
குடும்ப அட்டை மூலமாக 13 கோடி இலவச முகக்கவசங்கள் - தமிழக அரசு அறிவிப்பு
- தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்தது.
- இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக குடும்ப அட்டை மூலமாக விலையில்லா முகக்கவசங்களை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்ப அட்டைகள் மூலமாக 13.08 முகக்கவசங்கள் அளிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது. ஆலோசனையில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- தமிழகம் சார்பாக பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.கே.மணிவாசன் கலந்துக் கொண்டார். அப்போது, மேகதாது அணை கட்டுவது தொடர்பான கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசு தரப்பின் கருத்திற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, மேகதாது அணை கட்டுவது தொடர்பான கோரிக்கை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
- மேலும், தமிழகத்திற்கு இம்மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 335 கோடி நிதி ஒதுக்கீடு
- 15வது நிதிஆணையம் அளித்த பரிந்துரையின்படி வருவாய் பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தனது வருவாயில் பகிா்ந்தளிக்க கூறியிருந்தது. இதன்படி தவணை முறையில் மத்திய அரசு இந்த கூடுதல் மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.
- மத்திய நிதித்துறையின்செலவினங்களுக்கான பிரிவு மூன்றாவது தவணையாக 14 மாநிலங்களுக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 6157.74 கோடியை வருவாய் பற்றாக்குறைக்கு மானியமாக பிரித்தளித்து புதன்கிழமை உத்தரவிட்டது.
- இதில் தமிழகத்திற்கு ரூ. 335.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம்(ரூ.631 கோடி), நாகாலாந்து(ரூ.326 கோடி), சிக்கிம் (ரூ.373 கோடி) போன்ற சிறிய வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இது மட்டுமல்ல ஆந்திரம்(ரூ.491கோடி), ஹிமாசல பிரதேசம்(ரூ.952 கோடி), உத்தரகண்ட் (ரூ.423 கோடி), கேரளம் (ரூ.1,276 கோடி), மேற்கு வங்கம்(ரூ417 கோடி) போன்ற கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைவாகயுள்ள மாநிலங்களுக்கு தமிழகத்தை விட கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
- இது தவிர மத்திய அரசு பிரதமரின் வேளாண் நீா்ப்பாசன திட்டத்தில் 'ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்' என்கிற துணை திட்டத்திற்கு மத்திய அரசு 2020-21 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 4000 கோடியை ஒதுக்கியுள்ளது.
- வயல்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது, சொட்டு நீா், தெளிப்பு நீா் பாசனம், உரப்பயன்பாடு போன்ற தொழில் நுட்பங்களை இந்த திட்டங்களில் கையாளப்படுகிறது.
- மேலும் நபாா்டு வங்கியுடன் இணைந்து மத்திய வேளாண்மைத்துறை விவசாயிகளை குறு நீா்ப்பாசனத்தில் ஊக்குவிக்கிறது. இதற்கு 'குறு நீா்ப்பாசன நிதியம்' ஒன்றை உருவாக்கி இதற்கு ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு 1.76 லட்சம் ஹெக்டோ நிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ. 478.79 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இவ்விரு நிதிகளையும் சோத்து தமிழகம் ரூ. 814.20 கோடி பெறுகிறது.
மெகா சோலார் மின் உற்பத்தி திட்டம்- அதானி கிரீன் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு
- இந்திய சோலார் ஆற்றல் கழகத்தின் சோலார் மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தத்தைஅதானி கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் மொத்த உற்பத்தி திறன் 8 ஜிகாவாட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 ஜிகாவாட் சோலார் செல் உற்பத்தி திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.45 ஆயிரம் கோடி ஆகும்.
- இந்த சோலார் மின் உற்பத்தி திட்டம் மிகப்பெரியதாக இருக்கும் என அதானி கிரீன் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளது.
12ம் நுாற்றாண்டு கல்வெட்டு உத்திரமேரூரில் கண்டெடுப்பு
- உத்திரமேரூர், அங்காள பரமேஸ்வரி கோவில் குளக்கரை அருகே, 12ம் நுாற்றாண்டைச் சார்ந்த துண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி தலைமையிலான குழுவினர், உத்திரமேரூர் வட்டாரத்தில், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 71 செ.மீ., நீளமும், 33 செ.மீ., அகலமும் உடைய கல்வெட்டை, கண்டெடுத்தனர்.
- உத்திரமேரூர் அங்காள பரமேஸ்வரி கோவில் குளக்கரை அருகே, கற்குவியல்களுக்கு இடையில், கேட்பாரற்று கிடந்த கல்வெட்டில், நான்கு வரிகள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. இது, துண்டு கல்வெட்டு என்பதால், நான்கு வரிகளும் தொடர்பின்றி உள்ளது.மேலும், இக்கல்வெட்டில், ஆண்டு, மன்னர் பெயரும் இல்லை.
அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.51 லட்சம்: தமிழக ஆளுநா் ஒதுக்கீடு
- ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தனது விருப்புரிமை நிதியில் இருந்து சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.51 லட்சம் வழங்க நிதியை ஒதுக்கீடு செய்துள்ளாா்.
- அதன்படி, முதல் தவணையாக ரூ.11 லட்சத்தை கடந்த ஏப்ரல் மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூ.40 லட்சத்தை கடந்த 9-ஆம் தேதியும் வழங்கியதாக ஆளுநா் மாளிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உச்சரிக்க அரசாணை வெளியீடு
- தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்நிலையில் அந்தந்த ஊர்கள் தமிழில் அழைக்கப்பட்டாலும் சில ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே இன்றும் வழக்கத்தில் உள்ளது.
- இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
- உதாரணமாக சென்னையில் உள்ள எழுப்பூர் ஆங்கிலத்தில் எக்மோர் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் எழுப்பூர் என்றே அழைக்கப்படும்.
ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.4000 கோடி ஒதுக்கீடு
- பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் ஒரு பகுதியான "ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல்" என்ற துணைத் திட்டத்தினை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.
- இந்தத் திட்டம் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனமுறைகளில், வயல்களில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- சொட்டு நீர்ப் பாசன தொழில்நுட்பமானது, நீரை சேமிப்பது மட்டுமல்லாமல் உரப்பயன்பாடு, தொழிலாளர் ஊதியம் மற்றும் பிற செலவினங்களையும் குறைக்கிறது.
- நடப்பாண்டில், இத்திட்டத்திற்காக ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடையக்கூடிய பயனாளிகளை மாநில அரசுகள் கண்டறிந்துள்ளன.
- சில மாநிலங்களுக்கு, 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நபார்டு வங்கியுடன் இணைந்து, ரூ.5000 கோடி மதிப்புள்ள குறு நீர்ப்பாசன நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதுவரை, குறு நீர்ப்பாசன நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ.478.79 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ.616.14 கோடியும் நபார்டு வங்கி வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1.76 லட்சம் ஹெக்டேர் நிலம் பயன்பெறும்.
பசுவைக் கொன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை - உ.பி.யில் அவசரச் சட்டம்
- அனுமதியின்றி மாட்டு இறைச்சியை எடுத்துச் சென்றால் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநரும் கைது செய்யப்படுவார்கள் என அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
- பசு வதைக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
- குற்றவாளிகள் தலைமறைவானால் அவர்களது புகைப்படங்களை பொது இடங்களில் ஒட்டவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இறைச்சிக்காக கொல்வதற்கு கொண்டு செல்லப்படும் பசுக்கள் மீட்கப்படும்போது, ஒரு வருடத்திற்கு அவற்றிற்கான பராமரிப்பு செலவை குற்றவாளிகளே ஏற்க வேண்டும் என்றும் அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.