Type Here to Get Search Results !

தேசிய ஆள்தேர்வு முகமை (National Recruitment Agency - NRA)

  • மத்திய அரசு பணிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு செட் (Common eligibility Test - CET) அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான National Recruitment Agency என்ற ஏஜென்சியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
  • இப்போது அரசுப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், பல்வேறு பணிகளுக்கு, பல்வேறு ஆள்தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. அந்தப் பணிக்காக வரையறுக்கப்பட்ட தகுதி நிலைகளைக் கொண்டதாக அந்தத் தேர்வுகள் உள்ளன.
  • விண்ணப்பம் செய்பவர்கள் பல எண்ணிக்கையிலான ஆள்தேர்வு முகமைகளுக்குக் கட்டணம் செலுத்துவதுடன், தேர்வுகளை எழுத நீண்ட தூரத்துக்குப் பயணம் செல்ல வேண்டியுள்ளது.
  • பல தேர்வுகள் என்பது விண்ணப்பதாரர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. திரும்பத் திரும்பச் செலவிடுதல், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், தேர்வு நடத்துவதற்கான மையங்களை ஏற்பாடு செய்தல் என்ற வகையில் அந்தந்த ஆள்தேர்வு முகமைகளுக்கும் இது சுமையாக உள்ளது. சராசரியாக இந்த ஒவ்வொரு தேர்விலும் 2.5 கோடி முதல் 3 கோடி பேர் வரை பங்கேற்கிறார்கள்.
  • ஆனால் செட் எனப்படும் பொது தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம், விண்ணப்பதாரர்கள் ஒரு முறை தேர்வு எழுதிய பிறகு எந்தவொரு அல்லது இந்த அனைத்து ஆள்தேர்வு முகமைகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். உண்மையில் இது விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
  • பி மற்றும் சி பிரிவில் வரும் (தொழில்நுட்பம் சாராத) பணிகளுக்கு மாணவர்கள் பட்டியலை முதல்நிலையில் தயாரித்தலுக்கு, பொதுவான தகுதித் தேர்வை (சி.இ.டி. எனப்படும் செட்) தேசிய ஆள்தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) என்ற பன்முக முகமை நடத்தும்.
  • இந்த முகமையில் ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர்.
  • மத்திய அரசுப்பணியாளர் தேர்வில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை அமல் செய்தலுக்கான நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பாக என்.ஆர்.ஏ.வை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை இருக்கிறது.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைப்பதன் மூலம், தொலைதூரப் பகுதிகளில் உள்ள விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத உதவி செய்வதாக இருக்கும். 
  • வளரும் உத்வேகத்தில் உள்ள 117 மாவட்டங்களில் தேர்வு மையங்களை உருவாக்குவதற்கு சிறப்பு கவனம் தரப்படுவதால், தாங்கள் வாழும் பகுதிக்கு அருகில் தேர்வு மையம் அமையும் வசதி கிடைக்கும். செலவு, முயற்சி, பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்களில் விண்ணப்பதாரர்கள் பயன் பெறுவார்கள். 
  • தொலைதூர கிராமங்களில் வாழும் விண்ணப்பதாரர்களும் இத் தேர்வை எழுத உத்வேகம் கிடைக்கும் என்பதால், மத்திய அரசுப் பணிகளில் அவர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். வேலை வாய்ப்புகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதன் மூலம், இளைஞர்களின் வாழ்க்கை நிலையை எளிதாக்கும் நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • இப்போது பல்வேறு முகமைகள் நடத்தும், பல்வேறு தேர்வுகளை விண்ணப்பதாரர்கள் எழுத வேண்டியுள்ளது. இவற்றுக்குக் கட்டணங்கள் செலுத்துவதுடன், தேர்வுக்கு செல்வதற்கான பயணம், உணவு தங்குமிட வசதி உள்ளிட்ட செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். ஒரே தேர்வாக இதை நடத்தும்போது விண்ணப்பதாரர்களின் நிதிச் சுமை பெருமளவு குறைந்துவிடும்.
  • தொலைவில் உள்ள இடங்களுக்குத் தேர்வு எழுதச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் இட வசதிகளை செய்து கொள்வதற்கு பெண் விண்ணப்பதாரர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். தொலைவில் உள்ள மையங்களுக்குச் செல்வதற்கு, துணைக்கு ஒரு நபரை அவர்கள் தேட வேண்டியுள்ளது. 
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தேர்வு மையம் அமைவதால், பொதுவாக கிராமப்புற விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பாக பெண் விண்ணப்பதாரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • நிதி மற்றும் இதர சுமைகளைக் கருத்தில் கொண்டு, எந்தத் தேர்வுகளை எழுதலாம் என்று கிராமப்புற மாணவர்கள் முடிவு செய்ய வேண்டியுள்ளது. என்.ஆர்.ஏ. முறை வந்தபிறகு, ஒரு தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், பல பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுகிறார்கள். என்.ஆர்.ஏ. முகமை முதல்நிலைத் தேர்வை நடத்தும். மற்ற பல தேர்வுகளுக்கான முதல்கல்லாக இது இருக்கும்.
  • சி.இ.டி. மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், எத்தனை முறையும் எழுதலாம் விண்ணப்பதாரர்கள் பெறக்கூடிய மதிப்பெண்கள், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
  • செல்லத்தக்க மதிப்பெண்களில், அதிகபட்சமாக உள்ள மதிப்பெண் அந்த விண்ணப்பதாரரின் தற்போதைய மதிப்பெண்ணாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  • இந்தத் தேர்வை எத்தனை முறை எழுதலாம் என்பதற்கான வரையறை எதுவும் கிடையாது. வயது வரம்புத் தகுதி உள்ள வரையில் இத் தேர்வை எழுதலாம். அமலில் இருக்கும் அரசுக் கொள்கைகளுக்கு ஏற்ப எஸ்.சி. / எஸ்.டி. / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்படும்.
  • தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்கு நேரம், பணம் செலவிடுதல் மற்றும் முயற்சிகள் செய்வதில் எதிர்கொண்ட சிரமங்கள் ஆண்டுதோறும் நடைபெறும் இத்தேர்வின் மூலம் குறையும்.
  • எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆள் தேர்வு வாரியங்கள் மற்றும் ஐ.பி.பி.எஸ். சார்பில் நடத்தப்படும் பட்டதாரி, மேல்நிலை (12 ஆம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் மெட்ரிகுலேட் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) என்ற மூன்று நிலைகளில் தொழில் நுட்பம் அல்லாத பணிகளுக்கான பொது தகுதித் தேர்வுகளை என்.ஆர்.ஏ. நடத்தும். 
  • செட் (சி.இ.டி.) மதிப்பெண் அளவின் அடிப்படையில் முதல்நிலைத் தேர்வு முடிந்த பிறகு, சிறப்புத் தேர்வு முறைகளின் (நிலை 2, நிலை 3) அடிப்படையில் அந்தந்த ஆள்தேர்வு முகமைகள் ஆள் சேர்க்கைப் பணிகளைத் தொடரும்.
  • இந்தத் தேர்வுக்கான பாடங்கள் பொதுவானதாகவும், தரநிலைப் படுத்தியதாகவும் இருக்கும். இப்போது வெவ்வேறு பாடங்களைக் கொண்ட வெவ்வேறு தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்கு எதிர்கொள்ளும் சிரமங்களை பெருமளவு குறைப்பதாக இது இருக்கும்.
  • பொதுவான இணையவழி முனையத்தில் இதற்குப் பதிவு செய்து கொண்டு, தங்களுக்கு விருப்பமான தேர்வு மையங்களைக் குறிப்பிடலாம். இடவசதி இருப்பதைப் பொருத்து அந்த இடம் அவருக்கு அளிக்கப்படும். அதாவது, தங்களுக்கு விருப்பமான மையத்தில் தேர்வு எழுதும் உரிமை விண்ணப்பதாரர்களுக்கு இதன் மூலம் அளிக்கப்படுகிறது.
  • செட் தேர்வு (CET score) பல மொழிகளில் நடத்தப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இத் தேர்வில் பங்கேற்று, அனைவருமே சமமான வாய்ப்பைப் பெறுவதற்கு இது உதவிகரமாக இருக்கும்.
  • ஆரம்பத்தில் இத் தேர்வின் மதிப்பெண்களை மூன்று முக்கிய ஆள்தேர்வு முகமைகள் பயன்படுத்தும். இருந்தபோதிலும், மத்திய அரசின் வேறு ஆள்தேர்வு முகமைகளும் இந்த மதிப்பெண்களை காலப்போக்கில் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • மேலும், அரசு மற்றும் தனியார் துறைகள் பலவும், விருப்பத்தின் அடிப்படையில், இதை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எனவே, நீண்டகால நோக்கில், மத்திய அரசு, மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள், பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளின் ஆள்தேர்வு முகமைகளும் செட் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அந்தந்த முகமைகளின் பணச் செலவுகளையும், நேர செலவையும் இது மிச்சப்படுத்துவதாக அமையும்.
  • ஒரே தகுதித் தேர்வு என்பதால், ஆள்தேர்வு நடைமுறையை பூர்த்தி செய்வதற்கான காலம் கணிசமாகக் குறையும். இரண்டாம் நிலை தேர்வு எதுவும் இல்லாமல், செட் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆள்தேர்வை செய்யப் போவதாக சில முகமைகள் ஏற்கெனவே தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளன. 
  • உடல் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனைகள் மட்டுமே கூடுதலாக மேற்கொள்ளப்படும். இதனால் வேலை கிடைப்பதற்குக் காத்திருக்கும் காலம் பெருமளவு குறைவதுடன் இளைஞர்களுக்கு பயன் தருவதாக இருக்கும்.
  • தேசிய ஆள்தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) உருவாக்க அரசு ரூ.1517.57 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூன்று ஆண்டுகளில் செலவு செய்யக் கூடியதாக இருக்கும். என்.ஆர்.ஏ. அமைப்பதுடன், வளர்ச்சிக்கான உத்வேகம் கொண்ட 117 மாவட்டங்களில் தேர்வுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான செலவுகளையும் அரசு ஏற்கும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel