ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம்: இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற முதல் நீதிபதி
- ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற நீதிபதியாக ரஜ்னேஷ் ஆஸ்வால் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அந்த யூனியன் பிரதேசத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியேற்று பதவியேற்றுக் கொண்ட முதல் நீதிபதி என்ற சிறப்பை அவா் பெற்றுள்ளாா்.
 
பிரதமா் நிதிக்கு என்டிபிசி நிறுவனம் ரூ.257 கோடி
- கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரதமரின் நிவாரண நிதிக்கு ஏராளமான நிறுவனங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றன. அந்த வகையில், என்டிபிசி நிறுவனம் ரூ.257.5 கோடியை வழங்கவுள்ளது.
 - இதில் ரூ.250 கோடி நிறுவனத்தின் சாா்பிலும், ரூ.7.5 கோடி நிறுவன ஊழியா்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தும் வழங்கப்படும் என என்டிபிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 - தனியாா் துறையைச் சோந்த கரூா் வைஸ்யா வங்கி அதன் சமூகப் பொறுப்புணா்வு திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
உலக வங்கி இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் அவசர நிதியுதவி
- கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிக்கு உலக வங்கி வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
 - இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. உலக வங்கியின் முதல் உதவித் திட்டங்கள், 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வெளியாகியுள்ளன. 25 நாடுகளுக்கு இது உதவும்.
 - "இந்தியாவிற்கு வழங்கப்படும், 1 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதி, சிறந்த ஸ்க்ரீனிங், தொடர்பு டிரேசிங் மற்றும் ஆய்வக பரிசோதனைகளுக்கு உதவும். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது, புதிய தனிமைப்படுத்தும் வார்டுகளை அமைப்பது போன்றவற்றுக்கும் உதவும்" என்று உலக வங்கி கூறியுள்ளது.
 - தெற்காசியாவில், உலக வங்கி பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களும், மாலத்தீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
 
உலக பொருளாதார வளர்ச்சி 1 சதவீதமாக சரியும்: ஐ.நா., தகவல்
- கொரோனா பாதிப்புக்கு முன், நடப்பாண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 2.5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. இது, தற்போது, 0.90 சதவீதமாக குறையும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 - கொரோனா பரவலை தடுக்க, 100க்கும் அதிகமான நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி நின்று போயுள்ளன.
 - இத்தகைய தாக்கத்தால், உலக நாடுகளின் பொருளாதாரம், மிக மோசமான மந்தநிலையை சந்திக்கக் கூடும். இதனால், லட்சக்கணக்கானோர், வேலையிழக்கும் அபாயம் உள்ளது.
 - பொருளாதார சரிவை தடுக்க, ஏராளமான நாடுகள் ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன. இருந்தபோதிலும், இந்தாண்டு, உலக பொருளாதார வளர்ச்சி, 0.9 சதவீதமாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
 - கடந்த, 2009ல், சர்வதேச பொருளாதார நெருக்கடியின் போது, வளர்ச்சி, 1.7 சதவீதம் சரிவடைந்திருந்தது. மக்கள், வருவாய் ஈட்டுவதற்கும், அவர்களின் தேவையை அதிகரிக்கவும், வேலையிழப்பை தடுக்கவும், உலக நாடுகள் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; தவறினால், பொருளாதார வளர்ச்சி, தற்போது மதிப்பிட்டதை விட மேலும் குறையும்.
 
ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை : மத்திய அரசு எச்சரிக்கை
- ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மற்றும் வதந்தி பரப்புவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 - ஊரடங்கு மற்றும் வதந்திகள் பரப்புவது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
 
மருந்துப் பொருட்களின் உற்பத்திக்கு சலுகைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
- கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மருந்துப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருந்துப் பொருட்களின் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
 - "மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100 சதவிதம் முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும்.
 - வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் மூலதனக் கடனிற்கான வட்டியில் 6 சதவிதம் மானியமாக வழங்கப்படும். 20 கோடியை உச்சவரம்பாகக் கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாக பிரித்து வழங்கப்படும்.
 - சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இந்தச் சலுகைகள் பொருந்தும். மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் அனுமதிக்கு காத்திருக்காமல் உடனே உற்பத்தியை துவக்கலாம். ஏற்கனவே உள்ள நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் ஜூலை 31க்குள் உற்பத்தி செய்யத்துவங்கினால் சலுகை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரதமர் நிவாரண நிதிக்கு எல்.ஐ.சி ரூ.105 கோடி நிதி
- இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு வழிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளும் இயங்குகின்றன. இந்தியாவில் இருந்து கொரோனாவை அறவே ஒழிக்க, அனைவரும் நன்கொடை அளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
 - அதன்பேரில், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி தனது பங்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு ₹105 கோடி நிதியை வழங்கியுள்ளது.
 - இதில், 5 கோடி எல்.ஐ.சியின் கோல்டன் ஜூப்ளி நிதியில் இருந்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜியாஜோ வளைகுடாப் பாலத்தின் ஜியாஜோ இணைப்பு பகுதி திறப்பு
- ட்சிங் தாவ் நகரிலுள்ள ஜியாஜோ வளைகுடாப் பாலத்தின் ஒரு பகுதியாக ஜியாஜோ இணைப்பு என்னும் பாதை 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
 - 5749 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாதை ட்சிங் தாவ் ஜியாடோங் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் விரைவுப் பாதையாகும்.
 


