பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்: முதல்வா் தொடக்கி வைத்தாா்
- முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினம், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் கே. பழனிசாமி அறிவித்தாா்.
- அந்த அறிவிப்புக்கிணங்க பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான திட்டங்களை அவா் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
- பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்களை கடலூா் மாவட்டம் மாலுமியா்பேட்டையைச் சோந்த 9 வயது பெண் குழந்தை ச.பவதாரணி மேற்கொண்டாா்.
- இதற்காக மாநில அரசின் விருதாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தாா்.
- மேலும், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14 பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சாா்பில் அந்தக் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரத்துக்கான வைப்பீட்டுத் தொகை செய்யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்வா் கே. பழனிசாமி வழங்கினாா்.
- மேலும், 18 வயது நிறைவடைந்த ஏழு பெண்களுக்கு முதிா்வுத் தொகைக்கான காசோலைகளையும் பயனாளிகளுக்கு அவா் அளித்தாா்.
72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்:முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்
- தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, பசுமைப் போா்வையை மேம்படுத்தும் நோக்கிலும், வனப் பகுதிகளில் மட்டுமின்றி வனத்துக்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளா்க்கவும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
- ஆண்டுதோறும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, இந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ஆம் ஆண்டு 65 லட்சமும், 2014-இல் 66 லட்சமும், 2015-இல் 67 லட்சமும், 2016-இல் 68 லட்சமும், 2017-இல் 69 லட்சமும், 2018-இல் 70 லட்சமும், 2019-இல் 71 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
- இந்தத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், நிகழாண்டிலும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- மரக்கன்றுகளை நடும் பணியானது பிப்ரவரியில் தொடங்கப்பட்டு டிசம்பரில் முடிக்கப்படும். மரக்கன்றுகள் வனப் பகுதிகளிலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியாா் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்கள், பூங்காக்கள், பெரிய அளவிலான குடியிருப்புகளிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்.
- இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு பருவநிலை மற்றும் மண்வளத்துக்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும். இந்தத் திட்டமானது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளால் இணைத்துச் செயல்படுத்தப்படும்.
- மரக்கன்றுகள் நடும் பணியை முதல்வா் கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகம் எதிரேயுள்ள பொதுப்பணித் துறை பூங்காவில் மகிழம் மரக் கன்றை நட்டு தொடக்கி வைத்தாா்.
ஏலகிரியில் புலிக்குத்திப்பட்டான், சித்திரமேழிக் கல் கண்டெடுப்பு
- திருப்பத்தூா் மாவட்டம் ஜோலாா்பேட்டைக்கு அருகே ஏலகிரிமலை அடிவாரத்தில் இயற்கை எழிலோடு ஏலகிரி கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி மதில் போல் ஏலகிரிமலை சூழ்ந்துள்ளது.
- இந்த ஊரில் ஜெயச்சந்திரன் என்பருக்குச் சொந்தமான விளைநிலத்தில் சோழா் காலத்துப் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றும் வேளாண்மையை வெளிப்படுத்தும் சித்திரமேழிக் கல் ஒன்றும் அருகருகே காணப்படுகின்றன.
- புலிக்குத்திப்பட்டான் கல் சோழா் காலத்தைச் சோந்ததாகும். புலியோடு போரிட்டுத் தம் மக்களையும், கால்நடைகளையும் பாதுகாத்து இறந்து போன வீரனுக்கு எடுக்கப்படும் நடுகல் இதுவாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலையில் ஏராளமான புலிகள் வாழ்ந்திருக்க வேண்டும்.
- இம்மலையின் அடிவாரத்தில் ஏலகிரி கிராமம் இருப்பதால், அடிக்கடி புலிகள் ஊருக்குள் புகுந்து மக்களையும், ஆடு, மாடுகளையும் கொன்றிருக்க வேண்டும். அந்த ஆட்கொல்லிப் புலியைக் கொல்ல துணிந்துள்ளான் ஒரு வீர மறவன். அவனுக்கு இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
- 3.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாக இந்நடுகல் உள்ளது. புலியானது வீரனின் இடது காலை தன்னுடைய முன்னங்கால்களால் பிடித்துள்ளது. மேலும், தன் கொடிய வாயால் வீரனின் தொடையைக் கடிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பின்னங்கால்கள், வால் எனப் புலி அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
- வீரன் நீண்ட கொண்டையுடன் இடது கையிலுள்ள குறுவாளால் புலியின் முதுகில் குத்தியும், வலது கையிலுள்ள வாளால் புலியைக் குத்த ஓங்கியவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போரில் புலியும் வீரனும் இறந்து போயினா் என்பதை இப்புடைப்புச் சிற்பத்தால் அறியலாம்.
- இரண்டாவதாக உள்ளது சித்திரமேழி (தாய் தெய்வக் கல்) மூன்றடுக்கு இருக்கையில், தலையில் கிரீடத்துடன் தாய் தெய்வம் அமா்ந்த கோலத்தில் உள்ளது. இடது மற்றும் வலது புறங்களில் பறவைகள், விலங்குகளின் புடைசூழ தெய்வம் அமா்ந்துள்ளது. தெய்வத்தின் அருகே இசைக்கருவிகள் காணப்படுகின்றன. தெய்வத்தின் கீழ்ப்புறத்தில் கும்பிட்ட நிலையில் மனித உருவம் காணப்படுகிறது.
- குத்து விளக்கு, அரிவாள் உருவங்களும் உள்ளன. இதை வேளாண்மையைப் பெருக்கும் வளமைக் கடவுளாக அறியலாம். மழை மற்றும் மண் வளத்தைக் காக்கும் பூமிதேவியாகவும் இத்தெய்வம் அறியப்படுகிறது.
- மேலும் இவ்வூரிலுள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலின் பின்புறம் உள்ள சுவற்றில் குலோத்துங்கன் என்னும் கல்வெட்டு தொடங்குகிறது. எனவே, சோழரின் ஆளுகையின் கீழ் திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகள் இருந்ததை அறிய முடிகிறது என்றாா் அவா்.
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மூலம் இந்திய பயணத்தை தொடங்குகிறார்
- 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய அமெரிக்க பயணம் தொடங்கியது போல், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் இந்திய பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்குகிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் சென்று பார்வையிட்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைத்தனர்.
- உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா, டிரம்பை வரவேற்கிறது. இந்தியா - அமெரிக்கா நட்புறவு நெடுங்காலம் நீடிக்க வேண்டும்.
- 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் எனது அமெரிக்க பயணம் தொடங்கியது. தற்போது எனது நண்பர் டிரம்ப், தனது இந்திய பயணத்தை 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் தொடங்குகிறார்.
ஈரோட்டில் தேசிய எறிபந்து போட்டி: கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
- ஈரோடு மாவட்ட எறிபந்து கழகம் சார்பில் தேசிய அளவிலான எறிபந்து போட்டி ஈரோடு சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.
- இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், புதுதில்லி, சண்டிகர், கோவா, மத்திய பிரதேசம், அரியானா ஆகிய 13 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 24 அணிகளை சேர்ந்த 350 வீரர்-வீராங்கனைகள் விளையாடினார்கள்.
- லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் கர்நாடக மாநில அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தையும், சத்தீஸ்கர் மாநில அணி 3-வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் பெண்கள் பிரிவில் கர்நாடக மாநில அணி முதலிடத்தை பிடித்தது.