தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்
 • அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல்
 • அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல்
 • எந்த ஒரு குடிமகனுக்கும் பதிலளிக்கும் கடமை அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை உணரச் செய்தல்
 • அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த தகவலைப்பெற விரும்பும் குடிமக்களுக்கு அதைக் கொடுக்க வழிவகை செய்வதோடு லஞ்ச-ஊழலைத் தடுத்தல்.
தகவல் உரிமை என்றால் என்ன?
 • தகவல் உரிமை என்பது இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் கையிலோ அல்லது கட்டுப்பாட்டிலோ உள்ள தகவலைத் தெரிந்து கொள்ளும் மற்றும் தகவலைப் பெறும் உரிமையை குறிக்கும்.
 • அரசு அலுவலகத்திலுள்ள பணி ஆவணங்கள், பதிவேடுகளை மேலாய்வு செய்வதற்கு
 • ஆவணங்கள் அல்லது பதிவேடுகளின் குறிப்புகளை எடுத்தல், சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுதல்
 • பொருட்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல். (எ.கா. – அரசு கட்டிடம் கட்டும் போது சிமெண்ட் கலவை மாதிரிகளைப் பெறுதல்)
 • இப்படிப்பட்ட தகவலைக் கணினியில் அல்லது வேறு சாதனம் எதிலும் தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கும்பொழுது, அதனை குறுந்தகடுகள், ஒலி நாடாக்கள், ஒலி-ஒளிக்காட்சி நாடாப் பேழைகள், மின்னஞ்சல் அச்செடுப்புகள் அல்லது எந்த வடிவிலும் தகவலைப்பெறும் உரிமையும் இதில் அடங்கும். (எ.கா) ரேஷன் கடையில் எத்தனை குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதைக் கேட்பது தகவல் உரிமை.
தகவல் உரிமை எதற்காக?

 • இந்திய அரசியல் சாசன சட்டத்தின் விதி 19(1) பகுதியின் கீழ் தகவல் என்பது மக்களின் அடிப்படை உரிமையின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளிப்படையான மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு.
 • ஊழல் செய்பவர்களை அம்பலப்படுத்தவும் லஞ்சம் இல்லாமல் சேவையைப் பெறுவதற்கும் குடிமக்களுக்கு உதவுகிறது.
 • ரகசியக் காப்புச் சட்டம் 1923 அரசின் செயல்பாடுகளை மூடி மறைக்கின்றது. இதை மாற்றி மக்கள் பங்கேற்பை உறுதி செய்து மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்கப் பயன்படுகிறது.
 • இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான குறிக்கோள்களான சமத்துவம், சமூகநீதி, பாகுபடுத்தாமை, இறையாண்மை, வாழ்க்கைக்கான உரிமை, சுதந்திரம் போன்ற அம்சங்களை நிறைவேற்ற தகவல் உரிமை அவசியமாகிறது.என்னென்ன தகவல் கேட்கலாம்?

 • நாம் அரசிடம் எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.08 தேதியிட்ட (அரசாணை எண் 114) சொல்கிறது. அதன்படி நாம் கொடுத்த மனுவிற்கு பதில் தரவில்லை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பற்றிய காரணங்களைக் கேட்கலாம். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பரிந்துரைத்த அதிகாரியின் அறிக்கை நகல், வாக்குமூலங்களின் நகல்களைக் கேட்கலாம்.
 • அரசுத் துறைகள் தங்களுக்கு வந்த விண்ணப்பங்களுக்கு எத்தனை நாட்களுக்குள் சான்று கொடுக்க வேண்டும். அதற்கான கட்டணம் எவ்வளவு, செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய மக்கள் சாசன நகல்களைக் கேட்கலாம்.
 • அரசு ஆணைகள், அறிவுரைகள், சுற்றறிக்கைகள், வரைபடங்கள், படிவங்கள், விதிமுறைகள், நமக்கோ வேறு யாருக்கோ, உரிமம், அனுமதி, கடன், அரசு சலுகைகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டவற்றிற்கு (அ) மறுக்கப்பட்டமைக்கு ஆவண நகல்கள் மற்றும் தகவல்.
 • அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு அளித்த நிதியிலிருந்து செய்யப்பட்ட செலவுகளின் செலவுச் சீட்டுகள், மருத்துவமனைகளில் மருந்துகள், எக்ஸ்ரே படங்கள் போன்றவற்றின் இருப்பு, மருத்துவர்கள் இருப்பிடம், பணி நேரம் பற்றிய விவரங்கள்.
 • கணவன், மனைவி பணிப் பதிவேடுகளின் நாமினி விவரங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த விவரங்கள், குற்றப்பத்திரிகைகள், தண்டனைக்கோப்புகள், சம்பளப்பட்டியல் விவரங்கள், வாக்குமூல நகல்கள், அசையும், அசையா சொத்துகள் வாங்கிய விவரங்கள்.
 • வீட்டு வரி விதிப்பின் விதிமுறைகள், சாலை, பாலம், பிற கட்டிடங்கள், தெரு விளக்குகள், குழாய்கள், கிணறுகள் ஆகியவை எப்போது? எப்படி? யாரால்? எவ்வளவு நீளம் – அகலம்- பருமன் தன்மையில் அமைக்கப்பட்டது போன்ற விவரங்கள்.
 • கிராம சிட்டா அடங்கல் ‘அ’ பதிவேடு, நிலங்கள், கிராமத்தின் வரைபடம், சாகுபடிக் கணக்கு, நகராட்சியிலும், மாநகராட்சியிலும், கிராமத்திலும் – புறம்போக்கு நிலங்கள், மரங்கள், ஆக்கிரமிப்புகள், ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள், நீளம், அகலம், ஆழம், விஸ்தீரணம், பட்டா மாற்றம், பட்டாபிரிப்பு, நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தியது, கையகப்படுத்தப்போவது, அளிக்கப்பட்ட வீட்டுமனைப்பட்டா அந்த மக்களுக்கு உண்மையில் போய் சேர்ந்ததற்கான ஒப்புதல் சீட்டுகள், இன்றைய நிலையில் அவர்களுக்கு அளித்த அந்த மனை உள்ளதா? அதில் கட்டிடம் கட்டியது ஆகிய விவரங்கள்.
 • சாதிச்சான்று பெறும் முறைகள், பெறத் தேவையானவைகள், போலியான சாதிச்சான்றுகளைப் பெற்ற விவரங்கள், அதன் விசாரணை ஏடுகள் என பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை அனைத்தையும் கேட்கலாம்.தகவல் கொடுக்க வேண்டியவர்கள்?

 • பொது அதிகார அமைப்பு: அதாவது அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள், வாரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட உரிய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்.
 • அரசுக்கு சொந்தமான கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மற்றும் அரசால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கணிசமாக நிதி வழங்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்களும் ஆகும்
என்னென்ன முறையில் தகவல் பெறலாம்

 • மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அரசின் பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலிருந்து ஆவணங்கள், மற்றும் பதிவேடுகளைப் பெறலாம், பார்வையிடலாம்.
 • குறிப்பெடுக்கலாம், பக்கங்களை நகலெடுக்கலாம், ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் சான்றிட்ட நகல்களைப் பெறலாம்.
 • சான்றிட்ட பொருள் மாதிரிகள், உருவமாதிரிகள் பெற்றிடலாம்.
 • சி.டி., ஃப்ளாப்பிகள், டேப்புகள், வீடியோ கேசட்டுகள் அல்லது வேறு வகையான மின்னணு வழிகளில் பெறலாம், அல்லது அத்தகு மின்னணு சாதனங்களில் இருந்து அச்சு எடுத்திடலாம்.
தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள்

 • தகவல் பெறுவதற்காக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வழி அமைத்துத்தரும் பொருட்டு, இணையம் உள்ளிட்ட பல்வேறு தகவல் வழியாகவும், முறையான கால இடைவெளிகளில் ஒவ்வொரு அரசு அலுவலகமும் தாமாகவே முன்வந்து தகவல் வழங்க வேண்டும் ( த.பெ.உ..சட்டம் 4(2)).
 • ஒவ்வொரு தகவலும் விரிவான முறையில் தரப்படவேண்டும். பொதுமக்கள் எளிதில் அணுகிப் பெறக்கூடிய வடிவிலும், முறையிலும், தகவல் இருக்கும்படி செய்ய வேண்டும் (த.பெ.உ.சட்டம் 4(3))
 • கணினிப்படுத்துவதற்குப் பொருத்தமான எல்லாப் பதிவேடுகளையும் கிடைக்கக்கூடிய வள வாய்ப்புகளுக்கு உட்பட்டு நியாயமான காலத்திற்குள் கணினிப்படுத்தவேண்டும்.
 • இத்தகைய பதிவேடுகளை எளிதில் அணுகிப் பெறக்கூடியவாறு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
 • செலவுச் சிக்கனம், உள்ளூர் வழிமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எல்லா விவரப் பொருள்களும் பரப்பப்படவேண்டும். பரப்புதல் என்பது அறிவிப்புப் பலகைகள், செய்தியேடுகள், பொது அறிவிப்புகள், ஊடகப் பரப்பல்கள், இணையம் அல்லது வேறு எந்த வழியிலும் தகவல் அறியத்தருதல் அல்லது பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்தல் என்பதைக் குறிக்கும்.
தகவலை யாரெல்லாம் கேட்கலாம்?

 • இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் தகவலைக் கேட்டுப்பெறலாம். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் கேட்கலாம். (பிரிவு–3) வெளிநாட்டினர் இச்சட்டப்படி தகவல் கேட்க முடியாது.
 • தகவல் கேட்கும்போது அதிகாரிகளிடம் அதற்கான காரணம் சொல்லத் தேவையில்லை. அதிகாரிகளும் மனுதாரரிடம் காரணம் கேட்கக்கூடாது (பிரிவு6(2)).

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel