பிரதமா் நிவாரண நிதி: பாதுகாப்புப் படையினா் 11 மாதங்களுக்கு ஒருநாள் ஊதியம் அளிக்க ராஜ்நாத் ஒப்புதல்
- கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்ய பாதுகாப்புப் படையில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் அடுத்து வரும் 11 மாதங்களுக்கு, தலா ஒருநாள் வீதம் தங்களது ஊதியத்தை சுய விருப்பத்தின் பேரில் வழங்கிடும் முன்மொழிவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
- ஆயுதப்படையினா், பாதுகாப்புப்படை வீரா்கள் உள்பட சுமாா் 15 லட்சம் பேரின் இந்தப் பங்களிப்பு மூலமாக மொத்தம் சுமாா் ரூ.5,500 கோடி நிதி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஏற்கெனவே ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊழியா்கள் கடந்த மாதம் தங்களது ஒருநாள் ஊதியப் பங்களிப்பாக ரூ.500 கோடியை பிரதமா் நிவாரண திட்டத்தின்கீழ் அளித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் கடை திறக்க தடை இல்லை: 3 நாளைக்கு ஒருமுறை தான் வாங்க முடியும் ஆன்லைனில் விற்க அனுமதி
- கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 7 ம் தேதி திறக்கப்படுவதை எதிர்த்து வக்கீல்கள் ஜி.ராஜேஷ், கே.பாலு, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யாநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மதுக் கடைகளை திறந்தால் நோய் தொற்று பெருமளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்து விடும், மதுபானம் அத்தியாவசிய பொருள் அல்ல, டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் முக்கிய மையமாக மாறிவிடும், சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படும்.
- உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள் என்பதை காரணம் கூறி அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும்.
- மருத்துவ ரீதியாக தற்போது மதுக் கடைகள் திறப்பது உகந்ததல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள 17ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று வாதிட்டார்.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கினால் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 750 மிலி அளவில் 2 பாட்டில்கள் வழங்க அனுமதிக்க வேண்டும்.
- கடைகளுக்கு நேரடியாக சென்று வாங்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு 750 மிலி 1 பாட்டில் வீதம் டோக்கன் முறையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மது வாங்கியவரின் பெயர், ஆதார் எண், முகவரி, சேகரிக்க வேண்டும்.
- ஒருமுறை வாங்கியவருக்கு அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகே மீண்டும் மது வாங்க அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளரின் மதுவுக்கான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும்.
- விதிமுறை மீறும் மதுக்கடைகளை நீதிமன்றம் தொடர்ந்த கண்காணிக்கும். விதிமுறை மீறினால் கடைகள் உடனடியாக மூட நேரிடும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மே 14 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
- கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும், இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை:
- வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும், இ-பாஸ் வழங்குவதை கண்காணிக்க கட்டுப்பாட்டறை அமைத்து அதற்கான அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறையின் சிறப்பு செயலாளர் பின்கி ஜோவல், தமிழ்நாடு கேபிள் டிவி பொது மேலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் பொதுமேலாளர் சாந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர் ஏற்றுமதிக்கு தடை மத்திய அரசு உத்தரவு
- கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்று கைகளில் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை அவ்வப்போது பயன்படுத்துவதுதான் ஆகும். இது கொரோனா கிருமியை ஒழிக்க கூடியது என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்கள்.
- அங்கு சானிட்டைசர்கள் பயன்பாடு என்பது கட்டாயம் ஆகும். எனவே இவற்றுக்கான தேவையும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் நோய் பாதிப்பால் அச்சமடையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால், மற்றொரு பக்கம் ஆலைகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லக்கூடிய மக்களும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
- எனவே ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்களின் ஏற்றுமதிக்கு தடையை விதித்துள்ளது மத்திய அரசு. ஏற்கனவே வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.