இலங்கைக்கு 10 டன் மருத்துவப் பொருட்களை அனுப்பியது இந்தியா
- இலங்கையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் 185 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- இதில் 6 பேர் உயிரிழந்தனர். 34பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இலங்கையில் கரோனா வைரஸ் நோயாளிகள் 2,000 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
- இந்நிலையில் இலங்கையில் கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டை சமாளிக்க, அந்நாட்டு அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 10 டன் மருத்துவப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்தது.
- இந்தப் பொருட்கள் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு வந்தடைந்தன.
ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு ரூ.14,100 கோடியை விடுவித்தது மத்திய அரசு
- சரக்கு-சேவை வரி விதிப்பு முறை, நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த வரி விதிப்பை அமல்படுத்தியதால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
- அதன்படி, வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்துக்குப் பிறகு மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
- இந்நிலையில், அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை, ரூ.34,053 கோடியை இரண்டு தவணைகளாக மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ளது.
- முதல் தவணையாக ரூ.19,950 கோடியை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி மாநில அரசுகளுக்கு நிதியமைச்சகம் விடுவித்தது. எஞ்சிய தொகை ரூ.14,103 கோடி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ
- கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் குறைத்திருந்தது. இந்தச் சூழலில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 3 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதமாகக் குறைப்பதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
- ரூ.1 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு கொண்ட கணக்குகள், ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு கொண்ட கணக்குகள் என அனைத்துக்கும் வட்டி விகித மாற்றம் பொருந்தும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
- அதேபோல், வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை (எம்சிஎல்ஆா்) 35 புள்ளிகள் குறைத்து 7.4 சதவீதமாக எஸ்பிஐ நிா்ணயித்துள்ளது. அதன் மூலம் கடன்களுக்கான மாதத் தவணை குறையும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.6% ஆக குறையும் : அமெரிக்க நிறுவனம் கணிப்பு
- அமெரிக்கப் பொருளாதார ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், 'இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் பொருளாதார வளர்ச்சி முடங்கி உள்ளது. அரசு பல முயற்சிகள் எடுத்தும் பாதிப்புக்கள் குறையவில்லை.
- கடந்த நிதியாண்டில் 10 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி வெறும் 5% ஆக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கி உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கும்.
- ஏற்கனவே மார்ச் 22 ஆம் தேதி அன்று நாங்கள் இண்டியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 3.3% ஆக இருக்கும் எனக் கணித்திருந்தோம். தற்போது மேலும் பொருளாதார சரிவு நீடித்து வரும் சுழலில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி 1.6% வீழ்ச்சி அடையும்.
- மொத்த ஜிடிபியில் 60% மக்களின் நுகர்வு பழக்கம் மற்றும் சேவைத் துறை பங்கு வகிக்கிறது. இப்போது இது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த குறைவு ஏற்பட உள்ளது. பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட அரசு இதுவரை ரூ.1.75 லட்சம் கோடி நிதி தொகுப்பு மற்றும் 0.75% வட்டிக் குறைப்பையும் அறிவித்துள்ளது.
தனியார் ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஷசாங்க் தியோ சுதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், 'கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இப்பரிசோதனைகளை மக்களுக்கு இலவசமாக கிடைக்க செய்ய வேண்டும்.
- கொரோனா அதிகரித்தும் வரும் நிலையில், பாதிககப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய தகவல்களை நாடு முழுவதும் தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.
- இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ் ரவீந்திர பாட் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, '118 ஆய்வகங்கள் மூலம் நாளொன்றுக்கு 15,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- இதனை அதிகரிப்பதற்காக மேலும் 47 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது,' என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து, 'தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆய்வகங்கள் வசூலித்த கூடுதல் கட்டணத்தை அரசு திருப்பி தர வேண்டும். மக்களுக்கு இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா பாதிப்பு விவரங்களை, தொலைக்காட்சி சேனல்கள் மூலம் தெரிவிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை வலியுறுத்த வேண்டும்,' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கரோனா சிகிச்சைக்கான ஆய்வு: 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது
- தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற நாடுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவ்வப்போது வரும் நிகழ்வுகளின் தரவுகளை ஆராய்ந்தும் வழிகாட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
- தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டு 12 குழுக்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு நோய்த்தொற்று தடுப்பு, தமிழக மக்களுக்கான பிரச்சினைகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள்,போக்குவரத்து, உணவுப் பதுக்கல் தடுப்பு, தொற்றுத்தடுப்பு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில் தொற்றுப் பரவலைத் தடுக்க அமைக்கப்பட்ட குழுவில் நச்சுயிரியல் நிபுணர்களை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. மாநிலத்தில் தொற்றுப்பரவலைத் தடுக்க 19 நிபுணர்கள் அடங்கிய குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- இந்த நிபுணர் குழுவில் சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ரகுநந்தன், சென்னை மருத்துவக் கல்லூரியில் ஓய்வுபெற்ற மருந்து துறை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீதர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் பரந்தாமன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் டாக்டர் சந்திரசேகர், சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசுப்ரமணியன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் துறைத்தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கொரோனாவைத் தடுக்க 5T: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த திட்டம்
- டெல்லியில் கொரோனாவால் 520-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் டெல்லி அரசு தீவிரம் காட்டி வருகிறது.
- இதற்காக 5T PLAN எனப்படும் ஐந்து அம்ச திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. TEST, TRACE, TREAT, TEAM WORK, TRACK என்று இத்திட்டத்தை குறிப்பிட்டுள்ளது டெல்லி அரசு.
- இதன்படி, டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது முதல் அம்சம். அடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவர். மூன்றாவதாக, கொரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
- நான்காவதாக துறைசார்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து கூட்டு முயற்சியாக செயல்படுவது என்றும், கடைசியாக கொரோனா பாதித்த மற்றும் அறிகுறிகளுடன் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்து நோயை முற்றிலும் தடுப்பதாகும்.
கொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் டுவிட்டர் நிறுவனர்
- கொரோனா நிவாரண நிதிக்கு, டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி 1 பில்லியன் டாலர் நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது அவரது சொத்தில், 28 சதவீதம் ஆகும்.
அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
- இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில் மிக மோசமாக 1018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 68 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மொத்தம் நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 24ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தொடங்கியது.
- இந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற அவைக்குழு தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். 5 எம்பிக்களுக்கும் அதிகமாக இருக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் ஆலேசனை செய்தார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
- கொரோனா குறித்த மாநில அரசுகளின் நடவடிக்கை என்ன, என்ன முயற்சிகளை எடுக்கலாம் என்று பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளார். அதேபோல் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்தனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எம்பிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடத்திற்கு மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இது தொடர்பாகவும் இன்று ஆலோசனை செய்யப்பட்டது.
- இந்த ஆலோசனையில் காங்கிரஸ் சார்பாக குலாம் நபி அசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதீப், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜேடியின் பினாகி மிஸ்ரா, திமுக சார்பாக டி ஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சமாஜ்வாதியின் ராம் கோபால் என்று பல கட்சியை சேர்ந்த எம்பிக்கள் கலந்து கொண்டனர். அதிமுகவிற்கு ஒரே ஒரு எம்பிதான் இருப்பதால், அக்கட்சியில் இருந்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
கர்நாடகா - கேரளா எல்லை திறப்பு; இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம்
- கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், அங்கிருந்து தங்கள் மாநிலத்துக்கு கொரோனா பரவி விடும் என்ற பயத்தில், கேரளாவுடனான எல்லையை, கர்நாடக அரசு, சமீபத்தில் மூடியது.
- கேரளா - கர்நாடகா எல்லையில் உள்ள சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு, அதை மீறி யாரும் உள்ளே வராமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்; இதற்கு, கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
- கர்நாடகாவின் நடவடிக்கையால், அங்கு வசிக்கும் தங்கள் மாநிலத்தவர் யாரும் வர முடியாத சூழல் இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கேரள அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- இது, மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும், கேரளா முறையிட்டது. இதையடுத்து, இரு மாநில அரசு அதிகாரிகளும், இது குறித்து ஆலோசித்து முடிவை தெரிவிக்கும்படியும், இது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யக் கோரியும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
- இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது: உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இரு மாநில அதிகாரிகளும் ஆலோசித்து, சுமுக தீர்வுக்கு வந்துள்ளனர். கேரளாவுடனான எல்லையை, கர்நாடகா ஏற்கனவே திறந்து விட்டது.
- இரு மாநில அரசுகளுக்கும் இடையே, இது தொடர்பாக சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை முடித்துவைப்பதாக, நீதிபதிகள் அறிவித்தனர்.