தவில் வித்வான் அடையாறு சிலம்பரசனுக்கு உலக சாதனையாளர் விருது
- கர்னாடக இசையின் அங்கமான 108 தாளங்களையும் எப்படி கையாளவேண்டும் என்பதை காணொலியில் ஆவணப்படுத்தியதற்காக தவில் வித்வான் அடையாறு ஜி.சிலம்பரசனுக்கு 'இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் நியமனம்
- கடந்த 2018 ஜனவரியில், இந்திய தேர்தல் ஆணையராக அசோக் லவாசா நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2022 வரை உள்ளது.
- இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவர் திவாகர் குப்தா இந்த மாதம் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, அந்த பதவிக்கு அசோக் லவாசா நியமிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
- இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்தார். அவர் வருகிற 31-ந் தேதியுடன் தேர்தல் கமிஷன் பணியில் இருந்து வெளியேறுகிறார்.
- இதைத்தொடர்ந்து, அசோக் லவாசா இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்த 1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதிச்சேவை செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நல்லாசிரியர் விருது 2020
- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த இருவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இந்தாண்டுக்கான, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதில், நாடு முழுதும் இருந்து, 47 பேர், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில், விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப்; சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகியோர், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரி, காட்டேரிக்குப்பம், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வமுத்து குமரன் ராஜ்குமாரும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய பாலிஸ்டிக் ரக ஏவுகணை, க்ருஸ் ரக ஏவுகணையை அறிமுகப்படுத்தியது ஈரான்
- அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி, அந்த ஏவுகணைகளை ஈரான் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அவற்றை வெளியுலகுக்கு ஈரான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏவுகணைகள் சோதனை காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது.
- பாலிஸ்டிக் ஏவுகணை, தரையிலிருந்து பாய்ந்து சென்று 1400 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் வல்லமை உடையதாகும். க்ருஸ் ஏவுகணை 1,000 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் வலிமை கொண்டதாகும். பாலிஸ்டிக் ஏவுகணைக்கு அமெரிக்க தாக்குதலில் பலியான முன்னாள் தளபதி சுலைமானி பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி; இயக்குனர் பதவியுடன் தனி அங்கீகாரம் பெற்றது: தமிழக அரசு உத்தரவு
- தமிழ்நாடு போலீஸ் அகாடமி முன்னர் போலீஸ் பயிற்சிக்கல்லூரிக்கு கீழ் இருந்தது. தற்போது போலீஸ் அகாடமி இயக்குனர் அந்தஸ்த்துடன் தனி அமைப்பாக செயல்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
- கடந்த 2008-ம் ஆண்டு போலீஸ் அகாடமி உருவாக்கப்பட்டது. எஸ்.எஸ்.ஐயிலிருந்து உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வுக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கான 9 வார பயிற்சியும், நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வானவர்களுக்கான ஓராண்டு பயிற்சியும்,
- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் (கேட்டகிரி-1) டிஎஸ்பிக்களுக்கான ஓராண்டு பயிற்சியும், ஐபிஎஸ் தேர்வு முடிந்து தமிழக கேடர்களாக வருபவர்களுக்கான தமிழக ஏஎஸ்பிக்களாக நியமிக்கப்படும் முன் 5 வாரகால முன்பயிற்சி அனைத்தும் ஊனமஞ்சேரியில் உள்ள போலீஸ் அகடாமியில் அளிக்கப்படுகிறது.
- இதுதவிர புத்தாக்க பயிற்சிகள், மூன்று மாத கம்ப்யூட்டர் பயிற்சி, கஸ்டம்ஸ், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கும் முக்கிய பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
- தமிழகத்தில் காவலர் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி அந்தந்த மாவட்டங்களிலும், அஷோக் நகரிலுள்ள காவலர் பயிற்சிக்கல்லூரியிலும் நடக்கும்.
- இவை அனைத்தும் காவலர் பயிற்சிக்கல்லூரியின் கீழ் வரும். அதற்கு டிஜிபி அந்தஸ்தில் அதிகாரி உள்ளார். தற்போது கரன்சின்ஹா காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக உள்ளார்.
- இவருக்கு கீழ் போலீஸ் அகாடமி வரும். போலீஸ் அகாடமிக்கு திட்ட அதிகாரி என கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் ஒரு அதிகாரியும்,ஐஜி, டிஐஜி, எஸ்.பி தகுதியில் அதிகாரிகளும் உள்ளார். தற்போது அம்ரேஷ் புஜாரி போலீஸ் அகாடமியின் கூடுதல் டிஜிபியாக உள்ளார்.
- இந்நிலையில் தமிழ்நாடு போலீஸ் அகாடமியை லஞ்ச ஒழிப்புத்துறை போல் இயக்குனர் அந்தஸ்துடன் அமைப்பாக மாற்ற டிஜிபி அரசுக்கு பரிந்துரைத்தார். அதன் படி தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை இன்று போட்டுள்ளது. இனி போலீஸ் அகாடமி காவலர் பயிற்சிக்கல்லூரி டிஜிபியின் கீழ் வராது. அது தனி அமைப்பாகவும், இது தனி அமைப்பாகவும் இயங்கும்.
- போலீஸ் அகாடமியின் திட்ட அதிகாரி இனி போலீஸ் அகடாமியின் இயக்குனர் என்று அழைக்கப்படுவார். தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்த்தில் அதிகாரி உள்ளார். அவர் இனி இயக்குனர் போலீஸ் அகாடமி என அழைக்கப்படுவார்.
- அவருக்கு கீழ் ஐஜி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி கூடுதல் இயக்குனர் போலீஸ் அகாடமி என்றும், டிஐஜி அந்தஸ்து அதிகாரி இணை இயக்குனர் போலீஸ் அகாடமி, எஸ்பி அந்தஸ்து அதிகாரி துணை இயக்குனர் போலீஸ் அகாடமி எனவும் அழைக்கப்படுவர்.
- போலீஸ் அகாடமியில் இனி அனைத்து பயிற்சிகளும் இவர்கள் அதிகாரத்தின் கீழ் தனியாக செயல்படும். இதன் முதல் இயக்குனர் என்ற பெருமையை கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி பெறுகிறார்.