பேரிடர் காலமென்பதால் தமிழகம் ,மத்தியரசுடன் இணைந்து ஆரோக்கியசேது போன்ற பல்வேறு செயலி மற்றும் இணையதளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
கொடிய தீநுண்மி கொரானாவால் மக்கள் வெளியே இயல்பாக நடமாட இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு சென்றால் கொரொனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் , வீட்டிலிருந்தபடியே, தங்கள் உடல் நலம் குறித்த சந்தேகங்களை ,உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளாக பெறும் வகையில், இணையத்தில் இ சஞ்ஜீவினியை நம் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அறிமுகம் செய்துள்ளனர்.
கொரோனா அறிகுறி நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் பிற நோயாளிகளுக்கும் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த இ சஞ்ஜீவினி.
இந்திய அளவில் முதற்கட்டமாக 15 மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள இச்சேவை தமிழகத்தை பொறுத்தவரை விடுமுறையின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை செயல்படுகிறது.
சிறப்பம்சங்கள்
அங்கு இதுவரை இ சஞ்சீவினியால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை , இதுவரை ஆலோசனைகள் வழங்கப்பட்ட மொத்த நேரம்,மருத்துவர்கள் நோயாளிகளுடன் கலந்துரையாடிய சராசரி நிமிடம் ,சேவையை வழங்குவதற்கு தற்போது தயார் நிலையில் உள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் இணையதளத்தின் முகப்பக்கத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அதே பக்கத்திலேயே மாநில வாரியாக, தற்போது ஆலோசனைகள் வழங்க தயார் நிலையில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்கு அடுத்த பக்கமான esanjeevaniopd யில் பதிவு செய்து பயன்பெறுவதற்காக வழிமுறை விளக்கப்படமானது தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக உள்ள dashboard பக்கத்தில் இ சஞ்சீவினி சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை செயல்படுத்தப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை மாநில, மாவட்ட வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
Timing பக்கத்தில் இச்சேவை செயல்படும் நேரம் மற்றும் விடுமுறை நாட்களின் விவரங்கள் மாநில வாரியாக கொடுக்கப்பட்டு வருகின்றன. அலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இ சஞ்ஜீவினியில் ஆலோசனை பெறுவது எப்படி என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
நோயாளியாக பதிவு செய்து ஆலோசனை பெற patient registration பிரிவில் நுழைந்து உங்கள் அலைபேசி எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
பின்னர் உங்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யுங்கள். அதை தொடர்ந்து நோயாளியாக பதிவு செய்து ,டோக்கன் பெறுவதற்க்கான பக்கம்.
திறந்தவுடன் உங்கள் பெயர், பாலினம், மின்னஞ்சல் முகவரி, வயது, மாநிலம், மாவட்டம், பெருநகரம், வீட்டு விலாசம் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
நீங்கள் தினசரி மருந்து எடுத்துக்கொள்பவர் அல்லது நாள்பட்ட நோயாளி என்றால் உங்களது முந்தைய பரிசோதனை தரவுச்சீட்டுகளை, புகைப்படங்களாகவோ அல்லது கோப்புகலாகவோ மாற்றி குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
டோக்கன் பெருவதற்க்கான பக்கத்தை முழுமையகாக பூர்த்தி செய்து முடித்தபின், குறுஞ்செய்தியாக வந்த கடவுச்சொல்லை மீண்டும் உள்ளீடு செய்யுங்கள்.
விவரங்கள் தரவு செய்யப்பட்டு உங்களுக்கான நோயாளி எண் மற்றும் டோக்கன் எண்ணானது நீங்கள் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்க்கு மற்றொரு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அந்த இரு எண்களையும் பதிவு செய்தால் நீங்கள் காத்திருப்போர் பக்கத்திற்க்குள் நுழைந்து விடுவீர்கள்.
மருத்துவருக்கு அழைப்பு விடுப்பதற்கான நேரம் தொடங்கியவுடன், அழைப்பை உறுதி செய்யுங்கள். பின்னர் சிறிது நேரத்தில் காணொலி வாயிலாக மருத்துவர் உங்களுடன் இணைவார். மருத்துவ ஆலோசனைகள் பெற்றவுடன் e-priscription பக்கத்திற்கு சென்று மருந்துச்சீட்டினை பதிவிறக்கம் செய்து மருத்துகளை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மருந்துக்கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
அடிக்கடி கைகளை கழுவுதல்,கட்டாய முகக்கவசம்,தனிமைபடுத்திக் கொள்ளுதல், சமூக விலகல் போன்ற போன்ற வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து வரும் நாம், அரசு ஏற்படுத்தி தரும் இது போன்ற சிறப்புத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்வது ,கொரொனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும். அண்மை செய்திகளையும்,உறுதி படுத்தப்பட்ட உண்மை செய்திகளையும் உள்ளது உள்ள படி உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும்.