Type Here to Get Search Results !

11th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ. 25 கோடியில் கடல் வன அகாடமி தொடங்கப்படும் 
  • நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ. 25 கோடியில் கடல் வன அகாடமி தொடங்கப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வன உயிரின பாதுகாப்பு நிறுவன வளாகத்தில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் மற்றும் வனத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தை தணிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உண்டு - சென்னை உயர் நீதிமன்றம்
  • புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதால் அரசு தன்னிச்சையாகச் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. 
  • இதன் காரணமாக அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் சிறப்பு அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது என்று மத்திய அரசு வழங்கிய உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
  • அவ்வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட விதிமுறைகளின்படி,புதுச்சேரி அமைச்சரவைக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது; அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்றபடிதான், அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் செயல்பட முடியும். 
  • அவருக்கென தனியாகச் சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை; இருந்தபோதும் அவர் விரும்பினால் அமைச்சரவையிடம் ஆலோசிக்கலாம்; புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் மூலம் ஆளுநரின் சிறப்பு அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது.
  • இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்ததுடன், உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றத்தை அணுகித் தீர்வு கண்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
  • இதையடுத்து, உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் மத்திய உள்துறை அமைச்சகமும் தனித்தனியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
  • இவ்வழக்கினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், புதுச்சேரி அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும், இது தொடர்பாக ஒரு நபர் அமர்வு வழங்கிய உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
  • கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் துணைநிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சரவையும் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
  • மேலும், அமைச்சரவைக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் மத்திய அரசு குறிப்பிட்ட கால அளவிற்குள் தீர்த்துவைக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏப்ரலில் தொடங்கி செப்டம்பரில் நிறைவு
  • இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதற்குமான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டு நடந்தது. அதிலிருந்து தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் விடுபடாமல் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 
  • இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பானது மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் உத்தரவாகப் பிறப்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  • அதன்படி, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்களை சேகரிக்க நிகழாண்டில் பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. 
  • மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின்போது வரலாற்றிலேயே முதல்முறையாக களப் பணியில் தகவல் சேகரிக்க செல்லிடப்பேசி செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பணியை கண்காணிக்க இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் எத்தனை குடியிருப்புகள் உள்ளன, வீடுகள் எத்தனை உள்ளன என்ற எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கெடுப்பைத் தொடா்ந்து, அந்த வீடுகளில் நேரடி கள ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த களஆய்வுப் பணிகள் ஏப்ரலில் தொடங்கி செப்டம்பரில் நிறைவு செய்யப்பட உள்ளன.
  • கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் பணிகளை தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் ஏற்கெனவே தொகுத்துள்ளது. அதன்படி, அப்போதைய கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலத்தில் 2.13 கோடி வீடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட், மரம், கல் என பல்வேறு பொருள்களைக் கொண்டு எந்தெந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்ற விவரங்களும் தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. 
  • ரேடியோ, தொலைக்காட்சி, இணையதளத்துடன் கூடிய கம்ப்யூட்டா், இணைய இணைப்பு இல்லாத கம்ப்யூட்டா், செல்லிடப்பேசி, சைக்கிள், ஸ்கூட்டா், மோட்டாா் சைக்கிள், காா், ஜீப், வேன், சமைலயறை, சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்டன.
  • இதேபோன்ற தகவல்கள் நிகழாண்டு கணக்கெடுப்பின் போதும் சேகரிக்கப்பட உள்ளன. வீடுகளுக்கான எண்ணிக்கையைக் கணக்கிடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வீடு வீடாக நடத்தப்படும் கள ஆய்வுகள் ஏப்ரலில் தொடங்க உள்ளது. இதுகுறித்த விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பணிகளை வருகிற செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு, குறைந்தபட்ச இருப்பு நிபந்தனை ரத்து: எஸ்பிஐ அறிவிப்பு
  • பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ, சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கான வட்டியை 3 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேபோல், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு கட்டாயம் ஆக்கியது. இதன்படி, பெருநகரம் என்றால் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 3,000, புறநகர்களில் 2,000, கிராமப்புறங்களில் 1,000 வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அபராதமாக 5 முதல் 15, ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டது. 
  • இந்நிலையில், குறைந்த பட்ச இருப்பு நிபந்தனையை எஸ்பிஐ நேற்று ரத்து செய்துள்ளது. இதுபோல், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எம்எஸ் என்ற குறுந்தகவல் அனுப்புவதற்காக காலாண்டிற்கு ஒரு முறை வசூலிக்கப்படும் கட்டணத்தையும் வங்கி ரத்து செய்துள்ளது. 
  • சேமிப்பு கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்தால் அதற்கு ஆண்டிற்கு 3.25 சதவீதம் வட்டி ஒரு லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கு 3 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. தற்போது இந்த வட்டி விகிதத்தை ஒரு மாதிரியாக 3 சதவீதமாக எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது.
கொரோனா தீவிர தொற்றுநோய் என அறிவித்தது உலக சுகாதார அமைப்பு
  • தீவிர தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது கொரோனா... கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
  • கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
  • ஒரு தீவிர தொற்றுநோய் என்பது ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் ஒரு நோயாகும். வைரஸ் குறித்த எச்சரிக்கையற்ற செயற்பாட்டினால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • எனவே அவசர மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவுவதன் போக்கை மாற்றுமாறு அவர் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வைரஸை அடக்கிக் கட்டுப்படுத்தமுடியும் என்பதை பல நாடுகள் நிரூபித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel