பிளஸ் 2 தேர்வில் 91.30% தேர்ச்சி: 1,281 பள்ளிகள் சதம்
- தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வினை பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்களாகவும் மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 மாணவ, மாணவிகள் எழுதினர்.
- இதில் ஒட்டுமொத்தமாக தற்போது 91.30 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2018) தேர்ச்சியுடன் (91.1 சதவீதம்) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 0.2 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
- தேர்வெழுதியவர்களில் 93.64 சதவீத மாணவிகளும், 88.57 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் கூடுதலாக 5.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- அதில் 1,281 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி அடைந்துள்ளன.
- பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் 95.37 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு 85.47 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
'முத்ரா' திட்டத்தில் வாராக்கடன்
- குறு, சிறு நிறுவனங்கள் பிணையின்றி சுலபமாக கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் மோடி, 2015, ஏப்., 8ல், 'பிரதம மந்திரி முத்ரா திட்டம்' என்ற நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதில், வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, 'சிஷூ, கிஷோர், தருண்' என, மூன்று பிரிவுகளின் கீழ், கடன் வழங்குகின்றன.
- இத்திட்டத்தில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் முதல், அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது.
- பெண்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் மேம்பாட்டிற்கான முத்ரா திட்டத்தில், இந்தாண்டு, மார்ச், 22 நிலவரப்படி, 2.73 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின், பிரதம மந்திரி முத்ரா திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளதை விட, குறைவாகவே உள்ளது. வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய, 'பேசல்' விதியில் நிர்ணயிக்கப்பட்டதை விட, முத்ரா திட்டத்தில் வாராக் கடன், 5 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளது.
- கடந்த, 2017 -- 18ம் நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இது, 2018- - 19ம் நிதியாண்டில், 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச், 22 வரை, இத்திட்டத்தில், 2.73 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு ஜனவரி இறுதி நிலவரப்படி, முத்ரா திட்டத்தில் வாராக்கடன், 11 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
- நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
- காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை(112), அனைத்து அவசர உதவிக்கும் அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முதன்முதலாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் இணைந்தது.
- நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் திட்டத்தில், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், குஜராத், நாகாலாந்து உள்பட 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டையூ மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.
தமிழகத்தில் 71.90 சதவீதம் வாக்குப்பதிவு
- மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 71.90 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காலை முதல் பொதுமக்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர்.
- இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி தருமபுரி முதலிடத்தில் உள்ளது. 56.34 வாக்குகள் பதிவாகி தென் சென்னை கடைசி இடத்தில் உள்ளது.
- 18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் 82.26 சதவீதம் வாக்குகள் பதிவாகி சோளிங்கர் முதலிடத்திலும் 64.14 சதவீத வாக்குகள் பதிவாகி பெரம்பூர் கடைசி இடத்திலும் உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
ண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக முதல் இந்தியப் பெண்
- உலகப் புகழ்பெற்ற அறிவியல் மையமான லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர்களுள் ஒருவராக, இந்தியாவிலிருந்து முதல் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டாக்டர்.கங்காதீப் காங்.
- இவரைத்தவிர, மும்பையைச் சேர்ந்த பத்மபூஷன் விருதுபெற்ற டாக்டர்.யூசுஃப் ஹமீத் கெளரவ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் தவிர்த்து, இதர 4 இந்தியர்களும், ராயல் சொசைட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இந்த ராயல் சொசைட்டியில், ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், மைக்கேல் ஃபாரடே, எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டோரோதி ஹாட்கின், ஆலன் டூரிங் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியான வணிகத்திற்கு தடைவிதித்த இந்தியா
- பாகிஸ்தானுடன் நடந்துவந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியான வணிகத்திற்கு தடை விதித்துள்ளது இந்தியா.
- இந்த வணிக வழியை, பாகிஸ்தானிலுள்ள வேண்டாத சக்திகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் மற்றும் கள்ளநோட்டு ஆகியவற்றை கடத்துவதற்கு பயன்படுத்துவதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தடை உத்தரவு ஏப்ரல் 19ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். காஷ்மீர் மாநிலத்தின் வழியே நடைபெறும் இந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வர்த்தகம், எல்லையோர கிராமங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார பொருட்களை வழங்குவதற்காக நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.