கொரோனா நிவாரண நிதியாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு: அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000; சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
- உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 16,503 பேர் உயிரிழந்துளளனர்.
- இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசுக்கு 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- இதற்கிடையே, 2 நாள் விடுமுறைக்குப்பின் தமிழக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. முன்னதாக, நேற்றைய தினம் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் பின்பற்றியதற்கு சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்தார்.
- தொடர்ந்து, சில எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்தார். கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
- கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார். முதல்வர் உரை முடிந்தப்பின் சட்டப்பேரவை நாளை முதல் நிறைவு செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
- இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும் கொரேனா பாதிப்பு நிவாரணமாக 82 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு.
- கொரோனா நிவாரண நிதியாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு.
- அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
- மார்ச் மாதம் ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் ஏப்ரல் மாதம் வாங்கிக்கொள்ளலாம்.
- பிற அமைப்புசாரா தொழிலாளர் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசு, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
- நடைபாதை வியாபாரிகளுக்கு ரேசன் பொருட்களோடு கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும்.
- கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
- 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கூடுதலாக 2 நாள் ஊதியம் வழங்கப்படும்.
- அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
- நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடி சுடான உணவு வழங்கப்படும்.
- ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க மாநகராட்சியில் பொது சமையல் கூடம் அமைக்கப்படும்.
- அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனி மாவட்டமாகிறது மயிலாடுதுறை - முதலமைச்சர் அறிவிப்பு
- நாகை மாவட்டத்தின் முக்கிய சந்திப்பாக மயிலாடுதுறை நகராட்சி தற்போது இருக்கிறது. திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி ஆகிய இடங்களின் கூட்டுச் சந்திப்பாகவும் திகழ்கிறது.
- பிரபலமான ஊராக இருப்பதாலும், தங்களுக்கென தனி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை தேவை என்றும் நீண்ட நாட்களாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்து வந்தனர்.
- இந்நிலையில் மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். நாகையில் இருந்து பிரிக்கப்பட்டு விரைவில் மயிலாடுதுறை புதுமாவட்டமாக நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார்.
- மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்படுவதையடுத்து தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.8 உயர்த்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
- அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன.
- கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 30 டாலருக்கு கீழ் இறங்கியுள்ளது.
- இதற்கேற்ப விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், கடந்த 14ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.
- இதில் கலால் வரி 2 ரூபாய் மற்றும் சாலை வரி 1 ரூபாய் அடங்கும். இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 39,000 கோடி வருவாய் கிடைக்கும்.
- இந்நிலையில், 8வது நிதி சட்ட திருத்த மசோதாவை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உச்சவரம்பு தலா 8 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இந்த மசோதா விவாதம் இன்றி நேற்று நிறைவேறியது. தற்போதைய நிதி சட்டப்படி, கலால் வரியை அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ₹10 வரையிலும், டீசலுக்கு ₹4 வரையிலும்தான் உயர்த்த முடியும். புதிய திருத்த மசோதாவின்படி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ₹18 வரையிலும், டீசலுக்கு ₹12 வரையிலும் உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் மத்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ள சலுகைகள்
- நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவைகளில் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.
- ஆதார் - பான் அட்டை இணைப்பதற்கான கால அவகாசமும் ஜுன் 30 வரை நீட்டிப்பு.
- மார்ச், ஏப்ரம் மே மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிப்பு.
- பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட மாட்டாது.
- விவாத் சே விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30, 2020 வரை நீட்டிப்பு.
- TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும்.
- டெபிட் கார்ட் மூலம் எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் 3 மாதங்களுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
- வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு.
கொரோனாவை கண்டுபிடிக்க புதிய கருவி சாதித்தது இந்தியா
- புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
- இதனால் கொரோனா வைரஸ் தொற்றியவர்களை எளிதில் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முடியும் இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என்றும், ஒரு கருவியில் 100 பேரை சோதிக்க முடியும் என்றும் இந்த உபகரணத்தை கண்டுபிடித்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உபகரணத்தின் விலை ரூ.80 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் தினக்கூலிகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும்: அரவிந்த் கேஜரிவால்
- கரோனா வைரஸ் காரணமாக தில்லி முடக்கப்பட்டுள்ள நிலையில், தினக்கூலிகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
- நகர் முழுவதும் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. தங்குமிடங்களை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவு விநியோகத்துக்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யப்படும். யாரும் உணவில்லாமல் உறங்கக் கூடாது என்று நாம் உறுதி ஏற்போம்.
புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்
- கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை தாண்டியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் ஏற்பட்டள்ள பொருளாதார இழப்பை சமாளிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கொரோனா கட்டமைப்புக்கு ரூ .15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
- தற்போது மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதிகாப்பே முக்கியம்.
- நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- நீங்கள் வெளியே சென்றாலும் வைரஸ் உங்கல் வீட்டிற்குள் அடியெடுத்துச் செல்லும், இதற்கு சுய கட்டுப்பாடு சுய சுத்தம் முக்கியம், காட்டுத்தீ போல் வைரஸ் பரவி வருகிறது. வல்லரசு நாடுகளே கூட கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை, இதன் விபரீதத்தை புரியாமல் விளையாட்டாக யாரும் அணுக வேண்டாம்.
- கொரோனாவை தடுக்க 3 வார கால விலகல் என்பது முக்கியம். மருத்துவர்களின் ஆலோசனை இன்றி யாரும் மருந்துகளை வாங்கவோ உட்கொள்ளவோ கூடாது.
- மருத்துவர்கள் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர். ஊரடங்கின்போது மருத்துவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை; இன்று நாடு முழுவடும் தனிமைப்படுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது உங்கள் குடும்பங்களை காப்பாற்ற எடுக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.
- மேலும், சமூக விலகல் மூலம் மட்டுமே வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
- 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
- இது, 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.
- அதேபோல், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்படும் என்பிஆர் கணக்கெடுக்கும் பணிகளும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன.
- இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் தற்காலிகமாக ஒத்திவக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது அதிகாரிகள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதாலும், மக்கள் அதிக அளவில் கூட வேண்டியிருக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைப்பு
- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கொரோனா பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
- ஆனால் கொரோனாவை தாண்டியும் ஒலிம்பிக் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன. கிரீஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட்டு ஜப்பானில் ஏற்றப்பட்டிருக்கிறது.
- ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் முன்னர் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புவதாய் ஜப்பான் ஒலிம்பிக் நிர்வாக குழு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
- இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார்.