புலி சிற்பத்தில் கல்வெட்டு கண்டுபிடிப்பு
- பொள்ளாச்சி அருகே, புலி சிற்ப கல்லில் உள்ள கல்வெட்டினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- பொள்ளாச்சி அருகே தேவனுார்புதுாரில், நவக்கரை பாலம் அருகில் நரிகடிச்சான் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், புலியைக் குத்திக் கொல்லும் வீரன் ஒருவனின் சிற்பத்தை வைத்து இப்பகுதி மக்கள் வணங்குகின்றனர்.
- வேப்ப மரத்தின் அருகில் அமைந்துள்ள கோவிலில், ஆறடி நீளமும், ஐந்தடி அகலமும் கொண்ட ஒரு சிறிய கருவறை அமைப்பு உள்ளது.இங்கு, புலியைத் தாக்கிக் கொல்லும் வீரனின் உருவம் பொறித்த, 'புலி குத்தி -நடுகல்' உள்ளது.
- போர் வீரர்களுக்கும், கால்நடைகளை எதிரி வீரர்களிடமிருந்தும், புலி போன்ற கொடிய விலங்குகளிடமிருந்தும் காத்துச் சண்டையிடுகின்ற வீரர்களுக்கும் நடுகல் என்னும் நினைவுக்கற்கள் எழுப்பி மக்கள் வழிபடுதல் சங்க காலம் முதல் உள்ள மரபாகும்.அவ்வகையில், தேவனுார்புதுார் நடுகல், 'நரிகடிச்சான் கோவில்' என்றும், 'மாலக்கோவில் என்றும் பெயரிட்டு வழிபடுகின்றனர். தாத்தய்யன் கோவில் என்றும் குறிப்பிடுகின்றனர்.
- நடுகல் சிற்பம் (புலி குத்திக்கல் சிற்பம்), கல்வெட்டு எழுதப்பட்ட காலத்துக்கும் பழமையானது என்பதில் ஐயமில்லை. நடுகல்சிற்பத்தின் காலம் கி.பி. 18- ஆம் நுாற்றாண்டாகும்.
- முல்லை நிலக்கடவுளான 'மால்' என்றும் 'மாயோன்' என்றும் பெயர் இடம் பெற்றுள்ளதால், மாலக்கோவில் எனப்பெயர் வர காரணமாக அமைந்துள்ளது.கால்நடை வளர்க்கும் மக்கள் தம் கடவுளாக 'மால்' என்னும் ஆயர்பாடிக் கண்ணனை வழிபடுவர்.
- 'மால் கோவில்' என்னும் பெயரே காலப்போக்கில் மருவி 'மாலக்கோவில்' என்றானது.
டுவிட்டர் இந்தியா புதிய தலைவர் மணீஷ் மகேஸ்வரி
- டுவிட்டர் (சுட்டுரை) நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநராக (எம்.டி.) மணீஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். டுவிட்டரில் இந்தியச் செயல்பாடுகளுக்கு அவர் தலைவராக இருப்பார்.
- முன்னதாக இப்பொறுப்பில் இருந்த தரண்ஜீத் சிங் கடந்த ஆண்டு பதவியில் இருந்து விலக்கப்பட்டு வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அப்போது இடைக்காலத் தலைவராக பாலாஜி கிருஷ் நியமிக்கப்பட்டார்.
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்து அறிவிப்பு
- இலங்கையில் நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.
- ஈஸ்டர் திருநாளான நேற்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 290 பேர் பலியாகினர். 400 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் தற்போதைய நிலையில் முப்படை வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. இன்று (22ம் தேதி ) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இந்தியா பதக்க வேட்டை
- கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி தொடக்க நாளிலேயே 5 பதக்கங்களை வென்று அசத்தியது.
- மகளிர் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 60.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் அவினாஷ் சப்லே 8 நிமிடம், 30.19 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார்.
- மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, மகளிர் 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதாரி, ஆண்கள் 10000 மீட்டர் ஓட்டத்தில் கவித் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று அசத்திய வீர தமிழச்சி
- 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- இந்த நிலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 2 நிமிடம், 02:70 வினாடி நேரத்தில் பந்தய தூரத்தை கடந்த கோமதி இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்தார்.திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
- ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோல் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார்.