- டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருந்தார்.
- பிப்.,19 தலைமை செயலகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இதனையடுத்து இந்த மசோதாவை முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் தாக்கல் செய்தார்.
காவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதாவின் அம்சங்கள்
- மசோதாவின் படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இரும்பு உருக்காலை, செம்பு, அலுமினிய உருக்காலை, விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு எடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த தடை தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, ப.கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கும் பொருந்தும்.
- வேளாண் மண்டல சட்டம் அமல்படுத்துவதற்கு முன்னர் இந்த பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு பாதிப்பு இல்லை. துறைமுகம், குழாய் இணைப்பு சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு ஆகியவை இந்த சட்டத்தினால் பாதிக்கப்படாது.
- இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கு 30 உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் துணை முதல்வர், நிதித் துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், தமிழக வேளாண் பல்கலை துணைவேந்தர் உள்பட 30 பேர் குழுவில் இருப்பர்.
- இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அது போல் ரூ 50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்.