3000 ரயில் பெட்டிகள்: பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை சாதனை
- இந்திய ரயில்வேயின் பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை இவ்வாண்டில் 3000 ரயில் பெட்டிகளை ஒன்பது மாதத்திற்குள் தயாரித்துள்ளது. அதன் அர்ப்பணிப்பும், ஆற்றலும் இதில் வெளிப்படுகிறது. அதிகரித்து வரும் பெட்டிகள் தேவையை சந்திப்பதற்கு இது பெரிதும் உதவும்.
- மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு, சென்ற ஆண்டு 289 பணி நாட்கள் எடுத்திருந்த நிலையில், இவ்வாண்டு 215 நாட்களிலேயே 3000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
- 2014 ஆம் ஆண்டு வரை இத்தனை நாட்களில் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபிக்கி தலைவராக சங்கீதா ரெட்டி பொறுப்பேற்பு
- ஃபிக்கி அமைப்பின் புதிய தலைவராக அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிா்வாக இயக்குநா் சங்கீதா ரெட்டி தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
- டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் தலைவா் உதய் சங்கா், ஃபிக்கியின் மூத்த துணை தலைவராகப் பொறுப்பேற்றாா். ஹிந்துஸ்தான் யுனிலிவா் லிமிடெட் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் மேத்தா, ஃபிக்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலையில் தமிழ் இருக்கை தமிழக அரசு ரூ.1 கோடி உதவி
- அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கை அமைக்க உதவும்படி, ஹூஸ்டன் தமிழ் அமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
- அதை ஏற்று, தமிழ் இருக்கை அமைக்க, தமிழக அரசின் பங்குத் தொகையாக, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடம் வழங்கினார்.
- வெளிநாட்டு பல்கலைகளில், தமிழ் இருக்கை அமைக்கப்படுவதால், அங்கு வாழும் தமிழர்கள் மற்றும் அந்நாட்டினர், தமிழ் மொழியை கற்கவும், தமிழ் பண்பாட்டை அறியவும், ஆய்வு செய்யவும் வழி ஏற்படும்.
தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றிய தமிழருக்கு, 'சிறந்த விவசாயி விருது'
- தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றிய தமிழருக்கு, கர்நாடக அரசின், மாவட்ட அளவிலான, சிறந்த விவசாயிக்கான விருது கிடைத்துள்ளது.
- விழாவில், விவசாய நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.இதில், மாண்டியா, மத்துார், மலவள்ளி, பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, கே.ஆர்., பேட் ஆகிய ஏழு தாலுகாவிலிருந்து, தலா இரண்டு விவசாயிகளை தேர்வு செய்து, மாவட்ட அளவிலான, சிறந்த விவசாயி என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
- இதில், மத்துார் தாலுகா ஒலகரதொட்டி விவசாயி மகேந்திரன் என்பவருக்கு, வருவாய் துறை அமைச்சர் அசோக் விருது வழங்கினார்.
தேசிய அறிவியல் மைய தலைவராக சேதுராமன் பஞ்சநாதன் நியமனம்
- அமெரிக்காவில் அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசு அமைப்பாக தேசிய அறிவியல் மையம் உள்ளது.
- இந்த மைய தலைவராக இருக்கும் பிரான்ஸ் கோடோவாவின் பதவிக் காலம் வரும் 2020-ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. அதையடுத்து அந்தப் பதவிக்கு சேதுராமன் பஞ்சநாதனை அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் நியமித்துள்ளார்.
- ஆராய்ச்சி, புத்தாக்கம், நிர்வாக முகாமைத்துவம், கொள்கைகளை வகுத்தல் ஆகிய துறைகளில் சேதுராமன் பஞ்சநாதன் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அதனால், தேசிய அறிவியல் மையத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - ஜே.எம்.எம்.-காங் அணி 47 இடங்களில் வென்றது
- ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்.-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்று புதிய அரசை அமைக்க உள்ளது. இக்கூட்டணியின் ஹேமசந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
- ஜார்க்கண்ட்டில் இதுவரை இல்லாத வகையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தனிப்பெரும் கட்சியாக 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜே.எம்.எம். தலைமயிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது.
- இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 41. தற்போது ஜே.எம்.எம். கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதிய அரசை இக்கூட்டணி எவ்வித தடையுமின்றி அமைக்க உள்ளது.
- ஜே.எம்.எம்.-ன் ஹேமந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார். கடந்த தேர்தலில் 37 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 25 தொகுதிகளில்தான் வென்றுள்ளது.
- ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பி) 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ 2 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 1 தொகுதியிலும் வென்றுள்ளன.