நிரந்தர நீதிபதிகளாக 6 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
- சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் 6 பேரை, நிரந்தர நீதிபதிகளாக நியமித்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பதவி ஏற்றனர். இவர்கள் 6 பேரையும், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது.
- இந்தப் பரிந்துரையை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 6 பேரும் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.9) பதவி ஏற்க உள்ளனர். இவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் இதுவரை ரூ.1844.92 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
- மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகளால் இதுவரை ரூ.1844.92 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.398.11 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீன கடற்படை விழாவில் இந்திய கப்பல்கள்
- சீன கடற்படையின், 70வது ஆண்டு விழாவையொட்டி நடக்கும் நிகழ்ச்சியில், நம் நாட்டைச் சேர்ந்த, இரண்டு கடற்படை கப்பல்கள் பங்கேற்கின்றன.அதிகளவில் போர்க் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை உடைய, சீன கடற்படையின், 70வது ஆண்டு விழா, வரும், 23ல் கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி, குயிங்டோ துறைமுகத்தில், பன்னாட்டு கடற்படை கப்பல்களின் அணிவகுப்பு நடக்கவுள்ளது. நம் நாட்டின் சார்பில், ஐ.என்.எஸ்., கோல்கட்டா மற்றும் ஐ.என்.எஸ்., சக்தி என்ற இரண்டு கடற்படை கப்பல்கள் பங்கேற்கின்றன.
தயாரிப்பை குறைக்க முடிவு செய்த போயிங் விமான நிறுவனம்
- அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தது, பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கு கடந்த மாதம் 10-ந்தேதி புறப்பட்டு சென்றது.
- ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 6 நிமிடங்களில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 157 பேர் பரிதாபமாக இறந்தனர். அதற்கு முன்பாக கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் 29-ந்தேதி இதே ரக லயன் ஏர் விமானம், இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகி 189 பேர் பலியாகினர்.
- இப்படி தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் இந்த விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்தன. இந்த விபத்துகளால் போயிங் விமான நிறுவனம் மீது அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் 2 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. விமானத்தின் தொழில் நுட்ப கோளாறுதான் விபத்துக்கு காரணம் என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- இந்தநிலையில், 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்கள் தயாரிப்பை குறைக்க போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இந்த விமானத்தின் மாதாந்திர உற்பத்தி இலக்கு 52-ல் இருந்து 42 ஆக குறைக்கப்படுகிறது. தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதால் பல்வேறு விமான நிறுவனங்கள் இந்த விமானத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால்தான் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்கள் தயாரிப்பை குறைப்பது என போயிங் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.