Saturday, 20 July 2019

20th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இனி நவம்பர் 1 தமிழ்நாடு நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
 • நவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
 • 50'களில் நடந்த சம்பவம் இது.. 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று கூறி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை.
 • மொத்தமாக 75 நாள். மொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான்.
 • நாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். "இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தும், அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கம்.
 • இறுதியாக, சங்கரலிங்கம் அறிஞர் அண்ணாவிடம், "அண்ணா! நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? " என்று ஏக்கமாக கேட்டார். 76-வது நாள் உடம்பு மோசமாகி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரும் பிரிந்துவிட்டது. அப்போது அவருக்கு வயதோ 78.
 • சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு அதற்கும் செவிசாய்க்கவில்லை. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, 'தமிழக அரசு' என்று பெயரை மாற்றி வரலாறு படைத்தது.
 • அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 • அது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. 
 • அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை
 • தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.
 • அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், நெல்லை மாவட்டம், இடையன்குடியில் தங்கி, தமிழ்ப் பணியாற்றியவர். 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற ஆய்வு நுால் எழுதி உள்ளார். 1856ல் அதை ஆங்கிலத்தில், வெளியிட்டார். 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', என்ற நூலை எழுதியுள்ளார்.
 • தென்னிந்திய மொழிக் குடும்பத்தில திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்தவர் ராபர்ட் கால்டுவெல். பின்னர் அதுபற்றி கட்டுரைகளாகவும் வெளியிட்டார். 1891ல் ஆகஸ்ட் 28ம் தேதி இயற்கை எய்தியவர் கால்டுவெல்.கம்போடியா நாட்டு பாடப் புத்தகத்தில் திருக்குறள்: தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்
 • தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். 
 • அப்போது பேசிய அவர்,மாமல்லபுரத்தில் உள்ள கற்கால சிற்பங்களின் வாயிலாக 6ம் நூற்றாண்டு காலத்தில் காஞ்சி புரத்தை ஆட்சி செய்த பல்லவ அரசை ஆண்ட மகேந்திர வர்மன் தான் தற்போதைய கம்போடியாவின் கேமர் பேரரசை ஆட்சி புரிந்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், தமிழகத்தில் உள்ள பல்லவ சிற்பங்கள் மூலம் கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளது என்பதை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
 • தொடர்ந்து பேசிய அவர், ராஜேந்திர சோழனுக்கு தங்கள் நாட்டில் சிலை வைக்க உள்ளதாகவும், உலகப் பொதுமறையான திருக்குறளை கேமர் மொழியில் மொழிபெயர்த்து கம்போடியா நாட்டுப் பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
 • இந்நிலையில், உலகப்பொதுமறையான திருக்குறள் அங்குள்ள பள்ளிப்பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் விதத்திலும், இருநாடுகளுக்கிடையேயான உறவைப் பலப்படுத்தும் வகையிலும் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் உலகத்தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு
 • தமிழக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ.2.50 கோடியாக இருக்கிறது. இதை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று, உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, ரூ.3 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
அதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு
 • மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. 
 • இதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
 • இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 • இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தின் பெயர் அதிவேக சாலை என மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.காவிரியை மாசுபடுவதிலிருந்து மீட்க "நடந்தாய் வாழி காவிரி திட்டம்'
 • காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, "நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 • தமிழகத்தில் நீர் வளத்தினை பாதுகாக்க, நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல், அதிநுகர்வு, அபாயகரமான குறுவட்டங்களில் பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செ
 • யல்படுத்துதல் போன்றவை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்படும்.இந்தத் திட்டங்கள் மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும். நகரப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு அவற்றில் பெண்கள் அதிகளவு கலந்து கொண்டு செயல்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும்.
 • நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் செயல்படுத்தப்படும். இந்தத் தீவிர இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகளவு பங்கேற்பர். இந்த தீவிர இயக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவர்.
 • சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுபயன்பாடு செய்தல் தொடர்பாக ஒரு கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது. சென்னை மாநகரில் பெறப்படும் கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டராகும். 
 • அதில் நாளொன்றுக்கு 34 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக மறு பயன்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன் தொழிற்சாலை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீர் வழங்க இரண்டாம், மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
 • இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல ரூ.1,700 கோடியில் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் கழிவுநீரை நவீன தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி சுத்திகரித்து அதன் மூலம் நாளொன்றுக்கு பெறப்படும் 260 மில்லியன் லிட்டர் நீரை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். 
6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்
 • ஆறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.மத்திய பிரதேச கவர்னராக இருந்த, ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 • பீஹார் கவர்னர் லால்ஜி டாண்டன், ம.பி., கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீஹார் கவர்னராக, பாகு சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். திரிபுராவின் கவர்னராக, ரமேஷ் பயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • நாகாலாந்தில், நாகா பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தி சமரசம் ஏற்படுத்திய, ஆர்.என். ரவி, நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 • மேற்கு வங்க கவர்னராக, ஜனதா தளத்தின் முன்னாள், எம்.பி.,யான, ஜக்தீப் தங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.உத்தர பிரதேசம், 1950ல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. அதன்பின், முதல் பெண் கவர்னராகிறார் ஆனந்தி பென் படேல். 1947ல் ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்தபோது, சரோஜினி நாயுடு, கவர்னராக இருந்தார்.
 • சமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கான கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். ராஜ்யசபா, எம்.பி.,யான அனுசுயா உய்கே, சத்தீஸ்கர்; பா.ஜ., மூத்த தலைவர் பிஸ்வா பூஷண் ஹரிசரண், ஆந்திரா; பா.ஜ., மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, ஹிமாச்சல பிரதேசம்; ஹிமாச்சல் கவர்னராக இருந்த ஆச்சாரியா தேவவிரத், குஜராத் கவர்னர்களாக நியமிக்கப்பட்டனர்.
கேரளத்தில் விண்வெளி பூங்கா
 • நாட்டிலேயே முதலாவதாக, 'இஸ்ரோ'வுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க, கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.திருவனந்தபுரத்தில், 'இஸ்ரோ'வின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இங்கு முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியவர். 
 • வி.எஸ்.எஸ்.சி., நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
 • ஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் (நாலேட்ஜ் சிட்டி) அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், 20 ஏக்கர் நிலத்தில்,நாட்டிலேயே முதலாவதாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.இந்த விண்வெளி பூங்காவில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவு மையம், விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு தங்கம்
 • பிரசிடன்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் ஜாகிர் காயம் காரணமாக விலகினார். 
 • இதனால் விளையாடாமலேயே ஷிவ தபா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து அல்ஜீரியா சாம்பியன்
 • ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் அல்ஜீரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆப்ரிக்க நாட்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த தொடர் ஜூன் 21ம் தேதி எகிப்தில் தொடங்கியது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. 
 • கெய்ரோவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்ஜீரியா - செனகல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்ஜீரியாவின் பாக்தாத் பவுனேத்ஜா அசத்தலாக ஒரு கோல் அடித்தார். 
 • இதைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய செனகல் வீரர்கள் அல்ஜீரியாவின் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். 
 • எனினும், அல்ஜீரியா தற்காப்பு ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தியதால் செனகல் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அல்ஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 
ஹிமா தாஸ் ஐந்தாவது தங்கம்
 • சர்வதேச தடகளத்தில் ஒரே மாதத்தில் ஐந்தாவது தங்கம் கைப்பற்றி அசத்தினார் ஹிமா தாஸ். செக்குடியரசில் சர்வதேச தடகள போட்டிகள் நடந்தன. 
 • பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் ஹிமா தாஸ், 52.09 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 
 • ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், 400 மீ., ஓட்டத்தில் முதுகுப்பகுதி வலி காரணமாக பங்கேற்காமல் இருந்தார். இதன் பின் 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்று வந்தார். 
 • கடந்த 15 நாட்களில் போலந்தில் நடந்த இரு வேறு தொடர்கள் (ஜூலை 2, 8), செக்குடியரசில் (ஜூலை 13, 19) நடந்த இரு போட்டிகள் என, 200 மீ., ஓட்டத்தில் நான்கு தங்கம் கைப்பற்றி இருந்தார்.
 • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய 400 மீ., ஓட்டத்திலும் தற்போது அசத்தியுள்ளார். 
 • கடந்த ஒரு மாதத்தில் ஹிமா தாஸ் வென்ற ஐந்தாவது தங்கமாக இது அமைந்தது. இந்திய அணிக்கு தங்கம் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் 2018ல் ஆசிய விளையாட்டு நடந்தது. 
 • இதன் கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜிவ், பூவம்மா, ஹிமா தாஸ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது.
 • ந்தய துாரத்தை இரண்டாவது அணியாக கடந்த இவர்கள், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். முதலிடம் பிடித்த பக்ரைன் அணி தங்கத்தை தட்டிச்சென்றது. 
 • இதற்கிடையே, இப்போட்டியில் பங்கேற்ற பக்ரைன் வீராங்கனை கெமி அட்கோயா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க, சர்வதேச தடகள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது.
 • கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்திற்குப்பின், கெமி போட்டியில் வென்ற பட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்த காலகட்டத்தில்தான் ஆசிய விளையாட்டு நடந்தது. 
 • இதனால், இவர் அடங்கிய பக்ரைன் அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment