- அண்டங்கள் இயங்கும் பிரபஞ்ச வெளியில் சிறு புள்ளியாய் விளங்கும் நம் சூரியக் குடும்பத்தில், ரேடியோ கார்பன் வயதுக் கணிப்பின்படி சுமார் 465 கோடி ஆண்டுகள் வயது கொண்ட பூமியில், நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் எனும் பூஞ்சபூத சக்திகளில், தண்ணீர் தனிச்சிறப்பு பெற்று தன்னிகரற்று விளங்குகிறது.
- தண்ணீர்உள்ள கிரகங்கள் வேறெதுவும் உள்ளதா என விஞ்ஞானிகளின் கண்கள் அறிவோடு சேர்ந்து வானவீதியில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
- காற்று மண்டலத்திலிருந்து நீர் தோன்றியதா? அல்லது நீரிலிருந்து நம் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நீராவி உள்ளிட்டவை தோன்றியதா என்று ஆய்வுகள் நீண்டு கொண்டே செல்கிறது.
- எது எப்படியோ... , உயிர்களின் தோற்றம் நீரிலிருந்துதான் என பரிணாமவியலின் தந்தையான டார்வின் கூறுகிறார். தொல்காப்பியரின் வகைப்பாட்டின்படி உயிர்கள் அதன் அறிவு நிலைகளைப் பொருத்து உருவாகிப் பல்கிப்பெருகி பூமியெங்கும் செழித்து நிற்கிறது.
- மனிதன் உள்ளிட்ட உலக உயிர்களின் வாழ்வுக்கும், உலகின் வளத்திற்கும் அடிப்படையாக விளங்குவது தண்ணீர். வானிலிருந்து வரும் துளிகள் அமிழ்தமாகும், அத்துளிகள் வரவில்லையென்றால் ஓரறிவுடைய புல் கூட வளராது என உலகியல் வல்லுநரான வள்ளுவர், நீரின் வல்லபம் பேசுகிறார்.
- நீரின் மகத்துவத்தை மதித்து, அதன் அருமையை உணர்ந்து அளவாகப் பயன்படுத்தி, உலகின் பொதுச்சொத்தான நீர் வளம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ம் நாள் உலக நீர் தினமாக அடையாளம் காணப்படுகிறது.
- உலகில், இயற்கை கொடுத்த பல வரங்களில், இரக்கத்தோடு நமக்காக அள்ளித்தந்த வரம் நீர். ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமைகளில் முதன்மையான ஒன்று நம் இயற்கை வளங்களை பாதகம் இன்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது.
- நீர் - உலக உயிர்களுக்கு உணவளிக்க தேவையானதோடு மட்டுமல்லாமல் தானே உணவாகவும் பயன்படுகிறது என தெய்வப் புலவர் பெருமை சேர்க்கிறார்.
- உயிர் இயக்கத்தின் உந்து சக்தியாக நீர் செயல்படுகிறது. இயற்கை விஞ்ஞானியான நம்மாழ்வார் "நீரை மண்ணுக்குள் தேடுவது ஆபத்தானது, அதை விண்ணிலிருந்து பெற வேண்டும்" என்று அறிவுறுத்தியதின்படி மனித மனங்களும் செயல்களும் மாற வேண்டும்.
- "சிறை பெறா நீர் போல்" என மணிவாசகர் உவமை காட்டுவது உண்மைதான் எனினும், மக்களின் வாழ்நிலைப் பகுதிகளின் பிரிவினையின் படி, நாடு, மாநிலம், மாவட்டம் என பல நிலைகளில் தடுத்து நிறுத்தப்படுகிறது.
- நதிநீர்ப் பங்கீடுகளில் பொதிந்து இருக்கும் அரசியல் உள்ளீடு, சுய நலம், குரூரம் ஆகியவை மனித மனங்களின் விசாலப் பாங்கினை வெளிச்சமிட்டு காட்டுகிறது. நீர் சூழ்ந்த உலகத்தில் நிறைந்த மக்கள் எண்ணம், வர்த்தக எண்ணங்களால் நீர்த்துப் போய்விட்டது.
- அடைத்து வைத்து விற்கப்படும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களில், பல ஆழ்துளை கிணறுகளின் அலறல் சத்தமும் சேர்த்தே அடைக்கப்பட்டுள்ளது. பூமித்தாயின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் சிறப்பு விலங்குகளாக மனித இனம் மாறிக் கொண்டிருக்கிறது.
- நீர் நிலைகளை பாதுகாப்பதற்கு மனதிலும் இடமில்லை, ஊர்ப்புறங்களிலும் இடமில்லை, மழை நீர் சேகரிக்க காலங்காலமாக பயன்பட்டு வந்த ஆறு, ஏரி, குளம், குட்டைகளை கபளீகரம் செய்து விட்டு, வீடுகளின் பூந்தொட்டிகளில் சேகரித்து, " மழை நீர் சேகரிப்பு" என மார்தட்டத் துவங்கிவிட்டோம்.
- ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியிருந்தபோது நம் நாட்டில் இருந்த நீர் நிலைகளின் எண்ணிக்கையில், சுதந்திரம் பெற்ற பின் பாதியைக் கூட நம்மால் முழுமையாக வைத்திருக்க இயலவில்லை என்பது கண்கூடான உண்மை.
- இயற்கையை சுரண்டத் தெரிந்த நமக்கு, தூர்ந்து போன நீர் நிலைகளைச் சுரண்டத் தெரியாமல்போனதுதான் வேடிக்கை.
- பனிமலைகள் ஒரு பக்கம் உருகிக் கடல் மட்டத்தை உயர்த்தும் அச்சுறுத்தல், நன்னீரின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கையில், விவசாயிகளின் கண்ணீர் கனத்துக் கொண்டே செல்கிறது.
- இருக்கின்ற வளத்தை விரயமாக்கிவிட்டு, நிலத்தை கிரையம் செய்ய அலைபாய்கிறது அடிமனம் . வனங்களை அழித்து விளைநிலங்களாக்கினோம், பின்பு அதையும் மாற்றி குடிமனைகளாக அடியளந்தோம்.
- உலகம் 70% நீரினால் சூழ்ந்து கிடக்கிறது, அதில் 2.5% சதவிகிதம் மட்டுமே நன்னீர். மீதமுள்ளவை கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் நிறைந்து நிற்கும் உப்புநீர். மனிதனுக்கு கிடைக்கும் நீர் மொத்த நன்னீரில் வெறும் 1% சதவிகிதத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
- நன்னீர் உணவு சமைக்க, சுத்தம் செய்ய, ஆலைகளின் தேவைக்கு, சுத்தீகரிப்பு நிலையங்களுக்கு, சாய பட்டறைகளுக்கு, கட்டுமான தொழில்களுக்கு, இயந்திரங்களுக்கு, வாகனங்களுக்கு என தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
- குடி நீரின் பயன்பாட்டிற்கு கோடை காலத்தில் அல்லலுறும் மக்களின் ஏக்கம் கலங்க வைக்கிறது. சென்ற ஆண்டு சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை போக்க, ரயில்களிலும், சரக்கு வாகனங்களிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீர் கொண்டுசேர்த்தது யாருடைய நினைவிலிருந்தும் அகலாத ஒன்று.
- மனிதனுக்கு உதவி செய்யவே தடுமாறும் இவ்வுலகத்தில் மற்ற ஜீவராசிகளின் நிலையை கவனத்தில் கொண்டால் அவைகளின் பரிதாப நிலைக்கு காரணமான பாவிகள் மனிதர்கள்தான் என்பது நன்கு புலப்படும்.
- நீராதாரங்கள் நலிவுற்றதால் அதையே நம்பி வாழ்ந்த நீர்வாழ் உயிரினங்கள், நீர்-நில உயிரிகள், பறவை இனங்கள், வன விலங்குகள் என பல்லாயிரக்கணக்கான உயிர் வகைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி பல உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டுருக்கிறது.
- பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டை போதித்த நம் பாட்டனார் வள்ளுவரின் வார்த்தைகளை விலக்கிவிட்டு, அனைத்துயிர்களின் சுதந்திரத்தில், உரிமையில், உணர்வுகளில், அதிகாரத்தில், மனிதன் தேவையின்றி குறுக்கீடு செய்து அத்துமீறி வருகிறான்.
- இந்த அகங்காரப் போக்கின் உச்சகட்ட நிலைதான் இயற்கையின் வரப்பிரசதாமான நீரை பொது நீர்நிலைகளில் இருந்து எடுத்து காசிற்கு விற்பது. மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் வர்த்தக முறையையும், ரூபாய் நோட்டுகளின் கணக்கு முறைகளையும் எல்லா உயிர்களுக்கும் எப்படி எடுத்துரைப்பது.
- இருப்பதை பொதுவில் வைப்போம் என்ற நிலையிலிருந்து மாறி கிடைத்ததை சுருட்டிக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டிற்கு மனிதன் வந்துவிட்டான்.
- மன்றாடும் மாற்றுயிர்களை மதியாது தான்தோன்றித்தனமாக செயல்படும் மனித இனம் பேரிடரில் சிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
- ஆழ்துளை கிணறுகளால் துளைத்து பூமியின் மேனி முழுவதும் சல்லடைக்கண்களாக மாற்றி வைக்கும் நாமும் ஒரு நாள் அதே சல்லடைகளால் சலிக்கப்படுவோம் என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம்.
- இயற்கையை தளர்ச்சியாகக் கருதி, மனிதனின் முயற்சியால் எதையும் தலைகீழாக மாற்றிவிட முடியும் என்பது அறிவீனம். இயற்கையோடு ஒன்றி வாழ்வதே சுகமும் சமூகமும் அளிப்பது.
- பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் கூட்டத்தின் பெருக்கம் ஒவ்வொரு நாளும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இப்போது இருக்கும் மக்களுக்கும், இனி பிறக்கும் குழந்தைக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டுமெனில் இனி நாம் கடைபிடிக்கும் முறைகளில்தான் உள்ளது.
- நீர் ஆடம்பரத்திற்கானதல்ல, அத்தியாவசிய தேவைக்கானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இருக்கின்ற நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி எல்லோருக்கும் பகிர்ந்து கிடைக்க பங்களிப்பு தர வேண்டும்.
- அரசும் மக்களும் பொறுப்புணர்வோடு செயல் பட்டு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்தி, அவைகளைப் பாதுகாக்க சுயநினைவோடு உறுதியேற்க வேண்டும்.
- நீரில் கழிவு நீர் கலந்து இழிவானதாக மாறும் நிலையை அரசும் மக்களும் தீவிரமாகக் கவனித்து, கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பருவக் கால மாற்றத்தினால் பல இன்னல்களை மனிதனோடு ஏனைய உயிர்களும் சந்திக்க ஆரம்பித்து விட்டது.
- பன்னாட்டு நிறுவனங்களின் மூலப் பொருள் உற்பத்திக்கு நீர் அளிக்கும்முன் ஆக்கபூர்வ நிபந்தனைகளை உருவாக்கி, அது முறையாக கடைபிடிக்க ஆவண செய்ய வேண்டும்.
- மழை பொழிவின் அளவு குறையாமல் இருக்க காடு, மலை போன்ற இயற்கை வளத்தை பாதுகாப்பதும், ஆற்று மணலை அளவின்றி சுரண்டி நிலத்தடி நீரை அகல பாதாளத்திற்கு கொண்டு சேர்க்காமலும், பொழிகின்ற மழை நீர் வீணாக கடலில் கலந்து செல்லாமல், நன்னீர் நிலைகளை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப புதிதாகக் கட்டமைப்புகளை உருவாக்கி சேமித்து வைக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்.
- அப்பொழுதுதான் வானமிர்தம் வழங்கிவரும் மகத்துவத்தை வருங்காலத்திலும் மக்கள் பெறமுடியும். நீரின்றி மனித இனம் அழிவதை தடுத்து நிறுத்த முடியும் என்பதை புரிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனின் பிறவிக் கடன்.
உலக நீர் தினம் / WORLD WATER DAY
March 21, 2020
0
Tags