விண்ணில் செலுத்தப்பட்டது மாணவிகள் உருவாக்கிய செயற்கைக்கோள்: ஆசியாவிலேயே முதல்முறையாக சாதனை
- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பயிலும் 15 மாணவிகள் இணைந்து சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்றனர்.
- இதைத் தொடர்ந்து, கூட்டு முயற்சியுடன் இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. ஆசியாவிலேயே முதல்முறையாக முற்றிலும் மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் இது. இதற்கு, எஸ்.கே.ஐ. என்.எஸ்.எல்.வி. 9 மணியம்மையார் சாட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணியளவில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் இந்தச் செயற்கைக்கோள் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
- இந்தச் செயற்கைக்கோள் 1.03 லட்சம் அடி உயரம் வரை சென்றது. பின்னர், வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று, பாராசூட் உதவியுடன் பறக்கத் தொடங்கியது. அதில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்ததால், இச்செயற்கைக்கோள் செல்லும் உயரம், திசை குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாணவிகள் கண்காணித்தனர்.
- பின்னர், இச்செயற்கைக்கோள் பிற்பகலில் கரந்தை அருகே சுங்கான்திடலில் தரை இறங்கியது. இந்தச் செயற்கைக்கோள் மேல் நோக்கிச் செல்லும்போதும், தரை இறங்கும்போதும், அதிலுள்ள கேமராவின் உதவியுடன் வான்வெளியில் உள்ள வளிமண்டலத்தின் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை நிலை குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. பதிவான காட்சிகளை வைத்து மாணவிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- இந்தச் சாதனையை ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது.
- கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களில் 40 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்து ஆய்வு செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தாய் நிறுவனமான வேதாந்தா 247 ஹட்ரோகார்பன் கிணறுகளையும், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி 67 எண்ணெய் கிணறுகளையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன.
- அதில் ஓஎன்ஜிசி நிறுவனம் 40 இடங்களில் ஆய்வுகள் செய்து அறிக்கை சமர்ப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது அனுமதியளித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர் ரூ.11,012 கோடி முதலீடு
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.5,360 கோடி முதலீட்டை விலக்கிக் கொண்டனர்.
- மாறாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.11,182 கோடி முதலீடு செய்திருந்தனர். மார்ச் மாதத்தில் இந்த முதலீடு ரூ.45,981 கோடியாக இருந்தது. நடப்பு மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரூ.14,300.22 கோடி முதலீடு செய்திருந்தனர்.
- இதில் கடன் சந்தையில் ரூ.3,288.12 கோடி விலக்கிக் கொண்டனர். இதன்படி இந்த மாதத்தில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.11,012.10 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இறுதி வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டில் பெருமளவு, வெளியேற்றி வந்துள்ளனர்.
- இலங்கையில் நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வதந்திகள் பரவாமல் தடுக்க சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.
- இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்தது.
- பின்னர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.இன்றும், நாளையும் (ஏப்ரல் 22, 23) அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.