இந்தியா மியான்மா் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- மியான்மா் அதிபா் யு வின் மைன்ட் தன் மனைவி டாவ் சோசோவுடன் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா்களுக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் வியாழக்கிழமை அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் அவா்களை வரவேற்றனா்.
- இதைத் தொடா்ந்து, அதிபா் யு வின் மைன்ட் பிரதமா் மோடியுடன் தில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்குமிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக, 'ஆள்கடத்தலைத் தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவது; கடத்தப்பட்டவா்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பது' என்ற புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மியான்மரில் இந்திய நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ராக்கைன் மாகாணத்தில் வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடா்பாக 3 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
- முன்னதாக, மியான்மா் அதிபா் யு வின் மைன்டும், அவரின் மனைவி டாவ் சோ சோவும் ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6-வது கடலோர ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6-வது கடலோர ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளத்திலிருந்து ரோந்து கப்பல் முதல் பயணம். ரோந்து கப்பல் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்.
ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
- மத்திய அரசின், 'ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தில் இணைவதற்கு, மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கிறார்.
- மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. 'ஆயுஷ்மான்' எனப்படும் இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டத்தை செயல்படுத்த மறுப்பு தெரிவித்து வருகிறது.
- ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து, மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு உள்ளதால், இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்.
- மாநிலத்தில் ரேஷன் முறையை, 'டிஜிட்டல்' மயமாக்க, ஏற்கனவே, 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம். அதை யார் திருப்பி தருவர். இதைத் தவிர மத்திய அரசு, எங்களுக்கு அளிக்க வேண்டிய, 6,000 கோடி ரூபாயையும் தரவில்லை. கருத்து வேறுபாடு உள்ளதால், ரேஷன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்.
பத்தாம் வகுப்பு வரை தாய் மொழி கட்டாயம்: சட்டசபையில் மசோதா தாக்கல்
- பத்தாம் வகுப்பு வரை தாய் மொழியை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என மசோதா ஒன்று சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிபிஎஸ்சி உள்பட ஒரு சில பள்ளிகளில் மராத்தி மொழி இல்லாமல் வெறும் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கபடுவதாக புகார் அளிக்கப்பட்டது.
- இதனை அடுத்து சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் மராத்தி மொழி பயில வேண்டியது கட்டாயம் என அமைச்சர் சுபாஷ் தேசாய் அறிவித்தார்.
- இதற்கான சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பணக்கார நாடு! பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்தியா
- உலகில், அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஏழாவது இடத்தில் உள்ளதாக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, 'கிரெடிட் சுவிஸ்' ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பணக்கார நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், அந்நாட்டின் தனி நபர் வருவாய், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட ஒரு சில நாடுகளை விட குறைவாக உள்ளது.
- அரசு, தனி நபர், குடும்பம், தொழில்கள் ஆகியவற்றின் சொத்து மதிப்பில், கடன் போக, எஞ்சிஉள்ளது, ஒரு நாட்டின் மொத்த சொத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது.
- இந்த வகையில், 2019ல், உலகின் மொத்த சொத்து மதிப்பு, 25 ஆயிரத்து, 560 லட்சம் கோடி ரூபாய்; இது, 2018ல் இருந்ததை விட, 639 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.வரும், 2024ல், உலகின் சொத்து மதிப்பு 32 ஆயிரத்து, 589 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகில், கோடிக்கணக்கான மக்கள், வறுமையால் இறக்கின்றனர்.
- இருந்தபோதிலும், தனி நபரின் சராசரி சொத்து மதிப்பு, 50 லட்சம் ரூபாயாக உள்ளது. உலகளவில், முதல், 10 இடங்களில் உள்ள பணக்கார நாடுகளில், இந்தியா, ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
- இந்தியாவின் சொத்து மதிப்பு, 895 லட்சம் கோடி ரூபாய்; இதில், தனிநபர் சராசரி சொத்து, 10.34 லட்சம் ரூபாய்; சராசரி கடன், 95ஆயிரத்து, 566 ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
- உலக இளையோர் எண்ணிக்கையில், இந்தியா, 17 சதவீத பங்களிப்பையும், சர்வதேச சொத்து மதிப்பில், 3.5 சதவீதத்தையும், இந்தியா கொண்டுள்ளது. உலக சொத்து மதிப்பு பட்டியலில், அமெரிக்கா, 7,526 லட்சம் கோடி ரூபாயுடன், முதலிடத்தில் உள்ளது.
- இங்கு, பெருங்கோடீஸ்வரர்கள், 1.80 கோடி பேர் உள்ளனர். தனிநபரின் சராசரி சொத்து மதிப்பு, 3 கோடி ரூபாய்; சராசரி கடன், 44 லட்சம் ரூபாய். சீனா, 4,544 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- உலகளவில் உள்ள இளையோர்களில், சீனாவில் மட்டும், 21.4 சதவீதம் பேர் உள்ளனர். உலகின் மொத்த சொத்தில், சீனாவின் பங்கு, 17.7 சதவீதமாக உள்ளது. இங்கு தனி நபர் சராசரி சொத்து மதிப்பு, 41 லட்சமாகவும், சராசரி கடன், 3 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
- உலகின் மொத்த சொத்தில், பாதி அளவு, அமெரிக்கா, சீனா வசம் உள்ளன. ஜப்பான், 1,775 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு, தனி நபர் சொத்து மதிப்பு, 1.69 கோடி ரூபாய்; சராசரி கடன், 20 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. அடுத்த இடத்தில் ஜெர்மனி உள்ளது.
- இந்நாட்டின் சொத்து மதிப்பு, 1,065 லட்சம் கோடி ரூபாய். தனி நபர் சொத்து மதிப்பு, 1.53 கோடி ரூபாய்; சராசரி கடன், 21.84 லட்சம் ரூபாய்.பிரிட்டன், 1,029 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்டுள்ளது. இங்கு, தனி நபர் சொத்து மதிப்பு, 1.98 கோடி ரூபாய்; சராசரி கடன், 35.76 லட்சம் ரூபாய். பிரான்ஸ், 974 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
- இங்கு, தனி நபர் சொத்து மதிப்பு, 1.96 கோடி ரூபாய்; சராசரி கடன், 27.55 லட்சம் ரூபாய். இத்தாலி, 802 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டில், தனி நபர் சொத்து மதிப்பு, 1.66 கோடி ரூபாய் ஆகவும், சராசரி கடன், 15.77 லட்சம் ரூபாய் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கனடாவின் சொத்து மதிப்பு, 608 லட்சம் கோடி ரூபாய்.
- இங்கு, ஒருவரின் சொத்து மதிப்பு, 2.08 கோடி ரூபாய் ஆகவும், சராசரி கடன் 42.28 லட்சம் ரூபாய் ஆகவும் உள்ளது. ஸ்பெயின், 551 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டின் தனி நபர் சொத்து மதிப்பு, 1.47 கோடி ரூபாய்; சராசரி கடன், 16.90 லட்சம் ரூபாய் என, மதிப்பிடப்பட்டு உள்ளதாக, கிரெடிட் சுவிஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 புதிய பெருங்கோடீஸ்வரர்கள்கடந்த, 2019ல், புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியதில், சீனா, அமெரிக்கா, முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளன.
- இந்நாடுகளில், முறையே, 799 மற்றும் 626 பெருங்கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இந்தியா, மாதம் குறைந்தது மூன்று பேர் வீதம், புதிதாக, 34 பெருங் கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் பெருங்கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, 138ஆக உயர்ந்துள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர், முகேஷ் அம்பானி, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
- இவர் சொத்து மதிப்பு 4.75 லட்சம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவர், சராசரியாக ஒரு மணி நேரத்தில், 7 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். உலகின் பாதி சொத்து யாரிடம்?உலகில், 4.70 கோடி பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களிடம், 11 ஆயிரத்து, 218 லட்சம் கோடி ரூபாய் சொத்து உள்ளது. இது, உலக சொத்து மதிப்பில், 44 சதவீதம்.அதேசமயம், உலக மக்கள் தொகையில், 57 சதவீதம், அதாவது, 288 கோடி பேரிடம், 1.8 சதவீத அளவிற்கே, அதாவது, 447 லட்சம் கோடி ரூபாய் சொத்து தான் உள்ளது.