
ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருதுக்கு தேர்வு முன்னாள் கேப்டன் கிளார்க் தேர்வு
- ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.
- அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 'ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா' என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 39 வயதான மைக்கேல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த விருதை ஏற்கனவே முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாக், ஆலன் பார்டர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிக்கை தாக்கல்
- அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
- இந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
- இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், உள்ளிட்டோரிடம் கருத்துகளைப் பெறுவதற்கான கூட்டங்களை நடத்தியது.
- மே மாதம் முடிவில் அறிக்கை தாக்கல் செய்ய அரசாணை வெளியிட்டப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக அறிக்கையை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஜூன் 15ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.
- இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தனது அறிக்கையை இன்று சமர்பித்தது.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15 விழுக்காடு வரை மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிப்பதற்கு பரிந்துரக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- அரசு, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், ஆதி திராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் இயற்ற அரசு பரிசீலிக்கவுள்ளதாக கடந்த மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
- ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25}ம் தேதி மாநில தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 4 இடங்களில் அளவீடு செய்யப்பட்டு, அகழாய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- திங்கள்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியில் பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகளும் அதன் அருகே 2 கைமூட்டு எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.
- ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடத்தப்பட்டும், அதன் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் ரூ.265 கோடியில் புதிய பாலங்கள்-சாலைகள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்
- தமிழகத்தில் ரூ.265 கோடியில் அமைக்கப்பட்ட புதிய பாலங்கள், சாலைப் பணிகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
- மதுரை மாவட்டம் காளவாசல் சந்திப்பில் கட்டப்பட்ட நான்கு வழித்தட சாலை மேம்பாலத்தை முதல்வா் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தாா். மதுரை மாவட்டம் செல்லூரில் சாலை மேம்பாலத்தின் வலதுபுறத்தில் கட்டப்பட்ட சேவை சாலை, மதுரை வடக்கு மற்றும் மேற்கு வட்டங்களில் எம்.ஜி.ஆா் பேருந்து நிலையம் முதல் சா்வேயா் காலனி, மதுரை-அழகா்கோவில்-மேலூா் சாலை, மூன்றுமாவடி-ஐயா்பங்களா-பிஅன்ட்டி நகா்-ஆலங்குளம்-செல்லூா் குலமங்கலம் சாலையில் தொடங்கி கூடல் நகா் வானொலி நிலையம் வரையிலான சாலைகள் தரம் உயா்த்தி அகல்படுத்தப்பட்டுள்ளன.
- இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்-பள்ளிப்பாளையம்-ஜேடா்பாளையம்-பாண்டமங்கலம்-வேலூா் சாலையில் பள்ளிப்பாளையம் ரயில்வே நிலையத்துக்கு அருகில் வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை, திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை-நாட்றம்பள்ளி சாலையில் ஜோலாா்பேட்டை மற்றும் கேதாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய சாலை மேம்பாலம், அரியலூா் மாவட்டம் பெரம்பலூா் - தஞ்சாவூா் சாலையில் ரயில்வே கடவுக்குப் பதிலாக புதிய சாலை மேம்பாலம் ஆகியன கட்டப்பட்டுள்ளன.
- மேலும், புதுக்கோட்டை சித்திராம்பூரில் பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி-கூகுடி சாலையில் புதிய பாலம், திருவள்ளூா் மாவட்டம் நசரத்பேட்டையில் பல்வழி பரிமாற்ற மேம்பாலம், சென்னை கிண்டியில் பயிற்சி மையக் கட்டடம் ஆகியன புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
எல்லையில் 11,800 பேருக்கு வேலை ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல்
- லடாக்கில், சீன எல்லை அருகே, சாலை, பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை, எல்லை சாலைகள் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இப்பணிகளுக்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 11 ஆயிரத்து, 800 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
- இவர்களில், 8,000 பேர், லடாக்கிலும், எஞ்சியோர், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் எல்லையோர சாலை அமைப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவர்.
- வழக்கமாக, இத்தகைய பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால், இம்முறை, நிலையான ஊதியப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- அத்துடன், வழக்கத்தை விட, 15 - 20 சதவீத ஊதிய உயர்வுடன், மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக, எல்லை சாலைகள் நிறுவனத்திற்கும், ஜார்க்கண்ட் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- அதன் அடிப்படையில், எல்லை சாலைகள் நிறுவனம், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த, ஜார்க்கண்ட் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட புதிய ரோந்துக் கப்பல் "சுஜய்'
- ஒடிஸா மாநிலம், பாராதீப் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்த ஐ.சி.சி.எஸ் சுஜய் என்ற ரோந்துக் கப்பல், கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் இணைக்கப்பட்டது.
- இந்திய கடலோரக் காவல்படை வடகிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்ட ஒடிஸா மாநிலம் பாராதீப் பகுதி கண்காணிப்பு நிலையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ரோந்துக் கப்பலான ஐ.சி.சி.எஸ். சுஜய், கிழக்கு பிராந்திய ரோந்துப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
- மேலும், இக்கப்பல் இணைக்கப்பட்டதற்கான சான்றிதழை கப்பலை வழிநடத்தும் அதிகாரியான டி.ஐ.ஜி அனுராக்கிடம் பரமேஷ் ஒப்படைத்தார்.
- உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்ட இக்கப்பல், 2017 ஆண்டு டிச.21-ஆம் தேதி இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டது.
- இதனையடுத்து தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வந்த இக்கப்பல், நிர்வாக காரணங்களுக்காக பாராதீப் கண்காணிப்பு மையத்தின் கட்டுப்பாட்டிலிருந்து சென்னை மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து, இக்கப்பல் திங்கள்கிழமை முறைப்படி கிழக்குப் பிராந்திய தளபதியில் ஆளுகை மற்றும் நிர்வாகத்தில் முறைப்படி இணைக்கப்பட்டது.
- அதிநவீன வசதிகள்: "சுஜய்' எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கப்பல் சுமார் 105 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இக்கப்பலில் ரோந்து மற்றும் மீட்பு பணிகளுக்குத் தேவையான அனைத்து அதிநவீன வசதிகளும் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளன.
- 30 மி.மீ. விட்டம் கொண்ட சி.ஆர்.என். 91 துப்பாக்கி, கடல்சார் வழிகாட்டி சாதனங்கள், தொலைதொடர்பு கருவிகள், ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை, தீயணைப்புக் கருவிகள், எண்ணெய்க் கசிவை நீக்கும் கருவிகள் உள்ளிட்டவை இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
- மேலும், அவசர காலத்தில் இயக்குவதற்கான ஐந்து படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள இக்கப்பல், மணிக்கு சுமார் 26 கடல் மைல் வேகம் செல்லக் கூடியது. இருபது நாள்கள்வரை தொடர்ந்து கடலில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. கேப்டன், 12 அதிகாரிகள் மற்றும் 94 வீரர்கள் இதில் பணியாற்றுவதற்கு இணைக்கப்பட்டுள்ளனர்.
சுவீடன் நாட்டுக்கான இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம்
- மோனிகா கபில் மோஹ்தா, இவர் இதற்கு முன் போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
- கடந்த 2011ம் ஆண்டு ஜூலை முதல் ஜனவரி 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கூறிய இரு நாடுகளின் இந்திய தூதராக இருந்துள்ளார்.
- இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மோனிகாவை, சுவிட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக மத்திய அரசு நியமனம் செய்து உள்ளது.
20 நிமிடத்தில் தொற்று கண்டறியும் குறைந்த விலை கொரோனா கிட்: ஐஐடி- ஹைதராபாத் சாதனை
- கோவிட்-19 தொற்றை 20 நிமிடங்களில் உறுதிப்படுத்தக்கூடிய குறைந்த விலை உற்பத்தி செலவைக் கொண்ட சோதனைக் கிட் தயாரிக்கப்பட்டுவிட்டதாக ஐஐடி ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தற்போது பின்பற்றப்பட்டு வரும் RTPCR முறையில் இல்லாமல், அதற்கு மாற்று முறை இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் அவர்கள், 550 ரூபாய்க்கு தயாரிக்கப்பட்ட ஒரு சோதனைக் கிட்டை, பெரிய அளவில் தயாரிக்கும்போது அதற்கு 350 ரூபாய் மட்டுமே போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர்.
- கொரோனா பரிசோதனைக்கான முதல் சோதனைக் அனுமதியை வாங்கியது ஐஐடி டெல்லி. நாட்டிலேயே இரண்டாவதாக, தற்போது ஐஐடி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த குறைந்த விலை கோவிட் கிட்டை உருவாக்கியுள்ளனர்.