Type Here to Get Search Results !

குடிமராமத்து திட்டம்

குடிமராமத்து
  • பண்டைய தமிழர் வாழ்வியலின் ஓர் அங்கம் குடிமராமத்து. தனித்து வசிப்பது மேற்கத்திய கலாச்சாரம். சமூகமாக வசிப்பது இந்தியக் கலாச்சாரம். நமது முன்னோர்கள் சமூகமாக வசித்தார்கள். சமூகமாக வேலை பார்த்தார்கள். 
  • சமூகத்துக்காக வேலை பார்த்தார்கள். அவை ஒவ்வொன்றும் திருவிழாக்களைப் போல அமைந்தன. விதைப்பு, நடவு, அறுப்பு ஒவ்வொன்றும் ஒரு கொண்டாட்டம். அப்படியான கொண்டாட்டங்களில் ஒன்றுதான் குடிமராமத்து!
  • வடகிழக்குப் பருவ மழைக்குப் பிந்தைய பயிர் அறுவடை முடிந்ததும், தென்மேற்குப் பருவ மழை வரும் முன்பாக விவசாயப் பணிகள் சற்றே ஓய்ந்திருக்கும்.
  • கோடையின் தொடக்கக் காலத்தில் இதற்காகத் தெருத் தெருவாகத் தண்டோரா போட்டு, தேதியை அறிவிப்பார்கள். வீட்டுக்கு ஒரு நபர் ஏரியில் வேலை பார்க்க வர வேண்டும். முடியவில்லையெனில் கூலி ஆளை அனுப்ப வேண்டும். உள்ளூர் சூழலுக்கு ஏற்ப நிறைய விதி முறைகளும் விதிவிலக்குகளும் இருந்தன.



குடிமராமத்து வேலைகள்
  • ஏரியின் உட்பரப்பில் கரையின் உயரத்தைப் போல இரு மடங்கு தூரம் தள்ளி தூர் வாரத் தொடங்குவார்கள். உதாரணத்துக்கு, கரையின் உயரம் 10 மீட்டர் எனில் ஏரியின் உள்பகுதியில் 20 மீட்டர் தள்ளி தூர் வாருவார்கள். கரையின் அடிப்பகுதி பலவீனம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வார்கள். இதன் பெயர் ‘தாக்கு’ எடுப்பது. இப்படி எடுக்கப்படும் ஏரியின் மண், மழைக் காலத்தில் ஏரி அறுந்து ஓடியிருக்கும் பள்ளங்களில் முதலில் கொட்டப்பட்டு சமப்படுத்தப்படும்.
  • தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகள் கல் படுகைகளைக் கொண்டவை. மண் அரிப்பால் இந்தக் கல் படுகைகள் பல இடங்களில் பெயர்ந்திருக்கும். பெயர்ந்த கல் படுகைகளைத் தூக்கி, அங்கே மண்ணைக் கொட்டி மீண்டும் கல் படுகையைப் போட்டு சரிசெய்வார்கள். 
  • கரை பலவீனம் அடைந்திருக்கும் பகுதிகளில் ஏரியின் மண்ணைக் கொட்டி கரையைப் பலப்படுத்துவார்கள். இந்தப் பணிகளுக்கு போக மீதம் இருக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மண்பாண்டங்கள் செய்வோர், வீடு கட்டுவோர் மற்றும் ஊரின் இதர தேவைகளுக்கும் மண் வழங்கப்படும்.
  • அடுத்ததாக, ஏரியில் வளர்ந்திருக்கும் புதர்கள், முள் செடிகள், மழைக்காலத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள், உடைந்த மரங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவார்கள். இதன்பின்பு ஏரியின் உள்ளே வரும் நீர்வரத்துக் கால்வாய், மிகை நீர் வெளியேறும் வாய்க்கால்கள் தொடங்கி பாசனத்துக்கான பிரதான ‘அ’ கால்வாய்கள் தொடங்கி கடைமடை வயலுக்கு வரும் ‘எ’ மற்றும் ‘ஏ’ கால்வாய்கள் வரை மராமத்துப் பணிகள் நடக்கும்.
  • ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மதகுகள், கலுங்குகளில் இருக்கும் அடைப்புகள் நீக்கப்படும். 
  • இவைதான் குடிமராமத்தின் அடிப்படைப் பணிகள்.
திட்ட பணிகள்
  • நீர் வரத்து வாய்க்கால், கால்வாய்களில் இருக்கும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வாய்க்கால்கள், கால்வாய்களில் கொள்ளளவுக்கு அதிகமாகப் படிந்துள்ள மண்ணை அகற்றுதல், மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்குக் கட்டுமான அமைப்புகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகள் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.



செயல்படுத்தும் முறை
  • அந்தந்தப் பகுதி விவசாயச் சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பு மூலம் பணிகள் செயல்படுத்தப்படும். இவர்கள் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதத்தை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ வழங்க வேண்டும்.
  • மீதித் தொகையை அரசு வழங்கும். மேற்கண்ட பணிகளைப் பொதுப் பணித்துறை கண்காணிக்கும். ரூ.10 லட்சத்துக்கு அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நீர் வளத்துறையின் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு செயல்படுத்தப்படும்.
எவ்வாறு பயன் பெறுவது?
  • குடிமராமத்துத் திட்டம் மக்கள் பங்களிப்புடன் நடக்கும் திட்டம்தான். எனவே, தங்களது கிராமத்தில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க அந்த ஊரின் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், பெரியவர்கள் ஒரு குழுவாகத் திரண்டு கிராமப் பஞ்சாயத்தின் செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தும்படி எழுத்துபூர்வமாக வலியுறுத்தலாம். அவர்கள் மறுக்கும்பட்சத்தில் செயல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel