- கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் டிராவல் ஹிஸ்டரியை வாட்ஸ்அப் கார்டாகப் பகிர்ந்து எச்சரிக்கை செய்கிறது.
- மேலும், அடுத்த கட்டமாகப் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. `GCC CORONA Monitoring' என்னும் ஆப் மூலம், சென்னை மக்களை காய்ச்சல் இருந்தால் பதிவுசெய்ய அறிவுறுத்தியுள்ளது.
- மிக எளிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி குறித்து அழகு பாண்டிய ராஜா (Research Fellow, Ministry of Housing and Urban Affairs and Greater Chennai Corporation) என்பவரிடம் பேசினோம்.
`GCC CORONA Monitoring' செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
- முதலில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள், ப்ளே ஸ்டோரில் `GCC CORONA Monitoring' என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். (ஆப்பிள் மொபைலுக்கும் விரைவில் இந்த ஆப் வருகிறது)
- பின்னர் செயலியினுள் செல்ல, அது உங்கள் மொபைல் எண் கேட்கும். அதைப் பதிவுசெய்ய வேண்டும். வேறு தகவல்கள் எதையும் தர வேண்டாம்.
- பதிவுசெய்யப்பட்ட எண்ணுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) வரும். அதைப் பதிவுசெய்ய வேண்டும்.
- இப்போது இரண்டு ஆப்ஷன் இருக்கும். ஒன்று குவாரன்டைன் மற்றொன்று சாதாரண காய்ச்சல்.. அதில் எதைத் தேர்வு செய்தாலும் புகைப்படும் எடுக்க கேமரா ஆன் ஆகிவிடும்.
- உங்களின் புகைப்படம்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. வீட்டின் வாசல் கதவைக்கூட பதிவிடலாம். குவாரன்டைனில் இருக்கவேண்டிய நபர்கள், தங்களின் வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருக்கும் தனிமைப்படுத்துதல் நோட்டீஸைக்கூட புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.
- புகைப்படம் எடுத்து அனுப்புவதன் மூலம் அந்த நபரின் இருப்பிடம் மாநகராட்சியில் பதிவாகிவிடும். அதன் பின்னர் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். மாநகராட்சியைச் சேர்ந்த மருத்துவர்கள் உங்களைத் தொடர்புகொண்டு பேசுவார்கள்.