- சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களின் உற்பத்தி-பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் சீரிய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது
 
- 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 100 சதவீதம் மின்சார கார்களை கொண்ட நாடாக மாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக கூறி நாட்டின் வாகன உற்பத்தித் துறையையும் உலக நாடுகளையும் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.
 - இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு மின்சார வாகனத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
 
- நாட்டில் மின் வாகனங்களை "சார்ஜ்' செய்யும் வசதிகள், மின்சார வாகனங்களின் அதிகப்படியான விலை உள்ளிட்ட காரணங்களால் மின்சார வாகனத்தின் மீதான ஆர்வம் மக்களிடம் பெரியளவில் எழவில்லை.
 - இதுபோன்ற சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்த நீதி ஆயோக், மூன்று சக்கர வாகன போக்குவரத்தில் 2023-க்கு உள்ளாகவும், இருசக்கர வாகன போக்குவரத்தில் 2025-க்கு உள்ளாகவும் முழுமையாக மின்சார வாகன பயன்பாட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
 - 2030-ஆம் ஆண்டுக்குள் 50 ஜிகாவாட் பேட்டரிகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள், நீதி ஆயோக் மத்திய அரசுக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
- மஹிந்திரா நிறுவனம் 2,000 யூனிட்டுகளுக்கு நெருக்கமான எண்ணிக்கையில் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா அண்மையில் சுட்டுரை பதிவு மூலமாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
 - அதே போன்று, தனியார் தபால் சேவை நிறுவனங்கள் மற்றும் செயலி மூலமாக இயங்கும் வாடகை கார் சேவை நிறுவனங்கள் மின்சார கார்கள், இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களை தங்களது சேவைகளில் அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
 
மத்திய அரசின் சலுகைகள்
- மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் மின்சார வாகனங்களுக்கு அதிக அளவு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இதில், மின்னணு வாகன கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் வருமானவரி கழிவுத் தொகையாக கணக்கிடப்படும்.
 - மின்னணு வாகனங்களுக்கான சில உதிரி பாகங்களுக்கு சுங்கவரியிலிருந்து விலக்களிக்கப்படும். அந்த வாகனங்களுக்கான சரக்கு-சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
- மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தமிழகத்திலும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 - இதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட் அறிக்கையில், "சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் 2000 பிஎஸ்-6 பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்கவும், தமிழகத்தில் முதல்முறையாக 500 மின்சார பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
 - இதைச் செயல்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக ரூ.1,580 கோடி மதிப்பில் பிஎஸ்-6 தரத்திலான 2,213 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
 - இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி இடையே திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்த மின்சாரப் பேருந்து, சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
 
- தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், தனது அமெரிக்கப் பயணத்தின்போது, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 - பின்னர், தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 10 ஆண்டுகளுக்கான கொள்கைகளை வகுத்து அவர் வெளியிட்டார். இதன் மூலம், சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
 - மேலும், 2022-ஆம் ஆண்டின் இறுதிவரை 100 சதவீதம் மோட்டார் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவும், 2030-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு மாநில ஜிஎஸ்டியை 100 சதவீதம் திரும்ப வழங்கவும் இந்த மின்கொள்கை வழிவகுக்கிறது.
 - குறிப்பாக இந்தியாவின் முதல் எஸ்யுவி ரக மின்சார காரை ஹுண்டாய் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகம் செய்தது. இதையடுத்து, தங்களது மின்சார கார்களை நிசான், மஹிந்திரா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன.
 
மின்சார ஆட்டோக்கள்
- முதல்வரின் துபை பயணத்தின் நிறைவாக இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்துக்காக ரூ.100 கோடி முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபையின் கே.எம்.சி., மற்றும் எம் ஆட்டோ ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 - நவம்பர் மாத இறுதியில் இருந்து படிப்படியாக உற்பத்தி செய்யவுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவம்பர் 29-ஆம் தேதி முதற்கட்டமாக 100 மின்சார ஆட்டோக்களை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் அடுத்த 6 மாதங்களில் 4000 மின்சார ஆட்டோக்களை தயாரிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
- மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அதே சமயத்தில், அவற்றுக்கு தேவையான சார்ஜ் ஏற்றும் மையங்களையும் ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியமாகிறது.
 - இதனை உணர்ந்த தமிழக அரசு, வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகள், மின்கலன் ஆலைகள் ஆகியவற்றை அமைக்க நிலம் வாங்கினால், 2022-ஆம் ஆண்டு வரை முத்திரைத்தாள் கட்டணத்தில் 100 சதவீத விலக்கு அளிப்பதோடு, தமிழகத்தில் உள்ள மால், சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்களில் மின்வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தனது கொள்கையில் அறிவுறுத்தியுள்ளது.
 - இது போன்ற கொள்கையை முன்னிறுத்தியே மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் போன்ற மின் நிறுவனங்கள் விரைவில் ஆற்றல் ஏற்று நிலையங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 மின்னூட்ட நிலையங்களை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
- தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
 - அதே சமயம், இதர வாகனங்களை ஒப்பிடும் போது, மின்சார வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு, நான்கில் ஒரு பங்கு குறைவாக உள்ளது. அத்துடன், சுற்றுச்சூழல் மாசு பிரச்னை இல்லை என்பதும் சிறப்பம்சமாகும்.
 - மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 21.2 மில்லியன் இருசக்கர வாகனங்களும், சுமார் 3.4 மில்லியன் கார்களும் விற்பனையாகியுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
 - அரசின் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, விரைவில் மின்வாகன விற்பனை மற்றும் பயன்பாட்டில் தமிழகம் முன்னோடியாகத் திகழும் என தெரிகிறது.
 

