அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தனர். அவர்களுடன் கலந்துரையாடி, மருத்துவ உதவிகளை அனுப்பினர். அந்த வேலைநிறுத்தம் ஏறத்தாழ ஒரு மாதம் நீடித்தது.
- ஒவ்வொரு நாள் காலையிலும் தொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் செல்வார்கள். நாங்கள் பின்வாங்க மாட்டோம் - என பதாகைகளில் எழுதப்பட்டிருக்கும். ஊர்வலத்திற்கு பல சமயம் அனுசுயா தலைமை வகித்தார்.
- ஆரம்பத்தில் தொழிலாளர்களைப் பார்த்து முகம் சுளித்த அந்த நகரவாசிகள், பின்னர், அந்தப் போராட்டம் எந்த அளவுக்கு ஒழுக்கத்துடன், சீரான முறையில் நடக்கிறது என்பதைப் பார்த்து வியந்து போனார்கள்.
- போராட்டம் தொடங்கி 2 வாரங்களில் தொழிலாளர்களும், மில் உரிமையாளர்களும் அமைதியிழந்தார்கள். ஆனால் சகோதரர் - சகோதரி முரண்பாடு நீங்கவில்லை. யாருமே சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை.
- பிறகு மகாத்மா காந்தி புதுமையான ஒரு தீர்வை முன்வைத்தார். அவர் மில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார் என்றாலும், மில் உரிமையாளர்கள், குறிப்பாக அம்பா லால் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.
- எனவே தனது ஆசிரமத்தில் மதிய உணவுக்கு அம்பா லாலையும் அனுசுயாவையும் காந்திஜி அழைத்தார். தினமும் அவர்கள் காந்திஜி ஆசிரமத்துக்குச் செல்வார்கள். அம்பா லாலுக்கு அனுசுயா உணவு பரிமாறுவார்.
- இது ஒரு வகையில் பிரச்சனைக்குத் தீர்வு காண உதவியது. ஏனெனில் அதன் பிறகு மில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் சமரசம் செய்து கொள்ள முன்வந்தனர். இறுதியில் 35 சதவீத ஊதிய உயர்வு தருவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
- 1920ஆம் ஆண்டில் மஸ்தூர் மகாஜன் சங்கத்தை அனுசுயா தொடங்கி அதன் முதலாவது தலைவரானார். 1927ல் அவர் ஜவுளி தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக கன்யாகுரு என்ற பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார்.
- வியாபாரிகள் மற்றும் மில் முதலாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த வழக்கத்திற்கு மாறான தொழிற்சங்கத் தலைவராக அனுசுயா இருந்தார். 1972ல் அவர் காலமானதற்கு முன்பு ஏறத்தாழ 2 லட்சம் தொழிலாளர்களின் தலைவராக இருந்தார்.
Anasuya Sarabhai / அனுசுயா சாராபாய்
September 06, 2020
0
Tags