பக்தர்கள் இல்லாமல் நடத்தலாம் பூரி தேரோட்டத்துக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா மிகவும் உலக பிரசித்தி பெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர் திருவிழாவிற்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
- அதை ஏற்று, உச்ச நீதிமன்றமும் கடந்த 18ம் தேதி தேர் திருவிழாவுக்கு தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவை மாற்றும்படி கோரி ஜகன்நாத் சான்ஸ்கிருதி ஜகரானா மன்ச் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
- அதில், 'இந்த ஓராண்டு தோரோட்டம் தடை பட்டால், 12 ஆண்டுகளுக்கு நடத்த முடியாமல் போகும். எனவே, பக்தர்களின்றி தேர் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்,' என்று கோரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
- முன்னதாக, மக்களின் சுகாதாரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், மாநில அரசும், கோயில் அறகட்டளையும் இத்தேர் திருவிழாவை நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, 'பக்தர்கள் பங்கேற்க கூடாது' என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன், பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழாவை நடத்துவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
- பூரி தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி தொடங்கி, 9 நாட்கள் நடப்பது வழக்கம். உச்ச நீதிமன்றம் கடைசி நேரத்தில் நேற்று அனுமதி அளித்ததால், இன்று தேரோட்டம் துவங்குமா? என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், திட்டமிட்டப்படி இன்றே தேரோட்டம் தொடங்கும் என அறிிவிக்கப்பட்டுள்ளது.
- நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும், 'தேரோட்டத்தை நடத்தும் பொறுப்பை மாநில, மத்திய அரசுகள் மற்றும் கோயில் அறக்கட்டளையிடம் விட்டு விடுகிறோம். இந்த உத்தரவு ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு கோயில் களுக்கு பொருந்தாது,' என்றும் தெரிவித்தனர்.
- உச்ச நீதிமன்றம் நிபந்தனை - ஒவ்வொரு தேரையும் 500 பேர் மட்டுமே இழுக்க வேண்டும், இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும், தேரோட்டத்தின்போது மக்கள் கூடுவதை தடுக்க, பூரியில் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அமெரிக்க அரசு கடன்பத்திர முதலீடு: இந்தியாவுக்கு 12-ஆவது இடம்
- அமெரிக்க கடன்பத்திரங்களில் கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக குறைந்து 15,650 கோடி டாலராக இருந்தது. ஆனால் அதன்பிறகு, ஏப்ரல் மாதத்தில் அந்த முதலீட்டை கூடுதலாக 90 கோடி டாலா் அதிகரித்து 15,740 கோடி டாலராக உயா்த்திக் கொண்டுள்ளது.
- கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் அமெரிக்க கடன்பத்திரங்களில் இந்தியாவின் முதலீடு வரலாற்று உச்சமாக 17,750 கோடி டாலரை எட்டியிருந்தது. அதன்பிறகு மாா்ச்சில் அதன் மதிப்பு கணிசமாக குறைந்தது. ஜனவரியில் இது 16,430 கோடி டாலராக காணப்பட்டது.
- ஏப்ரல் இறுதி நிலவரப்படி ஜப்பான் அமெரிக்க கடன்பத்திரங்களில் 1.266 டிரில்லியன் டாலா் முதலீட்டை மேற்கொண்டு முதலிடத்தில் உள்ளது.
- இதைத் தொடா்ந்து, சீனா (1.073 டிரில்லியன் டாலா்), பிரிட்டன் (36,850 கோடி டாலா்) ஆகிய நாடுகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.