
கீழடி அகழாய்வில் எடை கற்கள் கண்டுபிடிப்பு
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் நேற்று எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலுார் ஆகிய இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றன.
- தற்போது கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டது. இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பும் தற்போது கண்டெடுக்கப்பட்டது.
- அந்த அகழாய்வு குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் நேற்று பல்வேறு அளவுகளில் கருங்கல்லால் ஆன நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உருளை வடிவில் அதன் கீழ்பகுதி தட்டையாகவும் உள்ளது.
- இந்த கற்கள் முறையே 8,18,150 மற்றும் 300 கிராம் எடையில் உள்ளன.இந்த அகழாய்வு பகுதியானது தொழிற்சாலை அமைப்பை கொண்டுள்ளது. உலை அமைப்பு, இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், மூலப்பொருட்களை உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- எனவே இங்கு தொழிற்சாலைகள் செயல்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார்.
- உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது சிந்தனைகளுக்கும், பொருள்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், @GoI_MeitY and @AIMtoInnovate ஆகியவை சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கியுள்ளன.
- உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் பொருள் இருந்தாலோ அல்லது இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்கான சவாலாகும்.
செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய 'போபோஸ்' துணைக்கோளை படம் எடுத்த மங்கள்யான் விண்கலம்
- செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், பல்வேறுகட்ட பயணங்களுக்குப் பின் 2014-ம்ஆண்டு செப்டம்பரில் அதன் சுற்றுப்பாதையை அடைந்தது.
- அதன்பின் கடந்த 5 ஆண்டுகளாக செவ்வாய்கிரகத்தை சுற்றிவந்து ஆய்வுசெய்து வருகிறது. அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
- ''செவ்வாய்க்கு மிக அருகில் இருக்கக்கூடிய அதன் மிகப்பெரிய துணைக்கோளான 'போபோஸை' கடந்த ஜூலை 1-ம் தேதி மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
- இந்த படங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து 7,200 கிமீ தூரமும்,'போபோஸ்' கோளில் இருந்து4,200 கிமீ தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
- தற்போது அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் பெரிய பள்ளம் உருவாகியுள்ளதை படங்களின் மூலம் காணமுடிகிறது.
- இந்த 'போபோஸ்', 'கார்போனசியஸ் சான்டிரைட்ஸ்' என்ற வகைவிண்கற்கள் கலவைகளாக இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்தின் பெரிய துணைக்கோளாக இருந்தாலும், இது நம் நிலவைவிட அளவில் சிறியதுதான் என்றுவிஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வா் பழனிசாமி நாட்டினாா்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூா் கிராமத்தில் 8.328 ஹெக்டோ பரப்பில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை நிறுவிட ரூ.381.76 கோடியை அனுமதித்து தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
- இதில், மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பாக ரூ.195 கோடியும், தமிழக அரசு 40 சதவீத பங்களிப்பாக ரூ.186.76 கோடியும் வழங்கவுள்ளன.
- முதல் கட்டமாக தமிழக அரசால் ரூ.110 கோடியும், மத்திய அரசால் ரூ.50 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி., - கோல் இந்தியா நிறுவனம் கூட்டு முயற்சி ஒப்பந்தம் கையெழுத்து
- நாடு முழுவதும் இயங்கக்கூடிய 5,000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த, கூட்டு முயற்சி நிறுவனம் அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய அரசின் நிலக்கரித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நவரத்னா அந்தஸ்துள்ள என்.எல்.சி., மற்றும் மகாரத்னா அந்தஸ்துள்ள கோல் இந்தியா நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் இயங்கக்கூடிய 5,000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த ஒரு கூட்டு முயற்சி நிறுவனம் அமைக்கும் ஒப்பந்தம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.
- இந்த ஒப்பந்தத்தில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர்கள் கையெழுத்திட்டனர். இந்நிறுவனத்தின் பங்கு விகிதம் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே 50 : 50 என்ற அளவில் இருக்கும்.
- நிலக்கரி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மற்றும் கோல் இந்தியா நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் இணைந்த திறன் மற்றும் நிபுணத்துவத்தினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டு முயற்சி நிறுவனம் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேஸில் கட்டாய முகக் கவச சட்டத்துக்கு ஒப்புதல்
- பிரேஸிலில் தெருக்கள், ரயில், பேருந்துகளில் முகக் கவசம் அணிந்து வருவதைக் கட்டாயமாக்கும் சட்டத்துக்கு அந்த நாட்டு அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
- எனினும், தேவாலயங்கள், பள்ளிகள், கடைகள், தொழிற்சாலைகளுக்கு வருவோா் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்ற அந்தச் சட்டத்தின் பிரிவை அவா் ரத்து செய்துள்ளது
- சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற இடங்களில் முகக் கவசத்தைக் கட்டாயமாக்குவது, தனியாா் அடிப்படை உரிமையைப் பறிப்பதால், அதனை ரத்து செய்ததாக அவா் விளக்கமளித்துள்ளாா்.
- இதுமட்டுமன்றி, பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு அரசே இலவசமாக முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என்ற பிரிவையும் பொல்சொனாரோ ரத்து செய்தாா்.
பழநி அருகே 3000 ஆண்டு பழமையான கல் திட்டைகள்
- திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி ஆமைக்கரடு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழநியாண்டவர் கல்லுாரி பண்பாட்டுத்துறை பேராசிரியர் அசோகன், பல ஆண்டுகள் பழமையான பத்துக்கும் மேற்பட்ட கல் திட்டைகளை நேற்று கண்டு பிடித்தனர்.
- இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் வழக்கமான கல்திட்டைகள் அமைப்பில் இருந்து மாறுபட்டு காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் கல் வீடுகள், புறாக்கூடு வடிவிலான கல் திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- ஆய்வில் இவை சங்க கால ஆய்வேளிர் அரசர்களின் நினைவிடங்கள் என தெரியவந்தது.தற்போது புதிதாக 10 க்கும் மேற்பட்ட சில கல் அமைப்புகளை கண்டறிந்தோம். அதில் பாறையின் மேற்புறத்தில் உருண்டை வடிவில் கல்லை வைத்து அதன் மேல் ஒரு தேங்காய் அளவில் கல் வைக்கப் பட்டுள்ளது.
- இதன் மேல் மேலும் ஒரு உருண்டை வடிவில் கல் வைக்கப்பட்டுள்ளது. தேங்காய் அளவிலான கல் இரண்டு உருண்டை கற்களுக்கு நடுவில் சொருகி வைக்கப்பட்டதை போல் அமைக்கப்பட்டுள்ளது.
- இவ்வமைப்பு 4 அடி உயரம் உள்ளது. மேலே உள்ள உருண்டை கல் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கல் திட்டைகளில் ஏழு, ஏழு கட்டங்களாக 49 கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கட்டடங்கள் தமிழர்களின் மறு பிறப்பு, ஏழ் பிறப்பு நம்பிக்கையை குறிப்பதாக எடுத்து கொள்ளலாம். இக்கல் திட்டைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது, என்றனர்.