ஏப்.14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; கடன், வட்டி வசூலுக்குத் தடை; ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
- ''தமிழக அரசு கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொதுமக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்படி ஊரடங்கு உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
- இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. அந்த உத்தரவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர ஆணையர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வு முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (26.3.2020) நடத்தப்பட்டது.
- மார்ச் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றது.
- ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றிக் கிடைக்கவும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
- பல கிராமங்களிலும், நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி / வாராந்திர / மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது, ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.
- பெரிய காய்கறி மார்க்கெட் / சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி / பழ வகைகளை விற்கும் கடைகளை விசாலமான இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். அப்போது சமுதாய இடைவெளி விதிப்படி (Social distancing norms-) மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும், காய்கறிக் கடைகளிலும் சமூக விலகல் (Social distancing norms-) முறையை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.
- காய்கறி மார்க்கெட், மளிகைக்கடைகள், உணவகங்கள் செயல்படுவதற்கான நேரக் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.
- அதிக மக்கள் வாழும் குடிசை மாற்றுக் குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
- இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதையும், இது மனித சமுதாயத்திற்கு ஒரு பேரழிவை ஏற்படுத்தவல்லது என்பதையும், மக்கள் உணரும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் ஒலிப்பெருக்கி / தண்டோரா மூலம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலம் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்ஐவி (HIV) தொற்று உள்ளோர், போன்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பெறுகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
- அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும். இது தொடர்பான கோரிக்கைகள் இருப்பின், அவற்றிற்கான அத்தியாவசியச் சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.
- மருத்துவப் பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ((TNMSC), அரசு மருத்துவமனை முதல்வர்கள் (Dean), மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள் ((JDHS) மற்றும் பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ((DDHS)ஆகியோர் வழங்குவர்.
- அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்யும் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும், சென்னை உட்பட அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர்முக உதவியாளர்கள் (PA-G) சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- மின் வணிக நிறுவனங்களான (e-commerce)Grofers, Amazon, Big basket, Flipkart, Dunzo போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும், அந்தந்தப் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றது.
- ஜோமேட்டோ, ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும். எனினும், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ் மற்றும் சிறு சமையலகங்கள் (caterers) மூலம் ஏற்கெனவே தங்கள் உணவுகளைப் பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகின்றது.
- இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர்கள், அடையாள அட்டை வைத்திருப்பதை சம்பந்தப்பட்ட வாகனங்களில் அத்தியாவசிய சேவைக்காக என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- அதேபோன்று, காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.
- வேளாண்மைத் துறை விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியத் துறை என்பதால், விவசாயத் தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றின் நகர்வு அனுமதிக்கப்படுகின்றது. அதேபோன்று, வேளாண் விளைபொருட்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
- கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றது. இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால், காவல் துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை கீழ்க்கண்ட எண்களில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2844 7701, 044-2844 7703
- முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இச்சேவையையும் இணைத்துச் செயல்பட வேண்டும்.
- அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளைச் சென்றடைவதையும், இவை வழங்கும்போது சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- வெளி நாட்டிலிருந்து வந்த சுமார் 54 ஆயிரம் பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை, அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது.
- கரோனா தொற்று உடையோருடன் தொடர்பில் இருந்தோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குடும்பத்தினர் வெளியில் வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி வெளியில் வருவோர் மீது அபராதம் விதிப்பதோடு, தகுந்த பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
- விழித்திரு - விலகி இரு - வீட்டிலேயே இரு என்ற கோட்பாட்டினை இந்த சவாலான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்''.
இலவச சிலிண்டர்; விவசாயிகளுக்கு ரூ.2,000 - வைரஸ் பாதிப்புக்கு ரூ.1,70,000 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு
- "வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி. தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 36 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அவர்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகளுக்காக 1,70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் யாரும் கையில் பணம் இல்லாமல், உணவு இல்லாமல் பசியில் வாடக்கூடாது என்பதற்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளோம்.
- பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜனா திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 80 கோடி மக்களுக்கு ஏற்கெனவே 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு அடுத்து வரும் 3 மாதங்களுக்கு மேலும் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும்.
- இது இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பருப்பு வழங்கப்படும். இதே திட்டத்தின்கீழ் வரும் சுய உதவிக்குழுக்களுக்குத் தீன் தயாள் கடன் திட்டத்தின்கீழ் அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அது இரு மடங்காக உயர்த்தப்பட்டு 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
- அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்குக் காப்பீடு வழங்கப்படும். ஜந்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.500 வழங்கப்படும் இதனால் நாடு முழுவதும் 20 கோடி பெண்கள் பயனடைவார்கள்.
- கிசான் யோஜ்னா திட்டத்தின்கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு விவசாயிகளுக்கு ரூ.2000 என அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
- பிதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இதனால் 8.3 கோடி குடும்பங்கள் பயன்பெறும். 60 வயதைக் கடந்தவர்கள் விதவைகள், ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.
- ஒரு முறை வழங்கப்படும் இந்த உதவி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) ஊழியர்கள் 75% பணம் அல்லது தங்களின் 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம். இதனால் 4.8 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் தொற்றுநோய் தடுப்புச் சட்டம்
- மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் அடுத்த உத்தரவு வரும் வரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள எபிடமிக் டிஸீசஸ் ஆடினஸ் -2020 என்ற தொற்று வியாதிகளைத் தடுப்பதற்காக அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் புதிய சட்டம் ஏற்படுத்த மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
- பொதுமக்களும் குழுக்களும் தனி நபரும் நடத்தும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த அரசுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அரசு மாநில எல்லைகளை மூட முடியும். பொது மற்றும் தனியார் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க முடியும். பொது இடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதை தடுக்க முடியும்.
- அரசு அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள், பேக்டரிகள், கடைகள், ஒர்க்ஷாப்புகள், ஓட்டல்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையோ, பத்தாயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க முடியும். விதிமுறையை மீறுபவர்கள் மீது போலீஸ் நேரடியாக வழக்குப்பதிய முடியும்" என்றார்.
நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து: மத்திய அரசு
- ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
- அதன்படி, மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலுக்கு வந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.
இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சைக்காக முதல் மருத்துவமனையை அமைக்கும் மாநிலம்
- முதல்வர் நவீன் பட்நாயக் ஆளும் ஒடிசா மாநிலத்தில், கொரோனாவுக்கு முதல் மருத்துவமனை கட்டமைக்கபடவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- மேலும், இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையை அமைக்க உள்ளது ஒடிசா அரசு.
- இதுகுறித்து அம்மாநில அரசு கூறியுள்ளதாவது, 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை இன்னும் 2 வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என அறித்துள்ளது.
ஜி20 ஆலோசனையில் கொரோனாவை எதிர்கொள்ள திட்டம் 5 டிரில்லியன் டாலர் ஒதுக்க முடிவு
- கொரோனா வைரஸ் மூலம் சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க 150க்கும் அதிகமான நாடுகள் பாதித்து இருக்கிறது. கொரோனா காரணமாக அதிகமாக ஜி20 நாடுகள்தான் பாதித்து உள்ளது. உலகின் 85% பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் இந்த நாடுகள்தான் கொரோனா காரணமாக அதிகமாக பாதித்துள்ளது.
- அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளது.
- இந்த நிலையில் ஜி20 நாடுகள் எல்லாமும் ஒன்றாக சேர்ந்து கொரோனா குறித்து இன்று அவசர ஆலோசனை நடத்தியது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியா சார்பாக பிரதமர் மோடி இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு பேசினார். அதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
- இந்த ஆலோசனையில் முடிவில் ஜி20 நாடுகள் எல்லாம் ஒன்றாக கூட்டணி அமைத்து கொரோனாவை எதிர்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 டிரில்லியன் டாலர் நிதியை ஜி20 நாடுகள் சேர்ந்து ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டம், வழிமுறை, அறிவியல் உதவி, பண உதவி, அனைத்தையும் ஒன்று திரட்ட வேண்டும் என்று ஜி20 சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- கொரோனா மருத்துவ ரீதியான சவாலாக எப்படி இருக்கிறதோ, அதேபோல் பொருளாதார ரீதியாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பலரின் வேலை பறிபோகும். இதை தடுக்கும் வகையிலும், மீண்டும் பொருளாதார ரீதியாக பழைய நிலைக்கும் திரும்பும் வகையிலும் திட்டங்களையே வகுக்க இதில் முடிவு எடுக்கப்பட்டது. உலக ரீதியாகவும், நாடுகளுக்கு உள்ளேயும் கொரோனாவிற்கு எதிராக திட்டமிடலை வகுப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
- பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் உலக நாட்டுகள் சேர்ந்து இந்த கொரோனவை எதிர்கொள்ள வேண்டும். உலக சுகாதார மையத்தில் வரும் காலங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் உலக சுகாதார மையம் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக உலக நாடுகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
காமராஜா் துறைமுகத்தின் மீதான மத்திய அரசின் பங்கை வாங்கியது சென்னைத் துறைமுகம்
- சென்னைக்கு அருகே எண்ணூா் துறைமுகம் கடந்த 2001-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஏற்கெனவே உள்ள பெருந்துறைமுகங்கள் அனைத்தும் அறக்கட்டளை சட்டத்தின்படி செயல்பட்டு வந்த நிலையில் எண்ணூா் துறைமுகம் மட்டுமே நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இத்துறைமுகத்தின் 67 சதவீத பங்குகளை மத்திய அரசும், 33 சதவீத பங்குகளை சென்னைத் துறைமுகமும் வைத்துள்ளன. துறைமுகத்தின் தற்போதைய மொத்த நிலம் சுமாா் 2,700 ஏக்கராக உள்ளது.
- கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக ஜி.கே.வாசன் இருந்தபோது எண்ணூா் துறைமுகத்தின் பெயா் காமராஜா் துறைமுகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
- சுமாா் ரூ.300 கோடி நேரடி முதலீட்டில் தொடங்கப்பட்ட துறைமுகத்தின் தற்போதைய மாா்க்கெட் மதிப்பீடு தோராயமாக சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி (நிலங்கள், முதலீடு, திறன் மதிப்பு உட்பட) இருக்கும் என கூறப்படுகிறது.
- தற்போதைய வளா்ச்சி தொடா்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 145 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை காமராஜா் துறைமுகம் எட்டும் எனக் கூறப்படுகிறது. இனி தொடங்க உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் காமராஜா் துறைமுகம் முன்மாதிரியாக இருக்கும் கப்பல்துறை அமைச்சகமே வெளிப்படையாக அறிவித்துள்ளது.
- முழு உரிமையாளராகும் சென்னைத் துறைமுகம்: காமராஜா் துறைமுகம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் முதலீடுகள் மற்றும் சொத்துப் பாதுகாப்புத் துறை சாா்பில், மத்திய அரசு வைத்துள்ள மொத்தப் பங்குத் தொகையையும் விற்பனை செய்து இந்நிதியை மத்திய அரசின் நிதி முதலீட்டிற்கு அளிப்பது என பரிந்துரை செய்தது.
- இத்திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி பிரதமா் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
- இதனையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு தனியாா் நிறுவனங்கள் அளித்துள்ள மதிப்பீட்டு அறிக்கையின்படி காமராஜா் துறைமுகத்தின் மொத்த மதிப்பு (கணக்குப் புத்தக மதிப்பீட்டின்படி) ரூ.3,560 கோடி எனவும் இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 2,380 கோடி எனவும் தெரிவித்திருந்தது.
- இந்நிலையில், மத்திய அரசின் பங்கான 67 சதவீதத்தையும் சென்னைத் துறைமுகம் வாங்கியதையடுத்து, ஏற்கனவே 33 சதவீத பங்குகளை தன்னகத்தே வைத்துள்ள சென்னைத் துறைமுகமே, தற்போது காமராஜா் துறைமுகத்தின் முழு உரிமையாளராகி உள்ளது.
- இந்நிலையில், இதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.2,380 கோடிக்கான நிதியை முதலீடுகள் மற்றும் சொத்துப் பாதுகாப்புத் துறையிடம் சென்னைத் துறைமுகம் அளிக்க உள்ளது.